ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்கள் அரங்கேறியுள்ள அடுத்தடுத்த சம்பவங்களால் அந்நாட்டு பெண்களின் நிலை கேள்விக்குறியாக்கியுள்ளன. "முழு நகரமும் கிட்டத்தட்ட ஒரே இரவில் பெண்களுக்கு எதிராக மாறிவிட்டது போல் தோன்றுகிறது. தெருவில் நடப்பது கூட வித்தியாசமாக உணர வைக்கிறது. வாழ்க்கை இத்தோடு நின்றுவிட்டது போல் நினைக்கிறேன்" - இந்த வார்த்தைகள் 20 ஆண்டுகளுக்கு பின் ஆப்கன் ஆட்சி அரியணையை கைப்பற்றி இருக்கும் தலிபான்கள் குறித்து காபூலைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஒருவர் உதிர்த்தவை. ஜூலை ஆரம்பத்தில் தொடங்கிய தலிபான்கள் போர் நேற்று காபூலை கைப்பற்றிய பின் முடிவுக்கு வந்தது. தலிபான்களின் இந்த வெற்றி மற்றவர்களை விட குறிப்பாக பெண்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளன. இந்த அச்ச உணர்வுக்கு பின்னணியில் பல வலிகள் இருக்கின்றன. அமெரிக்க படைகளால் தலிபான்கள் வீழ்த்தப்பட்ட இந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தான் பெண்கள் பல உரிமைகளை போராடி வென்றுள்ளனர். வேலைக்குச் செல்வது, கல்வி பயில்வது, பொதுவெளியில் தனியாக செல்வது போன்ற பல்வேறு உரிமைகள் இதில் முக்கியமானவை. ஏனென்றால் 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானில் நடந்த தலிபான்கள் ஆட்சியின்போது, பெண்கள் வெளியே வேலைக்கு செல்லவோ அல்லது பள்ளியில் படிக்கவோ தடை விதிக்கப்பட்டிருந்தது. பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. மேலும், பெண்கள் வெளியே செல்லும் வேண்டும் என்றால், அவர் தனது ஓர் ஆண் உறவினர் உடன் மட்டுமே வர வேண்டும். இந்த விதிகளை மீறிய பெண்களை இஸ்லாமிய சட்டத்தின் மிகக் கடுமையான விதிகளின் கீழ் தலிபான்கள் தண்டித்தனர். பொதுவெளியில் அந்தப் பெண்களை அவமானப்படுத்தினர். மேலும், பாலியல் தொழில் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பெண்களை கல்லால் அடித்து கொடுமைப்படுத்தினார்கள் தலிபான்கள். இந்த செயல்கள் காரணமாக மீண்டும் தலிபான்கள் கோலோச்ச தொடங்கியுள்ளது, தங்களுக்கு எதிராக அமையும் என்று அஞ்சுகிறார்கள் அந்நாட்டு பெண்கள். இதற்கேற்ப கடந்த சில நாட்களாக சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்துள்ளன. கந்தஹாரை கைப்பற்ற தொடங்கியபோது, நகரில் உள்ள அஸிஸி வங்கியின் அலுவலகங்களுக்குள் நுழைந்த தலிபான் வீரர்கள், அங்கு பணிபுரிந்த ஒன்பது பெண்களை வெளியேற்றி, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில் பெண்களை தங்களின் வீடுகளுக்கே அழைத்துச் சென்று விட்டுவிட்டு, இனி பணிக்கு வர வேண்டாம் என எச்சரித்து வந்துள்ளனர். இதற்கடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு ஹெராட்டில் உள்ள ஒரு வங்கியில் நுழைந்த துப்பாக்கி ஏந்திய மூன்று தலிபான்கள், பெண் ஊழியர்களை தங்கள் முகங்களை மறைக்க சொன்னதுடன் அவர்களை பணிக்கு வர வேண்டாம் என அச்சுறுத்தி இருக்கின்றனர். இந்த இரண்டு சம்பவங்களை குறித்தும் கேட்டதற்கு தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் பதிலளிக்க மறுத்ததுடன் "பெண்களை இனி வேலை செய்ய அனுமதிக்கப்படுவதில் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இஸ்லாமிய அரசு நிறுவப்பட்ட பிறகு, இது சட்டத்தின்படி முடிவு செய்யப்படும். மேலும் கடவுள் விரும்பினால், எந்த பிரச்னையும் இருக்காது" என்று மட்டும் தெரிவித்தார். அவர் மழுப்பலாக பேசினாலும் சமீபத்திய சம்பவங்கள் அனைத்தும் ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு இதுவரை கிடைத்து வந்த உரிமைகள் தலைகீழாக மாறும் என்பதற்கான ஆரம்பகட்ட அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது. பழைய விதிகள் மீண்டும் கொண்டுவரப்படும் என பயப்பட தொடங்கியிருக்கும் ஓர் ஆப்கன் பெண், "பெண்களாகிய எங்களுக்குள் சில நாட்களாக எழுந்துள்ள பேச்சு இதுதான். 1996-ல் தலிபான்கள் ஆட்சி காலத்தில் ஒரு பெண்ணாக எவ்வளவு கஷ்டத்தை தாங்கிக்கொண்டு வாழ்ந்தோம் என்று தினமும் பேசிக்கொண்டிருக்கிறோம். 1996 காலகட்டத்தில் காபூலில் வாழ்ந்தேன். அப்போது தலிபான்கள் புர்கா இல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிய பெண்கள் மற்றும் சிறுமிகளை எப்படி அடித்தார்கள் என்பது இப்போது வரை எனக்கு நினைவிருக்கிறது" என்று பழைய சம்பவங்களை நினைவுகூர்ந்துள்ளார். பெண் பத்திரிகையாளர்களின் நிலை: தலிபான்கள் குறித்து பெண் பத்திரிகையாளர்கள் மத்தியில் எழுந்துள்ள கவலைகள் இங்கே குறிப்பிட்டே ஆக வேண்டும். நேற்று காபூலை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண் பத்திரிகையாளர் ஒருவர் நாட்டை விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் துப்பாக்கி முனையில் அவரின் பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களை தலிபான்கள் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தை நினைவுகூரும் அந்த பெண் பத்திரிகையாளர், "நான் விமான நிலையத்திற்கு டாக்ஸியில் சென்றபோது, தெருவில் குழுவாக நின்றுகொண்டிருந்த சில ஆண்கள், தாலிபான்களுக்காக கைதட்டிக் கொண்டிருந்தார்கள். `மாஷாஅல்லா', `கோ அமெரிக்கா' உள்ளிட்ட கோஷங்களை அவர்கள் எழுப்பிய கொண்டிருந்தனர். என் வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்களை பார்க்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை" என்று ட்வீட் செய்துள்ளார். மற்றொரு பத்திரிகையாளர், "தலிபான்களின் வருகை குறித்த அச்சம் காரணமாக ஏற்கெனவே பொது இடங்களில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் எனக்கு தெரிந்தவர்கள் சிலர் எங்கள் வீட்டுக்கே வந்து, `தலிபான்கள் உங்களால்தான் வருகிறார்கள். தாலிபான்கள் உங்களை ஒழுங்குபடுத்துவதற்காக மீண்டும் வந்துள்ளார்கள்' என்று கூறி அச்சமூட்டுகின்றனர்" என்று கூறியிருக்கிறார். நாட்டை விட்டு வெளியேற முடியாத மற்றொரு பெண் பத்திரிகையாளர், "நாங்கள் எங்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டப்பட்டோம். இனி இன்னும் கஷ்டப்பட போகிறோம்" என்று தலிபான்கள் வருகை குறித்து கவலை தெரிவித்துள்ளார். உறுதியில் இருந்து பின்வாங்கும் தலிபான்கள்? - முன்னதாக, ஆட்சி பொறுப்பை கைப்பற்ற முயன்றபோது தலிபான் தலைவர்கள், "வேலை, கல்வி உள்ளிட்ட விஷயங்களில் "இஸ்லாமிய முறைப்படி" பெண்கள் சம உரிமை பெறுவார்கள்" என்று உறுதி அளித்திருந்தனர். ஆனால், இப்போது நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் அவர்கள் அளித்து வாக்குறுதிகளுக்கு மாறாக நடந்து வருகின்றன. தலிபான்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குகிறதா என்று அச்சம் தெரிவித்துள்ள அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள தலிபான்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் வாழும் பெண்களின் வாழ்வு நிலை 100 ஆண்டுகள் பின்னோக்கி செல்வதற்கான சூழல் ஏற்படும் என்றும், பெண்களின் கல்வி, பொருளாதாரம் மேம்பட்டு வந்துகொண்டிருந்த சூழலில் மீண்டும் அவை பின்னோக்கி செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அச்சம் தெரிவித்துள்ளது கவனிக்கப்படக் கூடிய விஷயமாக இருக்கிறது.
http://dlvr.it/S5nG9h
Tuesday, 17 August 2021
Home »
» அளித்த உறுதியிலிருந்து பின்வாங்கும் தலிபான்கள்... ஆப்கன் பெண்களின் நிலை இனி?!