சிவசேனாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்கு சென்ற மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் நாராயண் ராணே, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்துள்ளார். அவர் மகாராஷ்டிராவின் கொங்கன் பகுதியில் செல்வாக்கு மிக்கவர் என்பதால் அவரை பயன்படுத்திக்கொள்ள பாஜக திட்டமிட்டு அவருக்கு ராஜ்ய சபை உறுப்பினர் பதவி வழங்கியது. சமீபத்தில் மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்ட போது நாராயண் ராணேவுக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியில் இருந்த போது போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் தோல்வியை தழுவிய ராணே, அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் மாநகராட்சி தேர்தலை கருத்தில் கொண்டு `ஜன் ஆஷிர்வாத் யாத்திரையை’ மும்பையில் இருந்து தொடங்க இருக்கிறார். வியாழக்கிழமை தொடங்கும் இந்த யாத்திரை சனிக்கிழமை வரை மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து கொங்கன் பகுதியில் யாத்திரை நடத்துகிறார். அந்தேரியில் ராணே தனது யாத்திரையை தொடங்கினார். இதில் தேவேந்திர பட்நவிஸ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.மும்பை மாநகராட்சி கட்டடம்
யாத்திரையை தொடங்கிய பிறகு தாதரில் உள்ள மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரே நினைவுச் சின்னத்துக்கும் செல்ல ராணே திட்டமிட்டு இருந்தார். சிவசேனாவுக்கு துரோகம் செய்துவிட்டு சென்றவர், பால்தாக்கரே நினைவு சின்னத்திற்கு வர அனுமதிக்க மாட்டோம் என்று அக்கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா மக்களவை உறுப்பினர் விநாயக் ராவுத் அளித்த பேட்டியில், ``சிவசேனாவை பிரித்துக்கொண்டு சென்ற நாராயண் ராணேயால் பால்தாக்கரே மிகவும் மன வேதனை அடைந்தார். ராணேயை போன்ற ஒரு துரோகியை மகாராஷ்டிரா இது வரை பார்த்திருக்காது.
அப்படிப்பட்டவரை நாங்கள் பால்தாக்கரே நினைவுச்சின்னத்திற்கு வர அனுமதிக்கமாட்டோம். பால்தாக்கரே நினைவுச்சின்னத்திற்கு வர ராணேயிக்கு எந்த வித தார்மீக உரிமையும் கிடையாது|” என்றும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையே பலத்த எதிர்ப்பையும் மீறி ராணே பால்தாக்கரே நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், ``வரும் மும்பை மாநகராட்சி தேர்தலில் பாஜக வெற்றி பெறும். இதன் மூலம் சிவசேனா 32 ஆண்டுகளாக செய்துள்ள பாவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். பால்தாக்கரே உயிருடன் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர் எனது பணிகளுக்கு ஆசிர்வாதம் செய்வார்” என்றார்.உத்தவ் தாக்கரே
நினைவிடத்திற்கு வர எதிர்ப்பு கிளம்பியது குறித்து கேட்டதற்கு, ``சொல்வதாக இருந்தால் நேரடியாக சொல்லவேண்டும்” என்று உத்தவ் தாக்கரேயை மறைமுகமாக சாடினார். மும்பையில் கொங்கன் பகுதி மக்கள் அதிகமாக இருப்பதால் மும்பையில் ராணே தனது செல்வாக்கை நிரூபிக்க திட்டமிட்டுள்ளார். ராணே தாதர் வரும் வழியில் அவரை வரவேற்று அதிகப்படியான பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை அகற்ற மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டது.
Also Read: `மத்திய அரசு ஜனநாயகத்தின் நான்கு தூண்களை பலவீனப்படுத்துகிறது!’ - கொதிக்கும் சிவசேனா
இது குறித்து கருத்து தெரிவித்த மாநில பாஜக மூத்த தலைவர் சுதிர் முங்கந்திவார், ``நினைவுச்சின்னங்களை பார்க்க அனுமதிக்க மாட்டோம் என்ற சிவசேனாவின் நிலைப்பாடு அக்கட்சியின் குறுகிய மனப்பான்மையை காட்டுகிறது. நினைவுச்சின்னம் ஒன்றும் தனியார் கம்பெனி கிடையாது. அதனை யார் வேண்டுமானாலும் சென்று பார்த்து மரியாதை செலுத்தலாம்” என்று தெரிவித்தார். அமைச்சராக பதவியேற்று ஒரு மாததிற்கும் மேலாக டெல்லியில் இருந்த ராணே வியாழக்கிழமை காலையில் தான் யாத்திரைக்காக மும்பை வந்தார். விமான நிலையத்தில் எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்நவிஸ் உட்பட ஏராளமானோர் சென்று வரவேற்றனர். இதில் பேசிய ராணே, ``மகாராஷ்டிராவுக்கு உத்தவ் தாக்கரே தலைமை ஏற்று இருப்பது மகாராஷ்டிராவை அழிவை நோக்கி கொண்டு செல்வதாக அமைந்துள்ளது. இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்” என்று தெரிவித்தார்.விகடன் தயாரிப்பில் வெளிவர இருக்கும் ஆதலினால் காதல் செய்வீர் தொடரின் Promo
http://dlvr.it/S5yCN2
Thursday, 19 August 2021
Home »
» `சிவசேனா செய்த பாவத்துக்கு, வெற்றி பெற்று முற்றுப்புள்ளி வைப்போம்!' - மத்திய அமைச்சர் காட்டம்