கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அயிலூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஹ்மான் (34). எலெக்ட்ரீஷியனான இவர் தனது வீட்டுக்கு அருகில் வசித்து வந்த ஸஜிதாவைக் காதலித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாக ரஹ்மானும் ஸஜிதாவும் காதலித்து வந்ததை யாரும் அறியவில்லை. இந்த நிலையில் 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2-ம் தேதி ஸஜிதா திடீரென மாயமானார். இதையடுத்து ஸஜிதாவைக் காணவில்லை என அவரின் தந்தை நென்மாற காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸார் விசாரணை நடத்தியதில், ஸஜிதா குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை. காவல் நிலையத்தில் அந்த வழக்கு நிலுவையில் இருந்துவந்தது.
இதற்கிடையில் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி ரஹ்மான் திடீரென மாயமானார். அவரைக் காணவில்லை என அவரது வீட்டினரால் நென்மாற காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த இரண்டு வழக்குகளும் நென்மாற காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்து வந்தன.பதிவு திருமணத்தின்போது ரஹ்மான் -ஸஜிதா
Also Read: 10 ஆண்டுகள் வீட்டில் தன் அறையில் காதல் மனைவியை ஒளித்து வைத்த ரியல் `கில்லி' ரஹ்மான்!
இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் ரஹ்மானின் அண்ணன் பஷீர், நென்மாற பகுதியில் லாரி ஓட்டிக்கொண்டு சென்றபோது ரஹ்மான் பைக்கில் சென்றதைக் கண்டார். ரஹ்மானை பிடித்து விசாரித்தபோது, அவர் தனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், தற்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாகவும் கூறியிருக்கிறார். இதையடுத்து ரஹ்மான் வசித்த வாடகை வீட்டுக்குச் சென்று பார்த்திருக்கிறார் பஷீர். அங்கு, 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன ஸஜிதா இருந்திருக்கிறார். ஸஜிதாவை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார் பஷீர்.
பத்து ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் இங்கு எப்படி என பஷீர் கேட்டிருக்கிறார். அப்போதுதான், தாங்கள் காதலித்த விஷயத்தையும், பத்து ஆண்டுகளுக்கு முன் திடீரென வீட்டை விட்டு வெளியே வந்துவிட்ட ஸஜிதாவை தங்களது பழைய ஓட்டு வீட்டில், தனி அறையில்தான் தங்க வைத்திருந்ததையும் ரஹ்மான் கூறினார். தன் வீட்டில், அட்டாச்டு பாத்ரூம் கூட இல்லாத ஓர் அறையில் பத்து ஆண்டுகள் யாருக்கும் தெரியாமல் காதலி ஸஜிதாவை ரஹ்மான் மறைத்து தங்க வைத்த விஷயம் அப்போதுதான் வெளியே தெரிந்தது. அது அந்த சமயத்தில் பரபரப்பு செய்தியானது.எம்.எல்.ஏ தலைமையில் திருமணம்
இந்த நிலையில் ரஹ்மானும், ஸஜிதாவும் முறைப்படி பதிவு திருமணம் செய்துள்ளார்கள். சிறப்புத் திருமணச் சட்டம் மூலம் இவர்களது திருமணம் நென்மாற சப் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்தது. திருமணத்தில் எம்.எல்.ஏ பாபு கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இதுகுறித்து ரஹ்மான் கூறுகையில், ``ஸஜிதாவை முறைப்படி திருமணம் செய்தது மகிழ்ச்சியாக உள்ளது. சட்டப்படி திருமணம் நடக்கவில்லை என்ற குறை இருந்தது. அது இப்போது நிறைவேறிவிட்டது. இப்போது எங்கள் திருமணபந்தம் பாதுகாப்பாக உள்ளது என்ற எண்ணம் வந்திருக்கிறது.
பத்து ஆண்டுகள் தனி அறையில் ஸஜிதாவுடன் வாழ்ந்த போது அவ்வளவு கஷ்டம் தெரியவில்லை. இப்போது கஷ்டமாகத் தெரிகிறது. முன்னதாக ஸஜிதா, மற்றும் நான் காணாமல் போனபோது அது தொடர்பாக காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்டுள்ள புகார்கள், அந்த வழக்குகள் எங்களுக்கு இடையூறாக உள்ளன. குற்றப்பிரிவுத் துறை அடிக்கடி விசாரணை நடத்துகிறது. நான் வீட்டில் இல்லாத சமயத்தில் போலீஸ் விசாரணைக்கு வரும்போது என் மனைவிக்கு வருத்தம் ஏற்படுகிறது'' என்றார்.பத்து ஆண்டுகள் தனி அறையில் ரகசியமாக வசித்த ஸஜிதா
மேலும் திருமணம் குறித்து பேசிய ஸஜிதா கூறுகையில், ``மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எங்களுக்கு வசிக்க வீடு இல்லை. அடுத்தது சொந்த வீட்டுக்கான முயற்சி செய்துவருகிறோம்'' என்றார். திருமணத்தை தலைமை ஏற்று நடத்திய நென்மாற எம்.எல்.ஏ பாபு கூறுகையில், ``அவர்களுக்கு வாழ்வதற்கென ஒரு வீடு இல்லை என்ற குறை உள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்'' என்றார்.
http://dlvr.it/S80J24
Tuesday, 21 September 2021
Home »
» ``10 ஆண்டுகள் தனியறையில் வசித்ததைவிட இப்போது கஷ்டமாக உள்ளது!'' - திருமணம் செய்த கேரள தம்பதி வருத்தம்