திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமில் உள்ளவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவது குறித்து முடிவெடுக்குமாறு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத்தரப்பில் மேல்முறையீட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், ஆகையால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்றும் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி பற்றிய விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த பலர், தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும் என கடந்த 2009-ம் ஆண்டு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, கடந்த 2019-ம் ஆண்டு மனுதாரர்கள் அனைவரும் குடியுரிமை கோரி திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் புதிதாக விண்ணப்பிக்கவும், அந்த விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் மத்திய அரசுக்கு தாமதம் இன்றி அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார். உத்தரவை முறையாக நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில்தான், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய அரசுத்தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுதாக்கல் மீதான விசாரணை தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி சிவஞானம் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும், ஆகையால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க இயலாது என்றும் மத்திய அரசு வாதம் செய்துள்ளது. அதற்கு தலைமை நீதிபதி அமர்வு சார்பில் “தனி நீதிபதி தனது அந்த உத்தரவில் மனுவை பரிசீலிக்குமாறே உத்தரவிட்டுள்ளார். மனுவை பரிசீலித்து, குடியுரிமை வழங்குங்கள். இல்லையெனில் நிராகரியுங்கள். அதற்கு ஏன் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள்?” என்று மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார். மத்திய அரசின் வாதத்தை தொடர்ந்து, திருச்சி கொட்டப்பட்டு முகாம் அகதிகள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தை பொறுத்தவரை தமிழக அரசின் நிலைப்பாடு மாறியுள்ளது. ஆகவே தமிழக அரசிற்கு இது குறித்து முடிவெடுக்குமாறு உத்தரவிடலாம்" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள், "தமிழக அரசின் முடிவாயினும் அது சட்டங்களுக்கு உட்பட்டே முடிவெடுக்கப்பட வேண்டும்" என தெரிவித்து, இது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். - இ.சகாய பிரதீபா
http://dlvr.it/S4lCym
Saturday, 31 July 2021
Home »
» ”இலங்கை அகதிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள்; குடியுரிமை வழங்கமுடியாது” -மத்திய அரசு வாதம்