நடிகை மம்தா குல்கர்னி 1995-ம் ஆண்டில் இருந்து 2000-ம் ஆண்டு வரை பாலிவுட்டில் மிகவும் உச்சத்தில் இருந்தார். ஆனால் அவருக்கு மாபியா கும்பலுடன் தொடர்பு இருப்பதாக வந்த தகவலை தொடர்ந்து 2000-ம் ஆண்டு திடீரென காணாமல் போய்விட்டார். அதன் பிறகு அவர் எங்கு சென்றார் என்று தெரியவில்லை. ஆனால் போதைப்பொருள் கடத்தல் மன்னன் விக்கி கோஸ்வாமி என்பவரை காதலித்து வந்தார் என்று கூறப்பட்டது.மம்தா குல்கர்னி
இதனிடையே விக்கி கோஸ்வாமி துபாயில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டு, 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற குல்கர்னி துபாய் சென்று தங்கினார். அதோடு சிறையிலேயே விக்கி கோஸ்வாமியை மம்தா குல்கர்னி திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது.
மகாராஷ்டிராவை சேர்ந்த மம்தா குல்கர்னி மும்பையிலும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை அருகில் உள்ள தானே, சோலாப்பூர், அகமதாபாத் போன்ற இடங்களில் 20 டன்னுக்கும் அதிகமான போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. சோலாப்பூரில் மருந்து கம்பெனி என்ற பெயரில் போதைப்பொருள் தயாரிக்கும் கம்பெனி செயல்பட்டு வந்ததையும் போலீஸார் கண்டுபிடித்தனர்.
போலீஸாரின் தீவிர விசாரணையில் மம்தா குல்கர்னி, அவரின் கணவர் விக்கி கோஸ்வாமி மற்றும் கென்ய கும்பலுக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். மும்பையில் உள்ள மம்தா குல்கர்னியின் இரண்டு வீடுகள், 6 வங்கி கணக்குகள், 3 வைப்பு தொகைகளை போலீஸார் முடக்கினர். மம்தா குல்கர்னி விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. போதை பொருள்
இந்நிலையில் தனது வங்கி கணக்கு முடக்கத்தை நீக்கவேண்டும் என்று கோரி மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மம்தா குல்கர்னி மனுத்தாக்கல் செய்தார். இம்மனு விசாரணைக்கு வந்த போது மம்தா குல்கர்னி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ``வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு இருப்பதால் மருத்துவ செலவைக்கூட சமாளிக்க முடியவில்லை. வீட்டுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றவேண்டும். அங்கு தனது சகோதரியை தங்க வைக்கவேண்டும்’ என்று தெரிவித்தார்.
அரசுத்தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `இவ்வழக்கில் தொடர்புடைய மம்தா குல்கர்னி குற்றத்தில் முக்கிய பங்கு வகித்துள்ளார். தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார். கென்யாவில் இருக்கும் அவரை இந்தியாவுக்கு கொண்டு வர மேற்கொள்ளப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலனலிக்கவில்லை. அவருக்கு விசாரணைக்கு ஆஜராக பல முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. எனவேதான் வங்கிகணக்கு முடக்கப்பட்டது. அதோடு வீட்டுக்கும் சீல் வைக்கப்பட்டது. தற்போது வங்கிக்கணக்கு முடக்கத்தை நீக்கினால் குற்றவாளி வரவே மாட்டார்” என்று வாதிட்டார்.
Also Read: மும்பை: காவல் நிலையத்தில் பழைய வாகனங்களின் பாகங்கள் திருட்டு; ரூ.26 லட்சத்துக்கு விற்ற பெண் காவலர்!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ராஜேஷ் குப்தா, குற்றம் சாட்டப்பட்ட நபர் விசாரணை அதிகாரிகளிடமோ அல்லது கோர்ட்டிலோ ஆஜராகவில்லை. எனவே வங்கிக்கணக்கின் முடக்கத்தை நீக்கவோ அல்லது வீட்டு சீல் அகற்றவோ வாய்ப்பு இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்துவிட்டார். 2017-ம் ஆண்டு மார்ச் 28-ம் தேதி நீதிமன்றம் மம்தா குல்கர்னி, கோஸ்வாமிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்தது. அதோடு தேடப்படும் குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டனர். அமெரிக்காவிலும் கோஸ்வாமியின் பெயர் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது.
http://dlvr.it/S53p2m
Thursday, 5 August 2021
Home »
» ரூ.2,000 கோடி போதைப்பொருள் வழக்கு: நடிகையின் வங்கிக் கணக்கு முடக்கத்தை நீக்க மறுத்த நீதிமன்றம்!