கர்நாடக மாநிலம் கனகபுறா மாவட்டத்தில் உள்ள மேக்கேதாட்டூ பகுதியில் புதிதாக அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. கர்நாடக அரசின் அணைக் கட்டும் முயற்சிக்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கக்கூடாது என கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இதற்கு “மேக்கேதாட்டூ அணை தமிழ்நாடு விவசாயிகளைக் கண்டிப்பாகப் பாதிக்கும். பெங்களூருவின் சிறிதளவு குடிநீர்த் தேவைக்காக, தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்க்கையை அழிப்பது நியாயம் இல்லை. மேக்கேதாட்டூ அணை கட்டக்கூடாது'' எனப் பதிலளித்திருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, துணை எதிர்க்கட்சித் தலைவர் ஓ.பன்னீர்செல்வம், பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கர்நாடகாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதேபோல கர்நாடக அரசியல் தலைவர்களும் கட்சி பேதங்களை மறந்து ஓரணியில் திரளத் தொடங்கியுள்ளனர்.ஸ்டாலின் - எடியூரப்பா
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கடலூர் ஆகிய ஆறு மாவட்டங்களுக்குப் பாசன ஆதாரமாக விளங்கும் மார்க்கண்டேய நதியின் குறுக்கே கர்நாடக அரசு புதிய அணையைக் கட்டியிருப்பதும் தமிழக விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. ஒருபக்கம் மேக்கேதாட்டூ, மறுபக்கம் தென்பெண்ணை என தமிழகத்தின் அனைத்து நீர் ஆதாரத்தையும் தடுக்கும் நடவடிக்கையைக் கர்நாடக அரசு எடுத்து வருகிறது. இதற்கு எதிராகத் தமிழக அரசு எடுக்கவுள்ள, எடுக்க வேண்டிய நடவடிக்கை என்ன?
Also Read: மார்க்கண்டேய நதி அணை விவகாரம்: `மத்திய அரசுதான் காரணம்!’ - மோதிக்கொள்ளும் பா.ம.க., பா.ஜ.க!
கர்நாடகா உடனான நதி நீர்ப்பங்கீட்டுப் பிரச்னையில் தமிழக அரசின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும் எனத் தமிழக பா.ஜ.க பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் கேட்டோம் “உரிமையாக, சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு மக்களுக்குக் கிடைக்க வேண்டியது எதுவாக இருந்தாலும் அது கிடைத்தே ஆக வேண்டும். அதற்கு எப்போதும் தமிழக பா.ஜ.க உறுதுணையாக இருக்கும். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தமிழ்மணி மேக்கேதாட்டூ தண்ணீரைத் தமிழ்நாடு கோருவதற்கு எந்த சட்ட உரிமையும் இல்லை எனக் கூறியிருக்கிறார். வேறு மாநிலத்துடன் மோதுவது, பிற மாநில பா.ஜ.க-வினர் சொல்லும் கருத்துக்கு இங்கிருக்கும் பா.ஜ.க பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் பேசுவது பிரச்னையின் தீவிரத்தைத் திசை திருப்பும் முயற்சி. நமக்குத் தண்ணீர் வேண்டும். அது கிடைக்கவில்லை என்றால் நிச்சயம் போராட வேண்டும். உரிமை கோர வேண்டும். கர்நாடகவுடான நீர்ப் பங்கீடு அணையில் நமக்கேயானது என்று இருக்குமேயானால் அதைக் கேட்டுப் பெற்றே ஆக வேண்டும். அப்படிக் கேட்டுப் பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்பதைக் கண்டறிய ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும். இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மேலோட்டமாக இதைப் பற்றிப் பேசுவது முழுக்க முழுக்க அரசியலாக மட்டுமே இருக்கும். இப்படியெல்லாம் சொல்வதைக் கேட்காமல் கர்நாடகாவிலிருந்து தமிழகத்திற்குக் கிடைப்பதை பா.ஜ.க தடுக்கிறது. தமிழ் விரோதி பா.ஜ.க என்றெல்லாம் அரசியல் செய்தால் அதற்கு நாங்கள் ஆட்கள் இல்லை. மேக்கேதாட்டூவில் நமக்கு எந்த அளவிற்கு நீர்ப்பகிர்மானம் இருக்கிறது என்பதை இதுவரை தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு அரசுகளும் உறுதி செய்யத் தவறிவிட்டனஎஸ்.ஆர்.சேகர்
நீட் தேர்வு தடை, பெட்ரோல் டீசல் மானியம், சிலிண்டர் மானியம் எனத் தேர்தல் அறிக்கையில் நிறைய வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டார்கள். ஆனால், அவை எதையும் இவர்களால் தற்போது நிறைவேற்ற முடியவில்லை. தங்களது தோல்வியை ஒப்புக்கொள்ள முடியாமல் அதை திசை திருப்பி மக்களைக் குழப்பத்திலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு மேக்கேதாட்டூ, தென்பெண்ணை அணைப் பிரச்னை உதவிசெய்து கொண்டிருக்கிறது. திடீரென மேக்கேதாட்டூ பிரச்னையைப் பேசுகிறது. தி.மு.க பேசுகிறது என்பதற்காகவே இந்தப் பிரச்னையை சந்தேகத்துக்கு உள்ளாக்க வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இவர்கள் தி.மு.க உண்மையைச் சொன்னதே கிடையாது” என முதலில் நமக்கு மேக்கேதாட்டூவில் இருக்கும் உரிமை குறித்துத் தெளிவடைந்த பின்னர்தான் போராட்டங்கள், வழக்குகள் என அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறினார்.
Also Read: தென்பெண்ணை ஆற்றில் 162 அடி உயர அணை, அத்துமீறிய கர்நாடகா; அதிர்ச்சியில் தமிழகம்!
தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்குக் காங்கிரஸின் ஒத்துழைப்பு எந்தளவு இருக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் கோபண்ணாவிடம் பேசினோம் “கிருஷ்ணராச சாகர், கபினி அவற்றிற்கு அடுத்து 'பிலிகுண்டுலு' என்ற இடம்தான் தமிழ்நாட்டுக்குக் கர்நாடகா அளிக்கும் நீரின் அளவை அளவிடும் இடம். இவற்றிற்கு இடைப்பட்ட பகுதியில் 9 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 70 டி.எம்.சி தண்ணீரைத் தேக்கக் கூடிய அளவில் மேகதாது அணை கட்டப்படுமானால் தமிழ்நாட்டிற்கு வரும் நீரின் அளவு குறைவதோடு, வளர்ச்சியும் வெகுவாகப் பாதிக்கப்படும். காவிரிப் படுகை விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். இதனால்தான் அதைத் தமிழ்நாடு கடுமையாக எதிர்க்கிறது. பேச்சுவார்த்தையின் மூலம் எந்தப் பயனும் ஏற்படவில்லை என்பதால்தான் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளைத் தொடர்ந்து போராடி வருகிறோம். வழக்கைத் தீவிரமாக நடத்துவதில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இருக்கிறது. வழக்கு நிலுவையில் இருக்கும்போது மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அணை கட்டுவதற்கு நிச்சயமாக அனுமதி அளிக்கக்கூடாது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நமக்குத் தர வேண்டிய நீரைத் தந்துதான் ஆக வேண்டும். அதற்கு எதிராக எந்த நடவடிக்கையை எடுத்தாலும் அது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மேக்கேதாட்டூ அணை கட்டுவதைத் தமிழக அரசு நிச்சயம் தடுத்து நிறுத்தும் என்ற நம்பிக்கை இருக்கிறது.கோபண்ணா
கர்நாடக காங்கிரஸ் தலைவர் ஜி.கே.சிவக்குமாரின் கருத்துக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்துவிட்டார். ஆனால், தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் பிரதமரைச் சந்தித்துவிட்டு காவிரி நீர்ப்பிரச்னையில் தமிழக அரசுதான் தவறு இழைத்துள்ளது என்பதுபோலப் பேசியிருக்கிறார். தமிழக பா.ஜ.க தலைவர் கர்நாடகாவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் பேசுவது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது” எனப் பிற மாநிலத்தைச் சேர்ந்த தன் கட்சியின் தலைவர் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததோடு தமிழ்நாடு அரசின் முயற்சிக்குக் காங்கிரஸ் கட்சி உறுதுணையாக இருக்கும் எனவும் உத்தரவாதம் அளித்தார்.
தமிழ்நாடு அரசு என்ன செய்யப் போகிறது என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி “மேக்கேதாட்டூ பிரச்னையை முதலில் எழுப்பியது கர்நாடகம்தான். எனவே, நாங்கள் பிரச்னையை திசைதிருப்ப தற்போது மேக்கேதாட்டூ அணை விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளோம் என்று சொல்வது அர்த்தமற்ற வாதம். ஒரு நதியில் அணை கட்ட வேண்டும் என்றால் அந்த நதியினால் பலனடையும் அனைத்து மாநிலங்களும் கலந்து ஆலோசித்தபின்தான் அதற்குரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக அரசு அணை கட்ட போகிறோம் என்று சொன்னதுமே தமிழ்நாடு அரசு அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பிரதமரச் சந்தித்தபோது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாகக் கவனத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார். இவற்றையும் மீறி கர்நாடக மாநில முதல்வர் அணை கட்டுவது தொடர்பாகக் கடிதம் எழுதியபோது ‘இது இரு மாநில உறவைப் பாதிக்கும் முடிவு’ என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்திருக்கிறார்.
Also Read: விழுப்புரம் தென்பெண்ணை ஆற்றில் 4 ஆண்டுகளுக்கு பிறகு கரைபுரண்டோடும் வெள்ளம்... படங்கள் - டி.சிலம்பரசன்கலாநிதி வீராசாமி தி.மு.க எம்பி
காவிரி நதி நீர் மேலாண்மையை ஜல் ஜீவன் சக்தி என்ற அமைச்சகத்தில் இணைத்தற்கும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறோம். அது மாநில அரசின் கட்டுப்பாட்டில் நிர்வாகத்தின் கீழ்தான் இருக்க வேண்டும். ஒன்றிய அரசின் கீழ் சென்றால் அது சுதந்திரமாகச் செயல்பட முடியாது என்பதையும் தெளிவுபடுத்தியிருக்கிறோம். எல்லா வழிகளிலும் கர்நாடக அரசின் செயலுக்கு தி.மு.க எதிர்ப்பு தெரிவித்துத்தான் வருகிறது. உச்சநீதிமன்றத்தின் மூலம்தான் உறுதியான, வலுவான முடிவு எட்டப்படும் என்பதால் தொடர்ந்து அங்கே முறையிடுகிறோம். முடிவு எட்டும்வரை தொடர்ந்து சட்ட ரீதியிலான போராட்டத்தை முன்னெடுப்போம்” எனத் தமிழ்நாடு அரசு செய்ய உள்ளதைத் தீர்க்கமாக விளக்கிக் கூறினார்.
http://dlvr.it/S3CKh4
Wednesday, 7 July 2021
Home »
» ஒருபக்கம் மேக்கேதாட்டூ... மறுபக்கம் தென்பெண்ணை! - அடங்காத கர்நாடகா; தடுக்குமா தமிழக அரசு?