நேற்று (26.8.21) விகடன் இணையதளத்தில் `மேக்கேதாட்டூ அணை: காய் நகர்த்தும் கர்நாடகா; குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறதா தமிழக அரசு?’ என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தநிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தில் மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு வழக்கு தொடுத்திருக்கிறது.
மேக்கேதாட்டூ அணை விவகாரம் குறித்து கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை, நேற்று முன்தினம் டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை சந்தித்துப் பேசியுள்ளார். இதுகுறித்துப் பேசிய அவர், ``காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டத்தில், மேக்கேதாட்டூ அணைக்கான விரிவான திட்ட அறிக்கையை விவாதிப்பதாக மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஷெகாவத் என்னிடம் உறுதியளித்தார்'’ என்று தெரிவித்திருந்தார்.கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்தபோது
Also Read: மேக்கேதாட்டூ அணை: காய் நகர்த்தும் கர்நாடகா; குறட்டை விட்டுக்கொண்டிருக்கிறதா தமிழக அரசு?
இதுசம்பந்தமாக மூத்த பொறியாளர் முனைவர் வீரப்பன், பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நேற்று விகடனில் செய்தி வெளியிடப்பட்டது. அதில், ``உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையம், மத்திய அரசு, அண்டை மாநிலங்கள் என்று பல அமைப்புகளைத் தாண்டி மேக்கேதாட்டூ அணையைக் கட்டியே தீருவேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கிறது கர்நாடகம். கர்நாடக அரசு தெரிந்தோ தெரியாமலோ ஓர் அரசியல் அழுத்தத்தை மத்திய அரசுக்குத் தொடர்ந்து கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், இதைத் தமிழக அரசு புரிந்துகொண்ட மாதிரி தெரியவில்லை. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்தியில் உள்ள நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வந்ததோடு சரி. அதன் பிறகு, மேக்கேதாட்டூ அணை விவகாரம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மேக்கேதாட்டூ விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொண்டது மாதிரி தெரியவில்லை. எனவே, தமிழக அரசு மேக்கேதாட்டூ விஷயத்தில் குறட்டை விட்டுக்கொண்டிருக்காமல், கர்நாடக அரசின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து அதற்கேற்ப அரசியல், சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தோம்.உச்சநீதிமன்றம்
இந்த செய்தி வெளியான பிறகு இன்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்திருக்கிறது. அதில், மேக்கேதாட்டூ அணையைக் கட்ட, மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு வழங்கிய விரிவான திட்ட அறிக்கையை ரத்து செய்ய உத்தரவிடக்கோரி தாக்கல் செய்துள்ளது.இந்த வழக்கில் நல்ல உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சட்டமன்றத்தில் இன்று மேக்கேதாட்டூ விவகாரம் குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வபெருந்தகை, ஜி.கே.மணி, சிந்தனைச் செல்வன், ஜவாருஹில்லா, எம்.ஆர்.காந்தி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் குரல் எழுப்பினர். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
Also Read: மேக்கேதாட்டூ அணை: `மத்திய அரசை நம்பி மட்டும் தமிழகம் இருந்துவிடக்கூடாது!' - எச்சரிக்கும் விவசாயிகள்
இதற்கு பதிலளித்துப் பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ``மேக்கேதாட்டூவில் அணை கட்டுவதை தடுத்து நிறுத்த முதல்வர் ஸ்டாலின் பிரதமரைச் சந்தித்து பேசியுள்ளார். கடிதமும் எழுதியுள்ளார். மேலும், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் நீர் வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால், டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகதாட்டூ விவகாரம் விவாதிக்கப்படும் என்று நீர்வளத்துறை சொன்னதாக வெளிவந்த தகவல் அதிர்ச்சி அளிக்ககூடியதாக உள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தில் இதை பற்றி பேச முகாந்திரம் கிடையாது. இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேக்கேதாட்டூ விவகாரம் குறித்து பேச கூடாது என்ற முடிவில் உறுதியாகவுள்ளோம். கர்நாடக முதலமைச்சர் நீதி தவறமாட்டார் என்று நம்புகிறேன்” என்று பேசியுள்ளார்.
http://dlvr.it/S6QzzG
Friday, 27 August 2021
Home »
» விகடன் செய்தி : மேக்கேதாட்டூ விவகாரம்; உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழக அரசு!