ஜம்மு - காஷ்மீர் என்றதுமே பனிப்போர்வை போர்த்திய பகுதி, கண்ணுக்கு விருந்தளிக்கும் சுற்றுலாத் தலம், இயற்கை எழில் கொஞ்சும் அழகுகொண்ட பகுதிதான் ஒரு காலத்தில் நினைவுக்கு வரும். தற்போது ஜம்மு - காஷ்மீர் என்றால் பலருக்கும் நினைவுக்கு வருவது பதற்றம் நிறைந்த சூழல், பயங்கரவாதம், குண்டுவெடிப்பு, துப்பாக்கிச்சூடு, போர்க்களம் என்பதுதான். ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370, கடந்த 2019, ஆகஸ்ட் மாதம் நீக்கப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர், இரு தனித் தனி யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது.ஜம்மு - காஷ்மீர்
சிறப்பு அந்தஸ்து வழங்கும் பிரிவு 370 நீக்கப்பட்ட பின்னர் ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்பாடுகள் கணிசமாகக் குறைந்திருப்பதாகக் கூறப்பட்டுவந்தது. இந்தநிலையில், அங்கு ட்ரோன்கள் மூலம் ராணுவத் தளவாடங்கள் மீது தாக்குதல்கள் நடைபெற்றிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கும் தீவிரவாத அமைப்புகளுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவின் உளவுத்துறை அமைப்பு ரகசிய விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் எல்லையிலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜம்மு விமான நிலையத்துக்குள் இந்திய விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. இங்கு கடந்த ஜூன் 27-ம் தேதி அதிகாலை 1:40 மணியளவில் அடையாளம் தெரியாத இரண்டு ட்ரோன்கள் விமானப்படைத் தளப் பகுதிக்கு வந்தது. முதல் ட்ரோன் விமானப்படைத் தளத்தின் தொழில்நுட்ப கட்டடத்தின் மேற்கூரையில் விழுந்து வெடித்தது. சிறிது நேர இடைவெளியில் மற்றொரு ட்ரோனும் கீழே விழுந்து சிதறியது, இந்தத் தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்களுக்குக் காயம் ஏற்பட்டது.ஜம்மு விமானப்படை தளம்
இந்த ட்ரோன்களில் வீரியம் குறைந்த வெடிபொருள்கள் இருந்ததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில், ஜி.பி.எஸ் உதவியுடன் அருகிலுள்ள பகுதிகளிலிருந்துதான் இந்தத் தாக்குதல் நடைபெற்றிருக்கக்கூடும் என்றும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், அங்கிருந்த விமானங்களின் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ஜம்மு-காஷ்மீர் காவல்துறை விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது.
தாக்குதல் நடைபெற்ற அடுத்த நாளிலிருந்து இதுவரை மொத்தம் ஒன்பது முறை ட்ரோன்கள் தென்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு முறை காஷ்மீர் பகுதிகளிலும், ஏழு முறை ஜம்மு பகுதிகளிலும் ட்ரோன்கள் தென்பட்டுள்ளன. தொடர்ந்து ட்ரோன்கள் தென்படுவது அந்தப் பகுதிகளில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், ராணுவப் பகுதிகள் மற்றும் எல்லைகளில் பாதுகாப்பும் கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக தேசியப் பாதுகாப்பு முகமை ரகசிய விசாரணையை வேகப்படுத்தியுள்ளது.ட்ரோன்
இந்த வகை ட்ரோன்கள் ரிமோட் கொண்டு இயக்கப்படுவது உறுதிசெய்யப்பட்டதால், ஜாமர்கள் கொண்டு ட்ரோன்களைச் செயலிழக்கவைக்கும் நடவடிக்கைகளையும் ராணுவம் எடுத்துவருகிறது. இந்த வகை ட்ரோன்களை பாகிஸ்தான் ராணுவமும் தீவிரவாத அமைப்புகளும் பயன்படுத்திவந்ததாகவும், இவை சீனாவில் தயாரிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும், எல்லைகளில் கடத்தல் செயல்பாடுகளுக்கும் ட்ரோன்களைப் பயன்படுத்திவந்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கையாக ட்ரோன்களுக்கு எதிராகச் செயல்படும் கருவி, ஜம்மு விமான தளத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்தக் கருவி, ட்ரோன் வருவதை அலைவரிசைகள் மூலம் கண்டறியும் தன்மைகொண்டது. மேலும் அதிக திறன்கொண்ட ஜாமர்களும் பொருத்தப்பட்டுள்ளன என்றும் ராணுவ வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது இதுவே முதன்முறை. இந்தத் தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் தயார்நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோவ்ரி மாவட்டத்தில் ட்ரோன்களை பறக்கவிடத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இராக் போரின்போது அமெரிக்க ராணுவத்தின் மீது தீவிரவாத அமைப்புகள் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலைத் தடுக்க அந்த ராணுவம் கடும் சிரமப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்தியாவின் மீதும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடைபெறுவது ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது.
http://dlvr.it/S2v3P1
Friday, 2 July 2021
Home »
» ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து தென்படும் ட்ரோன்கள்... என்ன நடக்கிறது அங்கே?