``தமிழகத்தின் கொரோனா நிலவரத்தைக் காண, 17.07.2021 தேதியோடு 18.07.2021-ம் தேதியை ஒப்பிடுகையில் ஒன்பது மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. மேலும் இரண்டு மாவட்டங்களில் (தர்மபுரி,புதுக்கோட்டை) ஒப்பிடுகையில் ஒருவர் மட்டுமே பாதிப்பு எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்பது மிகவும் முக்கியம். ஆக,11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எச்சரிக்கை தரும் நிலையில் உள்ளது எனக் கொள்ளலாம். (குறிப்பாக, 17.07.2021 தேதியோடு ஒப்பிடுகையில் ஏறக்குறைய 2,300 பேருக்குப் பரிசோதனைகள் குறைவாகச் செய்யப்பட்டுள்ளது.)மருத்துவர் புகழேந்தி
பல நாட்களுக்குப் பிறகு தலைநகர் சென்னையில் குணமடைந்து செல்பவர்களின் எண்ணிக்கை, தொற்று ஏற்படுபவர்கள் எண்ணிக்கையை விடக் குறைவாகப் பதிவாகியுள்ளது. இந்த போக்கும் நல்ல செய்தியல்ல. அதன் காரணமாக, சிகிச்சையில் இருப்பவர்களின் (Active cases) எண்ணிக்கை அதிகரித்து வருவது (1632-ல் இருந்து 1663-ஆக) கவலைக்குரியது.
சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தும் (10 பேர்), செங்கல்பட்டில் ஆறு பேர் குறைந்தும், திருவள்ளூரில் நான்கு பேர் மட்டும் குறைவாகப் பாதிக்கப்பட்டிருப்பதும், நோய்ப் பாதிப்பு சரிவரக் குறையவில்லை என்பதையும், கூடுவதற்கான வாய்ப்பு நிறைய உள்ளதையும் சுட்டிக்காட்டுவதாக உள்ளது. வடக்கிலிருந்து தெற்காகச் சென்னை(13), மதுரை(2), திருநெல்வேலி(6) அதிகரித்து வரும் போக்கு நல்ல விசயமல்ல. திருச்சியிலும் மூன்று பேர் மட்டுமே குறைவாகப் பாதிக்கப்பட்டிருப்பது பரிசோதனை எண்ணிக்கை குறைவாக இருப்பது காரணமாக இருக்கலாம். ஆக வடக்கிலிருந்து தெற்கு வரை பாதிப்பு அதிகமாக வாய்ப்பு நிறைய உள்ளது.கொரோனா பாதிப்பு
அமெரிக்க நோய்த்தடுப்பு நிபுணர் கிறிஸ்டோபர் முர்ரே சொல்வது போல் தடுப்பூசி அதிகம் போடப்பட்டு வரும் சூழலில், நோய் பரவலை அது அதிகம் தடுக்காது என்பது மட்டுமன்றி, தடுப்பூசி போடப்பட்டதால் தளர்வுகளை அதிகரிக்கும் வேளையில் அது டெல்டா வகை வைரஸ் பரவ காரணமாக இருந்து விடும் அறிவியல் உண்மையை நாம் மறக்கலாமா? இந்தியாவிலும்(86%), தமிழகத்திலும் தடுப்பூசி போட்டும் ஏற்படும் கொரோனா பாதிப்பிற்கு (Breakthrough infection) டெல்டா வகை வைரஸ் முக்கிய காரணமாக இருப்பதை நாம் மறக்கக்கூடாது.
மூன்றாம் அலையைத் தடுக்க அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்?
1. எங்குப் பாதிப்பு அதிகரிக்கிறதோ அல்லது குறையாமல் தேக்க நிலையில் உள்ளதோ, அங்குப் பரிசோதனைகளை உரிய மக்களிடத்து அதிகரித்து நோயை ஆரம்பத்தில் கண்டறிந்து தனிமைப்படுத்தி உரியச் சிகிச்சை அளிக்க வேண்டும்.
2. மூலக்கூறு ஆய்வுகளை அதிகப்படுத்தி உருமாற்றம் அடைந்த கொரோனாவை ஆரம்பத்தில் கண்டறிந்து கட்டுப்பாட்டுப் பகுதிகளை உருவாக்க வேண்டும்.(Micro containment zone)
3. எங்கு பாதிப்பு அதிகமாகிறதோ அங்குத் தளர்வுகளை அறிவிக்காமல், நோய் பரவலுக்கு எவை முக்கியமாகத் துணைபோகின்றன என்பதைக் கண்டறிந்து அதைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.(உதாரணம்: தமிழகத்தில் நோய் பரவலுக்கு 4 முக்கிய காரணங்கள் கண்டறியப்பட்டன.
1.சந்தைகளில் கூட்டம், 2.பொது போக்குவரத்தில் நெரிசல், 3.பெரும் தொழிற்சாலைகள், நிறுவனங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படாமல் மக்கள் விதிகளைப் பின்பற்றாமல் இருப்பது, 4.அரசியல், மத, கலாச்சார விழாக்களில் கூட்ட நெரிசல்) மேற்கூறப்பட்ட விசயங்களைத் தவிர்க்க நிச்சயம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.டி.நகர் மக்கள் கூட்டம்
4. விதிகளை அறிவிப்பதோடு நின்றுவிடாமல், மக்கள் அதை கடைப்பிடிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.(உதாரணம்: பேருந்துகளில் 50% பயணிப்பது)
5. அரசு உத்தரவு போடுவதை நிறுத்தி மக்களிடம் நோய்த்தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
6. அனைத்து புள்ளிவிவரங்களையும் வெளிப்படைத் தன்மையுடன் கையாள வேண்டும்.(உதாரணம்: பாதிப்பு இருக்குமிடத்தில் அனைவருக்கும் புள்ளிவிவரங்கள் போய்ச் சேர வேண்டும்.)
மக்கள் செய்ய வேண்டியது:
1. கூட்டம் கூடுவதைத் தவிர்த்து சமூக இடைவெளி முகவுறை முறையாக அணிதல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். தனக்கு வரும் பாதிப்பால் தனது குடும்பத்தினர், பிறருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டு குடும்பத்திற்கும், நாட்டிற்கும் சுமையாக மாறுவது மட்டுமல்லாமல், உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்து விடலாம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
2. அறிகுறிகள் தென்படும்போது ஆரம்ப நிலையில் அரசுக்கு/மருத்துவர்களுக்குத் தெரியப்படுத்தி உரிய/தேவையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.
3. அரசின் தடுப்பு திட்டங்களை அறிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.சமூக இடைவெளி
கொரோனா போன்ற அறிவியல் பிரச்னைகளுக்கு, மருத்துவர்கள் தான் அறிவியல்ரீதியான தீர்வுகளைக் கொடுக்க வேண்டும். அரசு அதைச் செய்யத் தவறும் பட்சத்தில் அதை அரசுக்கு மக்கள் நலன் கருதி அரசுக்கு உணர்த்த முன்வர வேண்டும். கேரளாவில் Sero positivity 11% என உள்ளபோது, பெரும்பாலான மக்கள் வைரஸின் தொடர்பில் இல்லாததால் மேற்கொண்டு வைரஸ் பரவ அது ஏதுவாக அமைந்து விடும் என்ற உண்மையை உணர்ந்து கேரள இந்திய மருத்துவ கழகம் (IMA) செயல்படுவது பிற மாநிலங்களுக்கும் ஒரு முன் உதாரணம். கேரள அரசு பக்ரீத் பண்டிகையை ஒட்டி தளர்வுகளை அறிவித்ததற்கு அம்மாநில இந்திய மருத்துவ கழகம் கண்டனம் தெரிவித்ததோடு, தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை சென்று தடை ஆணை வாங்குவோம் எனக் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது.ஊரடங்கு தளர்வு
இத்தகைய இக்கட்டான சூழலில் தமிழக அரசு கூடுதல் தளர்வுகளை 19.7.21. அன்று முதல் அமல்படுத்துவது எப்படி அறிவியல்ரீதியாக சரியாக இருக்கும். தளர்வுகள் சரியாகக் கண்காணிக்கப்படாத இச்சுழலில் நோய்த்தொற்றை அது அதிகப்படுத்தாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையல்லவா? அரசு /மக்கள் விழித்துக் கொண்டு முன்னெச்சரிக்கையுடன் 3-ம் அலையைத் தடுக்க வேண்டாமா? தளர்வுகளை அதிகப்படுத்துவதை மறுபரிசீலனை செய்யுமா தமிழக அரசு!?
-கல்பாக்கம் மருத்துவர்.வீ.புகழேந்தி
http://dlvr.it/S45K6x
Tuesday, 20 July 2021
Home »
» கொரோனா பரவல் சூழலில் தமிழக அரசின் கூடுதல் தளர்வுகள் அறிவியல் ரீதியாக சரியானதா?! -அலசும் மருத்துவர்