உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள உள்ளாட்சித் தலைவருக்கான தேர்தலில் பா.ஜ.க. அதிகப்படியான இடங்களில் வென்று அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியைப் பின்னுக்குத் தள்ளியுள்ளது. இந்த வெற்றியால் உ.பி. பா.ஜ.க-வினர் கொண்டாட்ட மழையில் திளைத்துள்ளனர். இந்த அமோக வெற்றியைப் பாராட்டி பிரதமர் மோடி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஹர்தாஸ் சம்பவம், கொரோனா விவகாரத்தில் அலட்சியப்போக்கு என சமீப காலமாகவே உ.பி-யை ஆளும் பா.ஜ.க அரசு மீதான வெறுப்பு மனநிலை மக்கள் மத்தியில் அதிகரித்திருந்தாலும் கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பா.ஜ.க. தலைமை. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள ஜில்லா பஞ்சாயத்து தலைவருக்கான தேர்தலில் மொத்தமுள்ள 75 இடங்களில் பா.ஜ.க 67 இடங்களைக் கைப்பற்றியுள்ளது, அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 5 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இவைபோக ராஷ்ட்ரிய லோக் தளமும், ஜனநாயக தளமும், சுயேட்சை வேட்பாளர் ஒருவரும் தலா ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி இதில் போட்டியிடவில்லை. மோடி
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தலைவருக்கான தேர்தலில் சமாஜ்வாதி 60 இடங்களைக் கைப்பற்றிய நிலையில் தற்போது படுதோல்வி அடைந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. சமாஜ்வாதியின் 30 ஆண்டுகால கோட்டையாக இருந்துவந்த மெயின்பூரி ஜில்லா இத்தேர்தலில் பா.ஜ.க. வசம் சென்றது. அதேபோல், காங்கிரஸ் அதிகாரத்தில் இருந்துவந்த முக்கியமான சில இடங்களும் பறிபோனது. உ.பி-யின் காங்கிரஸ் பொறுப்பாளாராக இருந்து வரும் ப்ரியங்கா காந்திக்கு இது பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், "தேர்தலில் முறைகேடுகள் செய்துதான் பா.ஜ.க வெற்றியை தன் வசப்படுத்தியுள்ளது" என சமாஜ்வாதி கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாகவே இத்தேர்தலில் சமாஜ்வாதி பெரும் பின்னடைவை சந்திக்கும் என்று மாயாவதி கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க தான் மீண்டும் வெற்றிபெறும் என்று எழுந்து வரும் கருத்துக்களுக்கு, ‘உள்ளாட்சித் தேர்தலின் தோல்வி சட்டமன்றத் தேர்தலின் வெற்றியை நிர்ணயிக்காது’ என்று முற்றுப்புள்ளி வைத்துள்ளனர் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் தரப்பினர்.அகிலேஷ் யாதவ்
இதைத்தொடர்ந்து, அகிலேஷ் யாதவும், உ.பி. ஆம் ஆத்மி கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய் சிங் எம்.பி. ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பானது வரப்போகும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்த ஆலோசனையாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு கூட்டணி அமைந்தால் சமாஜ்வாதி கட்சி ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைப்பது இதுவே முதல்முறையாகும்.
http://dlvr.it/S326hz
Sunday, 4 July 2021
Home »
» உ.பி: உள்ளாட்சித் தேர்தல்; சமாஜ்வாதி கோட்டையைத் தகர்த்த பா.ஜ.க; அகிலேஷ் யாதவின் அடுத்த மூவ் என்ன ?!