பப்ஜி ஆன்லைன் கேம் தடை செய்யப்பட்டு இருந்தாலும் அதனை சட்டவிரோதமாக ஏராளமானோர் விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றனர். இந்த விளையாட்டு இளைய சமுதாயத்தின் தூக்கத்தையே கெடுத்துக்கொண்டிருக்கிறது. மும்பையை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது வீட்டுக்குத் தெரியாமல் பப்ஜி கேம் விளையாடி இருக்கிறான். இந்த கேம் விளையாட தேவையான ஐடி மற்றும் கரன்சி வாங்க தனது தாயாரின் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை பயன்படுத்தி இருக்கிறான். மும்பை அந்தேரி பகுதியை சேர்ந்த அந்த சிறுவன் இப்போது பள்ளிகள் அடைக்கப்பட்டு இருப்பதால் பெரும்பாலும் மொபைல் போனிலேயே மூழ்கிக்கிடந்தான். பெற்றோரும் அவனை சரியாக கவனிக்கவில்லை. சிறுவன் எப்போதும் பப்ஜி விளையாடிக்கொண்டிருக்கிறான். பப்ஜி விளையாட்டு
ஒரு கட்டத்தில் அவனது தாயார் தனது வங்கிக்கணக்கை பார்த்தபோது 10 லட்சம் ரூபாய் மாயமாகி இருந்தது. உடனே என்னவென்று விசாரித்த போதுதான் அவர்களின் மகன் வீட்டிற்கு தெரியாமலேயே பப்ஜி விளையாட்டில் ரூ.10 லட்சத்தை இழந்திருப்பது தெரிய வந்தது. உடனே சிறுவனை அவனது தந்தை கண்டித்தார். இதனால் கோபமடைந்த அச்சிறுவன் 'இனி வீட்டுக்கு வரமாட்டேன் குட்பை' என்று கடிதம் மட்டும் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டான். கடிதத்தை பார்த்த அவனது பெற்றோர் இது குறித்து உடனே போலீஸில் புகார் செய்தனர்.
Also Read: நாமக்கல்: பப்ஜி கேம் விளையாடிய மாணவர்! - பெற்றோர் கண்டித்ததால் விபரீத முடிவெடுத்த பரிதாபம்
16 வயது சிறுவன் என்பதால் போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஷ்குமார் தலைமையிலான குழு சிறுவனை தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சிறுவனிடம் மொபைல் போன் இருந்ததால் அவன் எங்கு இருக்கிறான் என்பதை போலீஸார் கண்டுபிடித்து 24 மணி நேரத்தில் மீட்டனர். அந்தேரி மகாகாளி கேவ்ஸ் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனுக்கு போலீஸார் கவுன்சிலிங் கொடுத்து பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். இது குறித்து துணை கமிஷனர் தத்தா நலவாடே கூறுகையில், ``அதிகப்படியான கேள்விகள் கேட்டு சிறுவனை மன அழுத்தத்திற்கு ஆளாக்க வேண்டாம் என்று பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளேன்” என்றார். மற்றொரு போலீஸ் அதிகாரி இது குறித்து கூறுகையில், ``அதிக அளவில் ஆன்லைன் மோசடிகள் நடப்பதால் குழந்தைகளின் நடவடிக்கையில் பெற்றோர்கள் கவனமாக இருக்கவேண்டும்” என்றார்.
http://dlvr.it/S6Tl6B
Saturday, 28 August 2021
Home »
» பப்ஜி கேம்; வங்கிக்கணக்கில் இருந்து ரூ.10 லட்சம் மாயம்! - பெற்றோரை அதிர வைத்த சிறுவன்