மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக, கடந்த ஜூலை 12-ம் தேதி சென்னையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் டில்லி சென்று மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது தொடர்பாக டெல்டா விவசாயிகள் மத்தியில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்தப் பிரச்னையில் தமிழக அரசு, விவசாயிகளை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், மத்திய அரசை நேரில் சந்தித்து வலியுறுத்த விவசாயிகளை அழைக்காதது பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் எனவும் ஆதங்கப்படுகிறார்கள்.மேக்கேதாட்டூ
Also Read: `விவசாயிகள் இல்லாமல் மேக்கேதாட்டூ ஆலோசனை கூட்டமா?' - வலுக்கும் ஆதங்க குரல்கள்!
கர்நாடக அரசு, காவிரியின் குறுக்கே, மேக்கேதாட்டூ அணை கட்டுவதை தடுக்க, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்துக்கட்சித் தலைவர்களை அழைத்து ஆலோசனை நடத்த வேண்டும் என காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சங்கத் தலைவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தார்கள். ஆனால், தமிழக அரசோ, தமிழ்நாடு சட்டப் பேரவையில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களை மட்டுமே அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தியது. இக்கூட்டத்தில் பேசிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், ``மேக்கேதாட்டூ அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம்; இதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. காவிரி விவகாரத்தில் தமிழகமும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஒன்றுபட்ட ஒரே சிந்தனையுடன் இருக்கின்றன என்பதை கர்நாடகாவுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் உணர்த்தியாக வேண்டும். காவிரி உரிமைக்காக நாம் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம்.
வழக்கமான காலத்திலேயே நமக்குத் தரவேண்டிய நீரை கர்நாடகம் வழங்குவதில்லை. காவிரி என்பது கர்நாடகத்துக்கு மட்டுமல்ல, தமிழகத்துக்கும் முழு உரிமை உள்ளது. காவிரி இறுதித் தீர்ப்பின் மூலம் 3 வகைகளில் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கிறது. அதில் இரண்டு பகுதிகள் ஏற்கெனவே கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. மூன்றாவதாக தமிழகத்துக்கு நேரடியாக தண்ணீர் வரும் வகையில் எந்த கட்டுப்பாடும் இல்லாத நிலை உள்ளது. தற்போது அந்த நீரையும் தடுக்கும் சதிதான் மேகேதாட்டு அணை திட்டமாகும்.மேக்கேதாட்டூ அணை அமையவிருக்கும் இடம்
Also Read: மேக்கேதாட்டூ விவகாரம்: தொடங்கும் போராட்டங்கள்; ஆயத்தமாகும் டெல்டா விவசாயிகள்!
மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதை கைவிடுமாறு கர்நாடக அரசுக்கு அறிவுறுத்தும்படி பிரதமரிடம் நான் நேரிலும் மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனும் சந்தித்து வலியுறுத்தினோம். காவிரி பிரச்சினை என்பது அரசியல் பிரச்னை அல்ல. தமிழக மக்களின் வாழ்வுரிமை பிரச்னை. இதில் தமிழகம் ஒரே சிந்தனையில் நிற்கிறது என்பதை நாம் காட்டியாக வேண்டும். மேக்கேதாட்டூ அணையை எந்தச் சூழலிலும் அனுமதிக்க மாட்டோம். அதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது" எனப் பேசினார்.
இக்கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, வீடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள். இக்கூட்டத்தில், மேக்கேதாட்டூ அணை கட்ட கர்நாடக அரசு மேற்கொள்ளும் முயற்சிகளை தடுக்க தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சித் தலைவர்களும் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்தனர். இக்கூட்டத்தில் கர்நாடக அரசின் முயற்சிக்கு கண்டனம் தெரிவிப்பது என்றும், தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் டெல்லி சென்று மத்திய அரசிடம் நேரில் வலியுறுத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், ``மேக்கேதாட்டூ விவகாரம் என்பது விவசாயிகளின் ஜீவாதாரப் பிரச்னை. இது தொடர்பாக தமிழகத்தில் உள்ள, குறிப்பாக டெல்டா விவசாயிகளை தமிழக முதலமைச்சர் நேரில் அழைத்து கலந்தாலோசிப்பது, அவரது தார்மீக கடமையாகும். தமிழக விவசாயிகளை டெல்லி அழைத்துச் சென்று, பிரதமரிடம் நேரில் வலியுறுத்த வைப்பதும் தமிழக முதலமைச்சரின் தார்மீக பொறுப்பாகும். ஆனால் இதை அவர் செய்ய மறுப்பது திகைப்பாக உள்ளது. ஒன்றிணைவோம் வா, ஒருங்கிணைந்து செயல்படுவோம், உரிமைக்கு குரல் கொடுப்போம் என்றெல்லாம் மேடைகளில் முழங்கி வருகிறார். ஆனால் மேக்கேதாட்டூ பிரச்னையில் விவசாயிகளை ஒருங்கிணைக்காமல், ஒதுக்கி வைக்கிறார். இது வருத்தத்திற்குரிய செயலாகும். விமல்நாதன்
கர்நாடகாவில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், காவிரிப் பிரச்னை தொடர்பாக, பிரதமரைச் சந்திக்கும் போதெல்லாம், அங்குள்ள விவசாயிகளை அழைத்துச் சென்று வலியுறுத்துகிறார்கள். 2004-ம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா, காவிரிப் பிரச்னை தொடர்பாக, தமிழக விவசாயிகள் பிரதமரைச் சந்திக்க ஏற்பாடு செய்தார். மேக்கேதாட்டூ பிரச்னையில் தமிழக முதல்வர், இங்குள்ள உழவர்களைத் தவிர்த்து செயல்பட்டால், அது ஆக்கப்பூர்வமாக இருக்காது. எனவே பிரதமரைச் சந்திக்க, விவசாயிகளையும் அழைத்து செல்லச் வேண்டும்’’ என வலியுறுத்தினார்.
http://dlvr.it/S3lWvf
Thursday, 15 July 2021
Home »
» மேக்கேதாட்டூ: `ஒன்றிணைவோம் வா எனச் சொன்ன முதல்வர், எங்களை ஒதுக்கியது ஏன்?' - விவசாயிகள் ஆதங்கம்