கொரோனா முதல் அலையின்போது தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிறப்பாகக் கையாண்டு, கட்டுக்குள் கொண்டு வந்ததற்காக உலக சுகாதார அமைப்பின் பாராட்டுதலைப் பெற்ற கேரளா, 2-வது அலையை முடிவுக்கு கொண்டுவர போராடி வருகிறது. எனினும், நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்த கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் சற்று தணிந்து வருகிறது. அதன்படி, நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50,000-க்கு கீழாகவே பதிவாகி வருகிறது. பல்வேறு மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையிலும்கூட, கேரளாவில் மட்டும் தினசரி பாதிப்பு தினமும் 15,000-ஐ கடந்தே பதிவாகி வருவது, கவலையளிக்கும் விதமாக இருக்கிறது. குறிப்பாக, கேரள மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், மாநிலத்தில் புதிதாக 22,056 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் இந்த எண்ணிக்கை, நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில், கிட்டத்தட்ட பாதி அளவு பாதிப்பாகும். இதனைத்தொடர்ந்து, அம்மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்தியாவில் 22 மாவட்டங்களில் கொரோனா பரவல் குறையவில்லை என்றும், அதில் 7 மாவட்டங்கள் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவை என்றும் மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலர் கூறியுள்ளார். அந்த 7 மாவட்டங்கள் ஆலப்புழா, கோட்டயம், மலப்புரம், திருச்சூர், வயநாடு, எர்ணாகுளம், பத்தனம்திட்டா ஆகியவை ஆகும். குறிப்பாக கோட்டயம், எர்ணாகுளம், திரிச்சூர் மற்றும் மலப்புரம் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 45 சதவீதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனா இரண்டாம் அலையின் வேகம் குறைந்து வரும் சூழலில், கேரளாவில் மட்டும் பாதிப்பு குறையாததற்கு என்ன காரணம்? இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில், 11 மாநிலங்களில் கொரோனா எதிர்ப்பு சக்தியை கணக்கிடும் ‘செரோ சர்வே’ சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் கேரளாவில் 42.7% பேருக்கு மட்டுமே கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது என்பது தெரியவந்தது. அதாவது, கேரளாவில் இன்னும் 48% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட அதிகமான வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வு முடிவுகள் தெரிவித்தன. மேலும், கேரளாவில் கொரோனா பாஸிடிவ் ரேட் தொடர்ந்து 13 சதவீதத்துக்கு மேல் இருப்பதால் கேரளாவில் தொற்றை கட்டுப்படுத்த முடியாத நிலை நீடிக்கிறது என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அதிகமான மக்கள் நெருக்கம், முதியோர், நீரிழிவு நோயாளிகள் அதிகமாக இருப்பது போன்றவை அரசின் முன் இருக்கும் சவாலாக குறிப்பிடுகின்றனர் கேரள சுகாதாரத்துறையினர். அதேவேளையில், கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறைந்துவிட்டது என்றும், தீவிர சிகிச்சைப் பிரிவு, வென்டிலேட்டர் அனுமதியும் 50 சதவீதமாக குறைந்துள்ளது என்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு முக்கியக் காரணம், கொரோனா தடுப்பூசியை மக்கள் அதிகமாக செலுத்திக்கொண்ட விளைவுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மற்ற மாநிலங்களைவிட கொரோனா தடுப்பூசி செலுத்தும் வேகத்திலும், தடுப்பூசியை வீணாக்காமல் பயன்படுத்துவதிலும் கேரளா முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 21 சதவீதம் பேர் 2 டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டுள்ளனர். இது தேசிய சராசரியில் 9.9. சதவீதமாகும், வயநாடு மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் 45 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கேரளாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் பல்வேறு கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்துள்ளது. மேலும் கேரளாவில் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஏற்கெனவே அமலில் இருக்கிறது. இந்த நிலையில் கொரோனா அதிகரித்து வருவதால் வருகிற வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நீடிக்கும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. ''கேரளாவில் நிலைமை இப்போது முழுமையாகக் கட்டுக்குள் தான் இருக்கிறது. முதல் அலையைப் போலவே இரண்டாவது அலையிலிருந்தும் கேரளா விரைவில் மீளும்'' என நம்பிக்கை தெரிவித்துள்ளார் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்.
http://dlvr.it/S4gg1T
Friday, 30 July 2021
Home »
» குறையாத கொரோனா பாதிப்பு: கேரள நிலவரமும் காரணங்களும்