கேரள அரசு சார்பில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கடந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு ஓணம் பம்பர் லாட்டரி சீட்டு 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஆண்டு 44 லட்சம் லாட்டரிகள் விற்பனை ஆன நிலையில் இந்த ஆண்டு 54 லட்சம் லாட்டரிகள் விற்பனை ஆனது. முதல் பரிசு 12 கோடி ரூபாய், இரண்டாம் பரிசாக ஆறு பேருக்கு தலா ஒரு கோடி ரூபாய் என பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஓணப்பண்டிகை முடிந்த நிலையில் கடந்த 19-ம் தேதி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. கேரள நிதி அமைச்சர் பாலகோபாலன் முன்னிலையில் இந்த குலுக்கல் நடைபெற்றது. அதில் முதல் பரிசு பெற்ற நம்பர் லாட்டரி வாங்கியது யார் என கண்டறிய முடியாத நிலை ஏற்பட்டது.துபாய் ஓட்டல் ஊழியர் செய்யது அலி
இந்த நிலையில் வயநாடு பனமரம் பகுதியைச் சேர்ந்த செய்யது அலி என்பவர் முதல் பரிசுபெற்ற லாட்டரி சீட்டு தனக்காக தனது நண்பர் அகமது எடுத்து வைத்திருப்பதாக கூறி வாட்ஸ் அப்பில் டிக்கெட்டின் புகைப்படத்தை வெளியிட்டார். செய்யதுஅலி துபாயில் ஓட்டலில் பணி செய்துவருவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் ஓட்டல் ஊழியர் கோடீஸ்வரர் ஆனதாக அங்குள்ள அவரது நண்பர்கள் கொண்டாடி தீர்த்தனர். ஆனால் செய்யது அலிக்கு தமாசுக்காக வாட்ஸ் அப்பில் வந்த லாட்டரி டிக்கெட் போட்டோவை அனுப்பி விட்டதாகவும், அவருக்காக லாட்டரி எடுக்கவில்லை என்றும் அவரின் நண்பர் அகமது தெரிவித்தார். இதனால் முதல் பரிசுபெற்றவர் யார் என்பதை கண்டறிய தாமதமானது.
இதையடுத்து எர்ணாகுளம் மாவட்டம் மரட் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஜெயபாலன்(56) என்பவருக்கு ஓணம் பம்பர் பரிசு விழுந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுபற்றி ஜெயபாலன் கூறுகையில், "லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் எனக்கு உண்டு. எனது லாட்டரிக்கு முதல் பரிசு விழுந்திருப்பதை டி.வி செய்தி மூலம் அறிந்துகொண்டேன். அதுபற்றி குடும்பத்தில் சிலரிடம் மட்டும் தகவல் தெரிவித்தேன். அந்த சமயத்தில் சமூக வலைத்தளங்களில் மற்றொருவருக்கு லாட்டரி சீட்டில் பரிசு கிடைத்திருப்பதாக தகவல் வந்ததால் இதுபற்றி வெளியில் சொல்லாமல் இருந்தேன்.ரூ.12 கோடி லாட்டரி பரிசுபெற்ற ஜெயபாலன்
பின்னர் திங்கள்கிழமை செய்தித்தாள் பார்த்து எனது லாட்டரி எண்ணை உறுதி செய்துகொண்டேன். அதன் பின் மரட் கனரா வங்கியில் டிக்கெட்டை கொடுத்தேன். வங்கி நடவடிக்கைகள் முடிய 20-ம் தேதி மாலை ஆனது. அதன்பின்னர் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தேன். வீடு வைக்கவும், ஆட்டோ வாங்கவும் சில லட்சம் ரூபாய் வங்கியில் கடனாக வாங்கியுள்ளேன். அந்த கடனை திருப்பி செலுத்த வேண்டும். எனக்கு ஒரு மகள், ஒரு மகன் ஆகியோர் உள்ளனர். அவர்களுக்கு வீடு வைத்து கொடுக்க வேண்டும். இந்த பணத்தை நல்ல முறையில் பயன்படுத்துவேன். நான் கடவுள் நம்பிக்கை உடையவன். எனக்கு உதவி செய்ய யாரும் முன்வராத நேரத்த்தில் கடவுள் உதவி செய்திருக்கிறார்" என்றார்.
Also Read: ``லாட்டரி விற்பனையைத் தடை செய்க!"; திடீர் தர்ணாவில் திமுக பிரமுகர்; புதுக்கோட்டையில் பரபரப்பு!
ஜெயபாலனின் மனைவி மணி சோட்டாணிக்கரையில் ஒரு ஹோமியி மெடிக்கல் காலேஜில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 94 வயது ஆன தாய் லட்சுமியையும் கவனித்து வருகிறார் ஜெயபாலன். 12 கோடி ரூபாயில் பத்து சதவீதம் லாட்டரி விற்பனை செய்த ஏஜென்சிக்கு வழங்கப்படும். வரிகள் உள்ளிட்டவை கழித்து 7.39 கோடி ரூபாய் லாட்டரி சீட்டு எடுத்த ஜெயபாலனுக்கு வழங்கப்படும்.குடும்பத்தினருடன் ஜெயபாலன்
உண்மையான அதிஷ்டசாலியை கண்டுபிடித்த நிலையில் செய்யதுஅலி தனது நண்பர்களுக்கு எதிராக கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். "சிலர் சேர்ந்து என்னை ஏமாற்றிவிட்டனர். லாட்டரி டிக்கெட் எடுக்க அகமதுவுக்கு பணம் அனுப்பிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது. கடந்த 12-ம் தேதி டிக்கெட் எடுத்தார். முதலில் லாட்டரி டிக்கெட்டை எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியிருந்தார். அது டெலிட் ஆகிவிட்டது" என்றார். மேலும் தனது உறவினர்கள் மூலம் தன்னை ஏமாற்றிய நண்பர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் தயாராகி வருகிறாராம் செய்யதுஅலி.
http://dlvr.it/S7z7MN
Tuesday, 21 September 2021
Home »
» ரூ.12 கோடி ஓணம் பம்பர் லாட்டரி: ஏமாற்றப்பட்ட துபாய் ஹோட்டல் ஊழியர்; ஆட்டோ ஓட்டுநருக்கு கிடைத்தது!