'' மேக்கேதாட்டுவில் ஒரு செங்கல் கட்டுவதற்குக்கூட தமிழ்நாடு பாஜக அனுமதிக்காது'' என தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது.
கர்நாடக முதல் அமைச்சராக இருந்த எடியூரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, புதிய முதல்வராக, அம்மாநில உள்துறை அமைச்சராகப் பொறுப்புவகித்த பசவராஜ் பொம்மை பதவியேற்றார். பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணையைக் கட்டியே தீருவோம்'' என உறுதியாகத் தெரிவித்தார். கர்நாடக முதல்வரின் இந்தப் பேச்சுக்கு, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்,. மேலும், தமிழக பா.ஜ.க சார்பில், ஆகஸ்ட் ஐந்தாம் தேதி தஞ்சாவூரில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவித்துள்ளார். பசவராஜ் பொம்மை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கர்நாடக அரசு மேக்கேதாட்டுவுக்குக் குறுக்கே அணை கட்டியே தீருவோம் என்று தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா கூறிய கருத்தையே புதிதாக பொறுப்பேற்றிருக்கும் இன்றைய முதல்-மந்திரியும் வலியுறுத்தி இருக்கிறார். இரு மாநிலங்களுக்கும் இடையே உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் அணை கட்டுவதற்கு வாய்ப்பே இல்லை என்பது உறுதி. மேலும் நமது பிரதமரோ, நீர்வளத்துறை மந்திரியோ, கர்நாடகா அணை கட்டிக்கொள்ள எந்தவொரு அனுமதியும் வழங்கவில்லை. தொடர்ந்து தமிழக உரிமைக்கு எதிராக அணை கட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் கர்நாடக அரசு, அதனைக் கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி தஞ்சையில் ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத அறப்போராட்டம் நடைபெற இருக்கிறது. அதற்கு நான் தலைமை தாங்குகிறேன். தஞ்சை மற்றும் காவிரி டெல்டா பகுதி விவசாயப் பெருமக்களும், விவசாய சங்கத்தலைவர்களும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ''அண்ணாமலையின் இந்த போராட்ட அறிவிப்பு வெறும் கண்துடைப்புதான். மத்திய அரசு அணை கட்டுவதற்கான அனுமதிகளை ஒருபுறம் கொடுத்து வருகிறது. இங்கே தமிழக பா.ஜ.கவினர் நம்மைத் திசைதிருப்ப போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள்'' எனக் கடுமையாகச் சாடுகிறார், காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளரான பெ.மணியரசன். அவர் பேசும்போது,
''அண்ணாமலை மிகச்சிறந்த நாடக நடிகர். டெல்லியில் எழுதப்பட்ட ஸ்கிரிப்ட்டுக்கு அழகாக நடித்துக் கொண்டிருக்கிறார். காவிரி விவகாரத்தில், கர்நாடக அரசை நீங்கள் எதிர்ப்பதுபோல் நடந்துகொண்டால்தான் தமிழ்நாட்டில் கட்சியை நடத்த முடியும் என அவருக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார்கள். அதேவேளை, அணை கட்ட அனுமதி கொடுப்பதற்கான வேலைகளையும் மத்திய பா.ஜ.க அரசு செய்து வருகிறது. நாங்கள் இந்தக்குற்றச்சாட்டை போகிற போக்கில் முன்வைக்கவில்லை. பா.ம.க.வின் இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேக்கேதாட்டு அணை குறித்து மாநிலங்களவையில் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய அரசின் நீராற்றல் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் அளித்த பதிலில் இருந்துதான் தெரிந்துகொண்டோம். பெ.மணியரசன்
அதாவது, 2018-ல் மேக்கேதாட்டுவில் அணை கட்ட அனுமதி கோரி ஒன்றிய நீராற்றல் துறை அமைச்சகத்துக்கு, கர்நாடக அரசு ஒரு கடிதம் எழுதுகிறது. அப்போது, சாத்தியக்கூறு அறிக்கைகளை அனுப்புமாறு நீராற்றல் துறை, கர்நாடக அரசுக்கு உத்தரவிட, அதையும் கர்நாடக அரசு அனுப்புகிறது. அதனை ஏற்றுக்கொண்ட நீராற்றல் துறை அமைச்சகம், அணைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்து அனுப்புமாறு கேட்கிறது. அதனையும் கர்நாடக அரசு தயாரித்து அனுப்ப, அதனை காவிரி மேலாண்மை வாரியத்துக்கு அனுப்பி, தொடர்புடைய மாநிலங்களின் ஒப்புதலைப் பெறுமாறு கோரியிருக்கிறது. மேக்கேதாட்டுவில் அணை கட்டுவதற்கு எதிராக, தமிழ்நாடு சட்டசபையின் தீர்மானம் இருக்கும்போது, அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயார் செய்யச் சொன்னது எந்தவகையில் நியாயம். அடுத்தக்கட்டமாக அதனை காவிரி மேலேண்மை வாரியத்துக்கும் அனுப்பியது அணை கட்ட மத்திய அரசு சம்மதித்ததாகத்தானே அர்த்தம். இது, தமிழ்நாட்டுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவாக நடந்துகொள்ள வேண்டிய மத்திய பா.ஜ.க அரசு, பாரபட்சமாக நடந்துகொண்டதற்கு இதுவே சான்று.
Also Read: மேக்கேதாட்டு அணை... அநியாயம் செய்யும் கர்நாடகம் அமைதி காக்கும் தமிழகம்!
அதுமட்டுமல்ல, அணைகட்ட கர்நாடக அரசு தேர்வு செய்திருப்பது வனத்துறைக்குச் சொந்தமான இடம். இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் இன்னும் அணைகட்ட ஒப்புதல் வழங்கவில்லை. அதற்குள்ளாக, நீராற்றல் துறை கர்நாடக அரசின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்கு வழிகாட்டிக் கொண்டிப்பதில் இருந்து எந்த சட்ட விதிமுறைகளையும் இந்திய அரசு கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது. உண்மை நிலை இப்படியிருக்க, தமிழக பா.ஜ.கவின் போராட்ட அறிவிப்பு வேடிக்கையாக இருக்கிறது. தமிழர்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான நாடகமாகத்தான் இந்தப் போராட்டத்தை நான் பார்க்கிறேன். உண்மையாகவே அவர்கள் எதிர்ப்பதாக இருந்தால், கர்நாடக அரசு அனுப்பிய விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு திருப்பி அனுப்பவேண்டும் எனப் போராடவேண்டும்'' என்கிறார் அவர். மேக்கேதாட்டு
மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து, தமிழக பா.ஜ.கவின் செய்தித் தொடர்பாளர், நாராயணன் திருப்பதியிடம் பேசினோம்,
'' தமிழகம் ஏற்றுக்கொண்டால் தவிர அணை கட்டுவதற்கு அனுமதி அளிக்க முடியாது என மத்திய அமைச்சர் ஷெகாவத், நாடாளுமன்றத்தில், பழைய ஒப்பந்தங்களைச் சுட்டிக்காட்டி மிகத் தெளிவாகச் சொல்லிவிட்டார். விரிவான திட்ட அறிக்கைக்குப் பிறகு, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் கடிதங்களைப் பெற மத்திய அரசு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த 20-ம் தேதியன்று , கர்நாடக முதல்வர் எழுதிய கடிதத்தில், தமிழக அரசு அணைகட்ட ஒப்புதல் கொடுக்கவில்லை என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதே பதிலில், கூறியுள்ளார். இதன்மூலம் தமிழக அரசின் ஒப்புதல் இல்லையென்றால், அணைகட்ட அனுமதி அளிக்க முடியாது என்பதை மத்திய அரசுதெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனால், கர்நாடக அரசியல்வாதிகள் (பா.ஜ.க உள்பட) தொடர்ந்து இந்த விவகாரத்தை எழுப்பி ஒரு பதற்றத்தை உருவாக்குகிறார்கள். அதனை முறியடிக்கும் விதமாகத்தான் தமிழக பா.ஜ.க போராட்டம் நடத்துகிறது'' என்றார் அவர்.
இதனிடையே, `மேக்கேதாட்டுவில் அணையக் கட்டியே தீருவோம். அண்ணாமலை கூறுவது பற்றி கவலையில்லை. அதற்கு நான் பதிலளிக்க வேண்டிய அவசியமும் இல்லை’ என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருக்கிறார்.
http://dlvr.it/S4nFbR
Saturday, 31 July 2021
Home »
» மேக்கேதாட்டு விவகாரம் : கர்நாடக பாஜக அரசின் மீதான அண்ணாமலையின் கோபம் அரசியலா, அக்கறையா?