கர்நாடகாவின் புதிய முதல்வராக, கடந்த அமைச்சரவையில் உள்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்த பசவராஜ் பொம்மை இன்று காலை பதவியேற்றார். பா.ஜ.க மூத்த தலைவர் எடியூரப்பா, கடந்த 26-ம் தேதி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய, அடுத்த முதல்வர் யார் என்கிற பரபரப்பு தொற்றிக்கொண்டது. புதிய முதல்வருக்கான ரேஸில் தேசிய பொதுச்செயலாளர்கள் பி.எல்.சந்தோஷ், சி.டி.ரவி, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, கர்நாடக அமைச்சர் முருகேஷ் நிரானி, பசவராஜ் பொம்மை ஆகிய பெயர்கள் அடிபட்டன.பசவராஜ் பொம்மை
இந்தநிலையில், புதிய முதல்வரைத் தேர்வு செய்வதற்கான பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் கூட்டம், நேற்று மாலை பெங்களூருவில் நடைபெற்றது. இதில் பா.ஜ.க மேலிடப் பார்வையாளர்களாக மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், கிஷண் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இறுதியாக, பசவராஜ் பொம்மை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இன்று காலை, அவர் முதல்வராகவும் பதவியேற்றுக்கொண்டார். லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த பசவராஜ் பொம்மை, எடியூரப்பாவின் ஆதரவாளராக அறியப்படுகிறார். இவரின் தந்தை எஸ்.ஆர் (சோமப்பா ராயப்பா) பொம்மை கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் மட்டுமல்ல, முக்கியமான வரலாற்றுக்கும் சொந்தக்காரர். அது என்ன வரலாறு என்பதை விரிவாகப் பார்ப்போம்.
ஆர்டிக்கிள் 356...ஆட்சிக் கலைப்பு!
ஒரு மாநில ஆட்சியானது அரசியல் அமைப்புச் சட்டத்தின் அம்சங்களின் அடிப்படையில் செயல்படாத அல்லது செயல்பட இயலாத நிலையில் உள்ளதாக ஆளுநர் அறிக்கை அளித்தாலோ அல்லது வேறு வகையில் தெரிய வந்தாலோ 356-வது சட்டப்பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் பிரகடனம் செய்யலாம். அப்படி இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில்கூட, கருணாநிதியின் ஆட்சி இரண்டு முறையும் எம்.ஜி.ஆரின் ஆட்சி ஒருமுறையும் ஜானகியின் ஆட்சி ஒருமுறையும் என நான்குமுறை ஆட்சிக் கலைப்பு நிகழ்ந்திருக்கிறது. நியாயமான காரணங்கள் இல்லாத நிலையிலும்கூட அரசியல் காரணங்களுக்காக, பழிவாங்கும் விதமாக எதிர்க் கட்சிகளின் ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. இந்தநிலையில், எஸ்.ஆர் பொம்மை உச்சநீதிமன்றத்தில் தொடுத்த ஒரு வழக்கில் கிடைத்த தீர்ப்புதான், மத்தியில் ஆள்பவர்கள் தங்களின் விருப்பங்களுக்கேற்ப மாநிலங்களின் ஆட்சியைக் கலைப்பதில் இருந்து விடுதலை பெற்றுத் தந்தது.கருணாநிதி - எம்.ஜி.ஆர்
அது என்ன வழக்கு?
கர்நாடகாவில் 1985-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ராமகிருஷ்ண ஹெக்டே முதல்வரானார். மூன்றாண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து விலக, எஸ்.ஆர் பொம்மை முதல்வரானார். இந்தநிலையில், 1988 செப்டம்பர் மாதம், ஜனதா கட்சியுடன், லோக் தளம் என்ற கட்சியும் இணைந்து ஜனதா தளம் என்கிற புதிய கட்சி உருவானது. அதனால், ஏற்கெனவே சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருந்த பொம்மைக்கு மேலும் 13 உறுப்பினர்களின் ஆதரவும் கிடைத்தது. இந்தநிலையில், ஜனதா தளத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.மொலகேரி ''பொம்மை அரசின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுகிறோம்'' என ஆளுநரைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் 19 சட்டமன்ற உறுப்பினர்களின் கையெழுத்தும் இருந்தது.
அதனை ஏற்ற ஆளுநர், பொம்மை சட்டசபையில் பெரும்பான்மையை இழந்து விட்டதால், அவரது ஆட்சியைக் கலைத்து விடலாம் என்று குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தார். ஆனால், கே.ஆர். மொலகேரி குறிப்பிட்ட உறுப்பினர்கள், தாங்கள் கட்சி மாறவில்லை என மறுத்தனர். இதனையடுத்து, எஸ்.ஆர். பொம்மை சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு கேட்டார். ஆனால், அதனை கணக்கில் கொள்ளாமல், 1989 ஏப்ரலில், குடியரசுத் தலைவர் வெங்கட்ராமன், பொம்மையின் அரசைக் கலைத்தார். கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. குடியரசுத்தலைவர் உத்தரவை எதிர்த்து பொம்மை தொடர்ந்த வழக்கு கர்நாடக உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட, அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இதேபோல், நாகலாந்து(1988), மேகாலயா(1991) மாநில அரசுகளும் பல்வேறு காரணங்களுக்காக கலைக்கப்பட்டன. 1991-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்துக்குப் பின் நிகழ்ந்த கலவரங்களுக்குக் காரணமான இந்துத்துவ அமைப்புகளைத் தடை செய்யாததைக் காரணம் காட்டி மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேச பா.ஜ.க அரசுகளும் கலைக்கப்பட்டன. பாபர் மசூதி இடிப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு!
எஸ்.ஆர் பொம்மையின் வழக்கோடு, மேற்கண்ட ஆட்சி கலைக்கப்பட்ட மாநிலங்களின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்குகளும் ஒன்றாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. 1994-ம் வருடம் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை நீதிபதி குல்தீப் சிங் தலைமையில் ஒன்பது நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு பெஞ்ச் விசாரித்தது. அந்த விசாரணையின் முடிவில், 'பொம்மையின் அரசைக் கலைத்தது செல்லாது' என்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் பின்வரும் முக்கிய சட்ட விளக்கங்கள் இடம் பெற்றிருந்தன.
*அரசியல் சட்டப் பிரிவு 356-ன் கீழ் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரமானது நிபந்தனைகளுக்கும் மேற்பார்வைக்கும் உட்பட்டது.
* மத்திய அமைச்சரவையானது, மாநில அரசைக் கலைக்க குடியரசுத் தலைவருக்கு செய்யும் பரிந்துரைகள் நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் வராவிட்டலும் அப்பரிந்துரையானது எதன் அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை ஆராயும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு உண்டு.
* அரசியலமைப்புச் சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது என்று கருதப்பட்டால், கலைக்கப்பட்ட அரசை மீண்டும் பதவியில் அமர்த்தும் உரிமை நீதிமன்றத்திற்கு உண்டு.
* இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்படும் மாநில அரசுகளைக் கலைக்கும் உரிமை மத்திய அரசுக்கு எப்போதும் உண்டு.எடியூரப்பாவுடன் பசவராஜ் பொம்மை
இந்தத் தீர்ப்பு வெளியான பிறகு சீட்டுக்கட்டைக் கலைப்பதுபோல மாநில அரசுகளின் ஆட்சியைக் கலைப்பது வெகுவாகக் குறைந்துவிட்டது. எமெர்ஜென்சி என்றவுடன் எப்படி ஜெயபிரகாஷ் நாராயணன் பெயர் நினைவுக்கு வருகிறதோ, அப்படி ஆட்சிக் கலைப்பு குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம் எஸ்.ஆர்.பொம்மையின் பெயரும் நினைவு கூறப்படுகிறது.
http://dlvr.it/S4c3H5
Thursday, 29 July 2021
Home »
» கர்நாடகா: புதிய முதல்வர் பசவராஜ் பொம்மையின் தந்தை எஸ்.ஆர் பொம்மையும்; ஆட்சிக் கலைப்பு வழக்கும்!