மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள பீமா-கோரேகாவில் 2018-ம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி நடந்த கலவரம் மற்றும் அதற்கு முதல் நாள் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியது தொடர்பான வழக்கைத் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரும் எந்தவித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் என்.ஐ.ஏ.விசாரணைகூட நடத்தாமல் வெறுமனே சிறையில் அடைத்துள்ளது. அவ்வாறு அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் ஸ்டேன் சாமி சமீபத்தில் மும்பை சிறைக்காவலில் மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டபோது உயிரிழந்தார். சிறையில் சரியான முறையில் சிகிச்சை கொடுக்காமல் இருந்ததால், அவரது உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனலிக்காமல் உயிரிழந்தார் என சர்வதேச அளவில் விமர்சனம் எழுந்தது.மும்பை ஐகோர்ட்
பாதிரியார் ஸ்டேன் சாமி மருத்துவ காரணங்களுக்காக இடைக்கால ஜாமீன் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது தீர்ப்பு கொடுக்கும் முன்பாகவே ஸ்டேன் சாமி இறந்துவிட்டார். அம்மனு இன்று (திங்கள் கிழமை) நீதிபதி சாம்பாஜி ஷிண்டே, நிஜாமூதீன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இம்மனு மீதான விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள்," பீமா-கோரேகாவ் வன்முறை வழக்கில் சமூக ஆர்வலர்கள், முதியோர்கள் என பலர் கைது செய்யப்பட்டு எந்தவித விசாரணையும் இன்றி, குற்றச்சாட்டுக்களையும் பதிவு செய்யாமல் எத்தனை ஆண்டுகளுக்கு சிறையில் வைத்திருக்க முடியும் " என்று தேசிய புலனாய்வு விசாரணை ஏஜென்சியிடம் கேள்வி எழுப்பினர்.
பாதிரியார் ஸ்டேன் சாமி மீதும், அவரது சேவைகள் மீதும் இந்த கோர்ட் மிகுந்த மரியாதை வைத்துள்ளது. ஸ்டேன் சாமிக்கு மருத்துவ சிகிச்சை கொடுக்க வேண்டும் என்பதை நாங்கள் ஏற்றுக்கொண்டிருந்தோம். எங்களால் கோர்ட்டிற்கு வெளியில் எதையும் பேச முடியாது. உங்களது கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டோம் என்பதை நீங்கள்( சாமி வழக்கறிஞர்) வெளியில் விளக்கமளிக்கலாம். எழுத்தாளர் வரவரராவிற்கு இவ்வழக்கில் மருத்துவ ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் தொடர்புடைய அனைவரது மனுக்களையும் மனிதாபிமானத்துடன்தான் பரிசீலித்தோம். வரவரராவிற்கு ஜாமீன் கொடுக்கும் போதுகூட கடுமையான எதிர்ப்பையும் மீறி தான் ஜாமீன் கொடுத்தோம். அதோடு அவரது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனையில் சந்தித்து பேச அனுமதித்தோம். சாமி மிகவும் அற்புதமான மனிதர். இந்த சமுதாயத்திற்கு அளப்பறிய சேவையை வழங்கியுள்ளார். அவரது சேவைமீது நாங்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கிறோம் என்று நீதிபதி ஷிண்டே தெரிவித்தார்.
Also Read: மும்பை: விடாது கொட்டித்தீர்க்கும் பருவமழை; மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவேண்டாம் என எச்சரிக்கை!ஸ்டேன் லூர்து சாமி
சாமி இறந்தது குறித்து நடத்தப்படும் நீதிமன்ற விசாரணையில் பாதிரியார் மாஸ்கர்ன்ஹாஸ் பங்கேற்கவும் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. என்.ஐ.ஏ.சார்பாக ஆஜரான வழக்கறிஞர் சந்தேஷ் பாட்டீல்," மக்கள் நீதித்துறையுடன், சிறை மற்றும் விசாரணை ஏஜென்சியை குறை கூறுகின்றனர்" என்று தெரிவித்தார். உடனே கருத்து தெரிவித்த நீதிபதி ஷிண்டே, "வெளியில் பேசுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாது. இப்போது எந்த விசாரணையும் இன்றி விசாரணை கைதிகளை எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்க முடியும் என்பதை என்.ஐ.ஏ.தெளிவுபடுத்த வேண்டும். பீமா-கோரேகாவ் வழக்கு மட்டுமல்லாது அனைத்து வழக்குகளுக்கும் சேர்த்துத்தான் கேட்கிறோம். பீமா-கோரேகாவ் வழக்கில் குற்றச்சாட்டுக்கள் கூட பதிவு செய்யப்படவில்லை. விரைவான விசாரணை என்பது அடிப்படை உரிமையாகும். நாங்கள் இந்த உண்மையையும் கவனிக்கவேண்டியிருக்கிறது. நான் பொதுவாக டிவி பார்ப்பது, பேப்பர் படிப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் ஸ்டேன் சாமியின் இறுதிச்சடங்கை பார்த்தனே் " என நீதிபதி ஷிண்டே தெரிவித்தார்.
http://dlvr.it/S41t68
Monday, 19 July 2021
Home »
» "எத்தனை ஆண்டுகள் விசாரணையின்றி விசாரணை கைதிகள் சிறையில் இருக்கமுடியும்"- மும்பை ஐகோர்ட் கேள்வி!