மும்பை அருகிலுள்ள விரார் ஐசிஐசிஐ வங்கியில் கடந்த வாரம் மேலாளரைக் கொலை செய்துவிட்டு கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக அனில் துபே என்பவர் கைதுசெய்யப்பட்டார். அவருடைய கூட்டாளி தலைமறைவாக இருக்கிறார். அவரையும் கைதுசெய்ய போலீஸார் தேடிவருகின்றனர். கொள்ளையைத் தடுக்க முயன்ற வங்கி மேலாளர் யோகிதா கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். வங்கியின் கேஷியர் ஸ்ரத்தா படுகாயத்துடன் சிகிச்சை பெற்றுவருகிறார். கைதுசெய்யப்பட்ட அனில் துபே ஆக்ஸிஸ் வங்கியில் மேலாளராகப் பணியாற்றிவந்தார். அதற்கு முன்பு ஐசிஐசிஐசி வங்கியில்தான் மேலாளராக பணியாற்றிவந்தார். தப்பிச் செல்ல நிறுத்தியிருந்த கார்
அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. துபே ஏராளமானோரிடம் கோடிக்கணக்கில் பணம் கடன் வாங்கி பங்குச்சந்தையில் முதலீடு செய்திருக்கிறார். ஆனால், அந்த பணம் முழுவதும் நஷ்டமடைந்துவிட்டது. இது தவிர வேறு சில தொழில்கள் செய்திருக்கிறார். அவையும் நஷ்டத்தில் முடிந்துள்ளன. இதனால் கடனாளியாக மாறிய துபே அதை எப்படித் திரும்ப அடைப்பது என்று தெரியாமலிருந்தார். இதற்காக, தான் பணியாற்றிய வங்கியிலேயே கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்.
ஆனால் அவ்வாறு கொள்ளையடித்தால் தெரிந்துவிடும் என்பதால் அந்தத் திட்டத்தை கைவிட்டுள்ளார். அதன் பிறகுதான் ஒரு மாதமாக ஐசிஐசிஐ வங்கியில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டிவந்ததாக தெரிவித்தார். அந்த வங்கியில் இரண்டு பெண் ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள் என்றும், அவர்களை எளிதில் சமாளித்துவிடலாம் என்றும் கருதியே அந்த வங்கியைக் குறிவைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மொபைல் ஆப் மூலம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ததாகத் தெரிவித்துள்ளார். இதனால் அவரது பணப் பரிவர்த்தனை குறித்து போலீஸார் ஆய்வு செய்துவருகின்றனர்.
Also Read: அம்பத்தூர்: வங்கி மேலாளரின் அலட்சியம்; ஏமாற்றிய நகை மதிப்பீட்டாளர்? -தொடர் சர்ச்சையில் யூனியன் வங்கி
துபேயுடன் பணியாற்றி வந்தவரிடம் இது குறித்துக் கேட்டதற்கு, `பங்குச்சந்தையில் பணத்தை இழந்த பிறகு சற்று பதற்றமாகத்தான் இருந்தார். ஆனால் இது போன்ற ஒரு குற்றச்செயலில் ஈடுபடுவார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எப்போதும் முதலீடுகளைப் பற்றியே பேசிக்கொண்டிருப்பார்’ என்று தெரிவித்தார். கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட தினத்தன்று, தான் பணியாற்றிய வங்கியில் விடுமுறை எடுத்திருந்தார்.
கொள்ளை நடந்த தினத்தன்று நடந்த சம்பத்தை நேரில் பார்த்த ஒருவர் சம்பவத்தை நினைவுகூர்கையில், சம்பவத்தன்று மாலை வங்கிக்கு வெளியில் ஒருவர் இரண்டு பெட்டிகளுடன் வேகமாக வெளியில் ஓடி வந்தார். அதேநேரம், உடலில் ரத்தக்கறை படிந்த நிலையில், பெண் ஒருவர் வங்கிக்குள்ளிருந்து, `காப்பாற்றுங்கள்’ என்று சத்தம் போட்டுக் கத்தினார். உடனே ஏதோ விபரீதம் நடந்திருப்பதை உணர்ந்த நான் ஓடிச்சென்று இரும்புப்பெட்டியுடன் சென்ற நபரை மடக்கிப்பிடித்தேன். உடனே `நான் வங்கியின் பெரிய அதிகாரி... உடனே போக வேண்டும்’ என்று அந்த நபர் தெரிவித்தார். என்னுடன் வேறு சிலரும் சேர்ந்து அந்த நபரை வங்கிக்கு இழுத்து வந்தோம். வங்கியில் இரண்டு பெண்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.
Also Read: மும்பை: வங்கியில் கொல்லப்பட்ட பெண் மேலாளர்! - சிக்கிய முன்னாள் மேலாளர்
உடனே அந்த நபரை அனைவரும் சேர்ந்து அடித்தனர்” என்றார். அனில் துபேயைப் பிடித்த பக்கத்துக் கடைக்காரர் அனில் துபேயிடமிருந்து பிடுங்கிய இரும்புப் பெட்டியை பத்திரமாக அருகிலுள்ள ஏடிஎம் சென்டர் அருகில் வைத்தார். சம்பவ இடத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். பொதுமக்கள் அடித்ததில் அவரது மொபைல்போன் காணாமல் போய்விட்டது. அந்த போனை கண்டுபிடித்தால் மேலும் சில முக்கிய ஆதாரங்கள் கிடைக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர். இது குறித்து டி.ஜி.பி பிரசாந்த் கூறுகையில், ``குற்றவாளி அனில் துபே வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல்போனதால் விரக்தியில் இது போன்ற காரியத்தில் ஈடுபட்டிருக்கிறார். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த அனில் துபே, பத்து ஆண்டுகளுக்கு முன்பு மும்பை வந்து தனியார் வங்கி ஒன்றில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறார். நாலாசோபாராவில் குடும்பத்துடன் தங்கியிருக்கும் அனில் துபே வீட்டுக்கு போலீஸார் சென்ற பிறகுதான் அவரது குடும்பத்துக்கே இது குறித்து தெரியவந்தது” என்று தெரிவித்தார்.
http://dlvr.it/S4thKg
Monday, 2 August 2021
Home »
» மும்பை: பங்குச்சந்தையில் முதலீடு; பெரும் கடன்! - பணியாற்றிய வங்கியில் கொள்ளையடித்த முன்னாள் மேலாளர்