மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவையடுத்து, பத்து நாட்களுக்குப் பிறகு 293-வது பீடாதிபதிக்கு முடி சூட்டப்படும் என பிற ஆதீன மடாதிபதிகள் கூறியுள்ளனர். மதுரை ஆதீனத்தின் 292-வது குருமகா சச்சிதானந்தமாக இருந்து வந்த 77 வயதான அருணகிரிநாதர், நேற்று இரவு காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் கடந்த திங்கள்கிழமை முதல் சிகிச்சைபெற்று வந்த மதுரை ஆதீனத்தின் 292-வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். இதனையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலமாக நள்ளிரவில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே அமைந்துள்ள மதுரை ஆதீன மடத்திற்கு கொண்டுவரப்பட்டது. ஆதீனத்தின் உடலுக்கு கோவை காமாட்சிபுர ஆதீனம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனம், இளைய மதுரை ஆதீனம் ஆகியோர் அஞ்சலி செலுத்தினா் இதனையடுத்து அவரது மடத்தின் உட்புறத்தில் உடலானது சித்ராசனத்தில் அமர்ந்த நிலையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மதியம் ஆதீனத்தின் உடல் நான்கு மாசி வீதிகளிலும் ஊர்வலமாக எடுத்துசெல்லப்பட்டு முனிச்சாலை பகுதியில் உள்ள மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்யப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள தொன்மையான சைவ மடங்களில் மதுரை ஆதீனமும் ஒன்று. அதன் ஆதீனம் மறைந்ததையடுத்து, அவரின் உடலுக்கு பிற ஆதீன மடாதிபதிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மதுரை ஆதீனத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் வந்திருந்த திருவாவடுதுறை ஆதீனம் பேசுகையில், "மதுரை மாநகரில் முனிச்சாலை அருகே மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்தில் மதியம் மூன்று மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. பத்து நாட்களுக்குப் பிறகுதான் 293-வது பீடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகளுக்கு முடி சூட்டப்படும்" என்றார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை காமாட்சிபுர ஆதீனம், "தமிழகம் முழுவதும் உள்ள ஆதீனங்கள் அனைவரும் இன்று அவருக்கு அஞ்சலி செலுத்த உள்ளார்கள். பத்து நாட்கள் தொடர்ந்து மதுரை ஆதீனத்தின் சமாதிக்கு அபிஷேகம் செய்யப்படும், அதற்குப் பிறகு புதிய ஆதீனத்திற்கு பட்டம் சூட்டப்படும்" என்றார். பின் செய்தியாளர்கள் நித்யானந்தா குறித்த கேள்விகளை கேட்க வேண்டாம் என இரு ஆதீனங்களும் கேட்டுக்கொண்டனர்.
http://dlvr.it/S5d4DP
Saturday, 14 August 2021
Home »
» "மதுரை ஆதீனத்திற்கு சொந்தமான இடத்திலேயே உடல் நல்லடக்கம்"- திருவாவடுதுறை ஆதீனம் பேட்டி