மும்பையில் ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழா கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகளாக களையிழந்து காணப்படுகிறது. நடப்பு ஆண்டில் விநாயகர் சதுர்த்தி விழாவை கட்டுப்பாடுகளுடன் கொண்டாட மாநில அரசு அனுமதித்துள்ளது. ஆரம்பத்தில் விநாயகர் ஊர்வலத்திற்கு மும்பை மாநகராட்சி நிர்வாகம் தடை விதித்தது. அதோடு கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டது. தற்போது புதிதாக மும்பை போலீஸார் மும்பை முழுக்க 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். கணபதி சிலை
இதன்படி மும்பையில் வரும் 19-ம் தேதி வரை 5 பேருக்கு மேல் ஒரு இடத்தில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலத்திற்கும், கணபதி மண்டல்களில் சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை போலீஸ் செய்தி தொடர்பாளர் சைதன்யா வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், மாநில உள்துறை அமைச்சகம், மாநகராட்சி நிர்வாகம் பிறப்பித்துள்ள உத்தரவை சுட்டிக்காட்டி மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மக்கள் விநாயகரை ஆன்லைன் மூலமாகவோ அல்லது சமூக வலைத்தளம் மூலமாகவோ தரிசனம் செய்யலாம் என்றும், உத்தரவை மீறி 5 பேருக்கு மேல் கூடினால் 188வது சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: விநாயகர் சதுர்த்தி பூஜை | எளிமையாகச் செய்வது எப்படி? | How to Worship on Vinayagar Chathurthi
மாநில உள்துறை அமைச்சகமும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், பக்தர்கள் கணபதி மண்டல்களுக்கு சென்று தரிசனம் செய்ய தடை விதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மாநகராட்சி, மும்பை போலீஸார், மாநில அரசுகளின் உத்தரவால் இந்த ஆண்டும் மக்கள் வழக்கமான உற்சாகத்துடன் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். பக்தர்கள் வியாழக்கிழமை மாலையில் இருந்தே விநாயகர் சிலைகளை தங்களது மண்டல்கள் மற்றும் வீடுகளுக்கு எடுத்து செல்ல ஆரம்பித்தனர். விநாயகர் சதுர்த்தி
பக்தர்கள் சிலைகளை கரைக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக வரலாற்று நிகழ்வுகளை மையமாக வைத்து விநாயகர் மண்டல்கள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் அரசின் கட்டுப்பாடு காரணமாக பெரும்பாலான கணபதி மண்டல்கள் சிறிய அளவில் விழாவை கொண்டாட முடிவு செய்துள்ளனர். சுதந்திர போராட்டத்தின் போது மக்களை ஒன்று சேர்க்க லோக்மான்ய திலகர் கணபதி விழாவை அனைவரும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் முறையை 1800களின் இறுதியில் அறிமுகம் செய்தார். அந்த பண்டிகை நாளடைவில் பிரபலமடைந்து ஒவ்வொரு ஆண்டும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.
Also Read: விநாயகர் சதுர்த்தி: எகிப்து, காபூல், சீனா - உமை மைந்தனை உலகெங்கும் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்?
http://dlvr.it/S7HyZH
Friday, 10 September 2021
Home »
» விநாயகர் சதுர்த்தி விழா ஆரம்பம்: மும்பையில் ஊர்வலம், நேரடி தரிசனத்தை தடுக்க 144 தடை உத்தரவு அமல்