தமிழ் திரையுலகில் நகைச்சுவை கதாப்பாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர கதாப்பாத்திரத்துக்கும் பெயர் பெற்றவர் 'பரோட்டா' சூரி. இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் "விடுதலை" திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். திரைத்துறையில் கடுமையான போராட்டங்களுக்கு பிறகு தனக்கென்று ஓர் இடத்தை பிடித்திருக்கும் சூரி இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்நிலையில் சூரி பிட்டாக இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களும் இன்று வைரலாகி வருகிறது. "டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு" அளித்துள்ள பேட்டியில் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார். கேள்வி: விடுதலை திரைப்படத்தில் வாய்ப்பு எப்படி கிடைத்தது ? பதில்: "சரியாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பாக வெற்றிமாறனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் என்னுடைய அடுத்தப் படத்தில் உன்னை கதாநாயகனாக ஆக்க இருக்கிறேன் என்றார். என்னை கதாநாயகனாக நடிக்க வைக்க பல்வேறு முயற்சிகள் கடந்த 5 ஆண்டுகளாகவே நடந்து வந்தது. பலரும் என்னை அணுகினார்கள். ஆனால் நான் அவற்றையெல்லாம் தேர்ந்தெடுக்கவில்லை. ஹீரோவாக நடிப்பது பெரிதல்ல. ஆனால் சரியான கதையாக இருக்க வேண்டும் என விரும்பினேன். வெற்றிமாறனிடமிருந்து அழைப்பு வந்த பின்பு எனக்கு வேறு யோசனையே இல்லை. உடனடியாக சம்மதித்துவிட்டேன். கேள்வி: வெற்றிமாறன் நீங்கள் தான் ஹீரோ என சொன்னதும் எப்படி உணர்ந்தீர்கள்? பதில்: வெற்றிமாறனை நேரில் சந்திக்கும் முன்பு அவர் படத்தில் பெரிய கதாப்பாத்திரம் இருக்கும் என நினைத்தேன். ஆனால் நீங்கள்தான் ஹீரோ என சொன்னதும், உடனடியாக சம்மதித்துவிட்டு, இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என வெற்றிமாறனிடம் கேட்டேன். இந்தச் சந்திப்பு நிகழ்ந்த 2 ஆண்டுகள் இது குறித்து நான் யாரிடமும் வாய் திறக்கவில்லை. ஆனால் அசுரன் திரைப்பட வெற்றிக்கு பின்பு அடுத்தடுத்து எல்லாம் நல்லவையாக நடந்தது. நீங்கள்தான் ஹீரோ என்ற பின்பு அட்வான்ஸ் வழங்கப்பட்டது. திக்குமுக்காடிப் போனேன். முதலில் இந்த விஷயத்தை என் மனைவியிடமும், பின்பு என் தம்பி சிவகார்த்திகேயனிடமும் கூறினேன். இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள் எனக் கூறினார் அவர். கேள்வி: இந்த திரைப்படத்துக்காக எப்படி தயாரானீர்கள்? பதில்: இத்திரைப்படத்துக்கான கதையை எனக்காகவே உருவாக்கியிருப்பதாக வெற்றிமாறன் கூறினார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் மேலும் 2 கதைகளையும் தயார் செய்தார். என்னை பிட்டாக இருக்கும்படி வெற்றிமாறன் அறிவுறுத்தினார். அதன்பின்புதான் நான் சிக்ஸ்பேக் போன்றவற்றை வைத்தேன். என்னை நான் பிட்டாக இருக்க தயார்படுத்திக்கொண்டேன். இந்தத் திரைப்படத்துக்கு என்னைப் போன்ற எளிமையான தோற்றம், அப்பாவியான முகம் தேவைப்பட்டதால்தான் வெற்றிமாறன் என்னை தேர்வு செய்திருப்பார் என நினைக்கிறேன். படப்பிடிப்பின்போது "சூரி எதையும் எக்ஸ்ட்ராவாக நடித்துவிட வேண்டாம், நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என்பார் வெற்றிமாறன். கேள்வி: அண்ணாத்தே திரைப்படத்தில் ரஜினியுடன் நடிப்பது பற்றி? பதில்: நான் வெறித்தனமான தலைவர் ரசிகன். அவர் ரொம்பவும் எளிமையானவர். காமெடி காட்சிகளில் நடிக்கும்போது தலைவரின் எனர்ஜியே வேறு. ஒரு ஷெட்யூலை முடித்துக் கொண்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினோம். அப்பொழுது விமானத்தில் ரஜினி சாருக்கு பக்கத்து இருக்கையை எனக்கு புக் செய்திருப்பதாக அவரின் உதவியாளர் கூறினார். தலைவருக்கு பர்சனல் ஸ்பேஸ் தேவைப்படும், ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவரோ, ரஜினி சார் தான் அப்படி புக் செய்யுமாறு கூறினார் என்றார். விமானத்தில் பயணம் செய்தபோது, என்னுடன் சேர்ந்து நடிப்பதில் உங்களுக்கு சவுகரியமாக இருக்கிறதா என்று என்னிடம் சார் கேட்டார். அது தான் சூப்பர் ஸ்டார். ஒரு பெரிய சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் தன்னுடன் சேர்ந்து நடிப்பது சவுகரியமாக இருக்கிறதா என்று கேட்பதற்கெல்லாம் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு தான் சார் கடவுள்.
http://dlvr.it/S6RYwG
Friday, 27 August 2021
Home »
» "ஹீரோவானதை முதலில் யாரிடமும் சொல்லவில்லை" - நடிகர் சூரி ஓபன் டாக்