தாலிபான் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ள மஜர்-இ-ஷரிப் நகரத்திலிருந்து இந்தியர்கள் வெளியேற மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து பல இடங்களில் தாக்குதல் நடத்திவரும் தாலிபான்களிடம் சிக்காமல், அந்தப் பகுதியிலிருந்து இந்தியர்கள் பாதுகாப்பாக வெளியேற மத்திய அரசு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளது. (1/2) A special flight is leaving from Mazar-e-Sharif to New Delhi. Any Indian nationals in and around Mazar-e-Sharif are requested to leave for India in the special flight scheduled to depart late today evening. — India in Mazar (@IndianConsMazar) August 10, 2021 ஆப்கனில் பதற்றமான பகுதிகளிலில் உள்ள இந்தியர்களை மீட்டு, பத்திரமாக தாயகத்துக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலில் உள்ள இந்திய தூதரகம் காலி செய்யப்பட்டுள்ளது. தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் சிறப்பு விமானம் மூலம் நாடு திரும்பியுள்ளனர். அங்கே பணியில் ஈடுபட்டிருத்த பாதுகாப்பு படையினரும் வெளியேறியதை தொடர்ந்து, தற்போது ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தூதரகத்தில் பணிகளை கவனித்து வருகின்றனர். அமெரிக்க படைகள் மற்றும் நட்பு நாடுகளின் படைகள் வெளியேறிதைத் தொடர்ந்து, தாலிபான்கள் மீண்டும் ஆப்கன் அரசுக்கு எதிராக வன்முறையை வலுவாக கட்டவிழ்த்துவிட்டுள்ளனர். நாட்டின் பல பகுதிகள் தலிபான்கள் பிடியில் சிக்கியிருப்பதாகவும், அங்கெல்லாம் படுகொலைகள் நடந்து வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாலிபான்களின் தாக்குதலை சமாளிக்க ஆப்கன் படைகள் திணறும் நிலையில், இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக நாடு திரும்ப வேண்டும் என மத்திய அரசு அறிவுரை அளித்துள்ளது. தாலிபான் தாக்குதலை இன்னும் எத்தனை நாட்கள் ஆப்கன் படைகள் சமாளிக்கும் என இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பல்வேறு பகுதிகளில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் நகரங்கள் தாலிபான் தாக்குதலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பாகிஸ்தான் மறைமுகமாகவும், சில சமயங்களில் நேரடியாகவோ, தாலிபான்களுக்கு உதவி வருவதாக தகவல்கள் வந்துள்ளன. இந்நிலையில், இந்திய குடிமக்களுக்கு ஆப்கானிஸ்தான் நாட்டில் பாதுகாப்பு இல்லை என கருதப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று பில்லியன் டாலர் செலவில், இந்திய முதலீட்டில் அங்கே நடைபெறும் பல வளர்ச்சி திட்டங்களும் தீவிரவாத அச்சுறுத்தலை சந்தித்து வருகின்றன. ஆகவேதான் இந்தியர்கள் பத்திரமாக ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என இந்திய அரசு அறிவுரை அளித்து, மஜர்-இ-ஷரிப் பகுதியில் உள்ள இந்தியர்கள் வெளியேற சிறப்பு விமானம் ஏற்பாடு செய்துள்ளது. - கணபதி சுப்ரமணியம்
http://dlvr.it/S5QVMM
Wednesday, 11 August 2021
Home »
» ஆப்கனின் மஜர்-இ-ஷரிப் நகரிலிருந்து இந்தியர்களை பத்திரமாக வெளியேற்ற மத்திய அரசு தீவிரம்