இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலையில் பாதிப்பு யாரும் எதிர்பார்க்காத வகையில் மிக அதிகமாகக் காணப்பட்டது. பெரும் பாதிப்புக்கு டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவல்தான் கரணம் என்று கூறப்பட்டது. இந்தியாவில் பரவிய இவ்வகை வைரஸ் இன்று உலகின் 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, தமிழகம் போன்ற மாநிலங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்து. கொரோனா பரிசோதனை
இந்தியாவில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது கேரளா மாநிலத்தில்தான். கேரளாதான் கொரோனாவை மிகச் சிறப்பாகக் கையாண்டது என்றும் பெரிதும் பாராட்டப்பட்டது. கடந்த மாதம் பக்ரீத் பண்டிகைக்காகக் கேரளா முழுவதும் பல்வேறு தளர்வுகளை அம்மாநில அரசு அறிவித்திருந்தது. சமீபத்தில் ஓணம் பண்டிகை நடந்து முடிந்த சுழலில், தற்போது தொற்றின் எண்ணிக்கை உச்சத்தை அடைந்துள்ளது. கேரளாவில் கடந்த 22-ம் தேதி 10,402-ஆக இருந்த தொற்றின் எண்ணிக்கை 25-ம் தேதி 31,445-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 42,909. இதில் கேரளாவில் மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29,836. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பில் பெரும் பகுதி கேரளாவில் பாதித்தவர்களாக உள்ளனர். கேரளாவை அடுத்து மகாராஷ்டிராவில் (4,666) அடுத்ததாகத் தமிழகத்திலும் (1,538) தான் பாதிப்புகள் அதிகரித்துக் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் கொரோனா ஏற்படுத்திய கோரத்தாண்டவத்தை நாம் யாரும் மறந்திருக்க மாட்டோம். தற்போது டெல்லியில் தினசரி பாதிப்பு வெறும் 31 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.கொரோனா பரிசோதனை
தற்போது கேரளாவில் கொரோனா பாசிட்டிவ் விகிதம் 18 சதவிகிதத்திற்கு அதிகமாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவில் தொற்று அதிகரிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், `` மருத்துவ நிபுணர்கள் 3-ம் அலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளார்கள். மாநிலம் முழுவதும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் தாமாகப் பரிசோதனைக்கு முன்வரவேண்டும். அடுத்த 10 நாட்களில் இந்த தொற்று எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். கொரோனா பாதிப்பை முன்கூட்டியே கண்டறிந்தால் மட்டுமே சுலபமாகப் பாதுகாக்க முடியும்" என்று கூறியுள்ளார்.
தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது நாளொன்றுக்குக் கிட்டத்தட்ட 1,500 பேர் தொற்றால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை நீடிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் தொற்றின் எண்ணிக்கை அதிகரித்துக் குறையும் நிலை தொடர்ந்து வருகிறது. தற்போது தமிழகத்தில் 17,322 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். நாளொன்றுக்கு 1.6 லட்சத்திற்கும் அதிகமான கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக சுகாதாரத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.கொரோனா
``கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகரித்திருப்பதால் கேரளாவிலிருந்து தமிழகம் வருபவர்கள் தமிழக-கேரள எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிக்கப்படு வருகிறார்கள். தமிழகம் வருபவர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொரோனா இல்லை என்ற சான்றிதழ்களைக் கட்டிய பின்னரே தமிழகத்திற்குள் வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது" என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
Also Read: ``உடல்களை நதிகளில் வீசி எறியவில்லை" கொரோனா விமர்சனங்களுக்குக் காட்டமாக பதிலளித்த பினராயி விஜயன்!ராதாகிருஷ்ணன்
கேரளாவில் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாகவும், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் பேசினோம். ``கேரளா, ஆந்திரா போன்ற தமிழகத்தில் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதினால் எல்லைப் பகுதிகளில் கண்காணிப்பை அதிகரித்துள்ளோம். நமது மாநிலங்களில் பண்டிகை நாட்களிலும் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளோம். தமிழகத்தில் தொற்று அதிகரிக்காது இருக்கத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்து நாள்கள் தமிழகம் மிகுந்த கண்காணிப்போடு செயல்படவேண்டும். தளர்வுகள் இருப்பதால் பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
http://dlvr.it/S6ZrL0
Monday, 30 August 2021
Home »
» கேரளாவில் எகிறும் பாதிப்புகள்; தமிழகத்தில் கொரோனா இப்போது, இனி ?