பத்தாண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரஸை, அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தியது `மோடியின் குஜராத் மாடல்!' தற்போது அதேபாணியில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பிரதான தேசியக்கட்சிகளுக்கே டஃப் கொடுக்கிறது `கெஜ்ரிவாலின் டெல்லி மாடல்.' காங்கிரஸின் இடத்தை நிரந்தரமாகக் கைப்பற்றி, தேசிய அளவிலான அதன் எதிர்க்கட்சி அந்தஸ்தை தனதாக்கும் நோக்கில் வட இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் வலுவாக காலூன்றி வருகிறது ஆம் ஆத்மி கட்சி என்கின்றனர் தேசிய அரசியலை உற்றுநோக்குபவர்கள். ராகுல்-காங்கிரசுக்கு மாற்றாக, மோடி-பாஜகவுக்கு நேரடி போட்டியாளராக வளர்ந்துவரும் கெஜ்ரிவால்-ஆம் ஆத்மியின் `சீக்ரெட் அரசியல் மூவ்' பற்றி அலசுகிறது இந்த கட்டுரை.
Also Read: மோடி அரசுக்கு எதிராக ராகுல் சுழற்றும் சர்க்காஸ்டிக் சாட்டைகள் எடுபடுகின்றனவா? - ஓர் அலசல்அரவிந்த் கெஜ்ரிவால்
கெஜ்ரிவாலின் வேகத்திற்கு என்ன காரணம்? மாநிலக்கட்சியாக இருக்கும் ஆம் ஆத்மியை, வலுவான தேசியக்கட்சியாக மாற்றிவிட வேண்டும், டெல்லியைத் தாண்டி மற்ற மாநில அரசியலிலும் தடம்பதித்து, ஆட்சியமைக்க செல்லவேண்டும் என்பது கெஜ்ரிவாலின் லட்சியத்திட்டமாக இருக்கிறது. காங்கிரஸின் பலவீனமும், பாஜக எதிர்ப்பு மனநிலையும் தனது கட்சிக்கு சாதகமாக அமையும் என்ற கருத்தில் உறுதியாக இருக்கிறார்.
தேர்தல்! அடுத்த ஆண்டு 2022 பிப்ரவரியில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களுக்கும், அக்டோபர், டிசம்பரில் இமாச்சலப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மொத்தம் 7 மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. டெல்லியில் மட்டுமே ஆட்சியமைத்துவரும் கெஜ்ரிவால், இம்முறை எப்படியேனும் எதிர்க்கட்சியாக இருக்கும் பஞ்சாப்பில் ஆட்சியமைத்தே தீரவேண்டும் என்கிற முனைப்பில் தீவிரமாக செயல்பட்டுவருகிறார். உத்தரகாண்ட் மாநிலத்தில் எதிர்க்கட்சி நிலைக்கும், குஜராத், இமாச்சல் போன்ற இதர மாநிலங்களில் கணிசமான இடங்களைக் கைப்பற்றி, குறிப்பிடத்தக்க வாக்குவங்கியை நிலைநிறுத்தவேண்டும் எனவும் திட்டமிட்டு செயல்பட்டுவருகிறார். ஆம் ஆத்மி தொண்டர்கள்
மேலும், பஞ்சாப், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஆம் ஆத்மி தனித்துப் போட்டியிடும் என அதிரடியாக அறிவித்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி:
டெல்லிக்கு அடுத்து பஞ்சாப் மாநிலம் ஆம் ஆத்மியின் கோட்டையாக விளங்குகிறது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் 4 இடங்களை பஞ்சாபில் கைப்பற்றியது. 2017-ம் ஆண்டு நடந்த பஞ்சாப் சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. தற்போது பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் கட்சியில் கடுமையான கோஷ்டி பூசல் நிலவுகிறது, மூன்று வேளாண் சட்டங்களால் பாஜக மீது கடுமையான எதிர்ப்பலை வீசுகிறது, மேலும் தொடர்ச்சியான மின்வெட்டு போன்ற சூழ்நிலைகளால் பஞ்சாப் மக்கள் காங்கிரஸ், பாஜக ஆகிய இரண்டு கட்சிகளின் மீதும் அதிருப்தியில் உள்ளனர்.ஆம் ஆத்மி
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் பஞ்சாப் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால் ``பஞ்சாப் மாற்றத்தை விரும்புகிறது. அம்மக்களிடம் மீதி இருக்கும் ஒரே நம்பிக்கை ஆம் ஆத்மி கட்சிதான் " என்றுகூறி பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் மின்வெட்டு குறித்து பேசியவர், ``பஞ்சாப்பில் நாங்கள் ஆட்சியமைத்தால், டெல்லியைப்போல ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவோம்" என வாக்குறுதி அளித்து மக்கள் மனதில் வெளிச்சமூட்டியிருக்கிறார்.
சென்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமல் போட்டியிட்டது ஆம் ஆத்மிக்கு பெரிய பின்னடைவாக அமைந்தது. இம்முறை சுதாரித்துக்கொண்ட கெஜ்ரிவால், ``ஆம் ஆத்மியின் பஞ்சாப் முதல்வர் வேட்பாளர் செல்வாக்குமிக்க ஒரு சீக்கியராகத்தான் இருக்கவேண்டும்" என கண்டிஷனாக கூறியிருக்கிறார். பஞ்சாப் மண்ணின் மகனும், கொரோனா கால மக்கள்சேவைகளால் பஞ்சாபின் அடையாளம் எனவும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டவருமான நடிகர் சோனு சூட் ஆம் ஆத்மியின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்றும் சொல்லப்படுகிறது.சோனு சூட்
ஏற்கனவே, அரவிந்த் கெஜ்ரிவால் அரசால் டெல்லி அரசுப் பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டும் திட்டத்தின் தூதுவராக சோனு சூட் அறிவிக்கப்பட்டிருந்தார். அதனைத்தொடர்ந்து மத்திய அரசால் வருமான வரிச்சோதனைக்கும் சோனு சூட் ஆளாக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எதுவாக இருப்பினும், ``பஞ்சாப்பில் ஆம் ஆத்மி ஆட்சி" என்பதில் உறுதியாக இருக்கிறார் கெஜ்ரிவால். மேலும், சமீபத்தில் வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பு பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சியே அடுத்து ஆட்சியமைக்கும் என திட்டவட்டமாகத் தெரிவிக்கிறது.அரவிந்த் கெஜ்ரிவால்
உத்தரகாண்ட்டில் ஆம் ஆத்மி:
உத்தரகாண்ட் மாநிலத்திலும் குறிப்பிடத்தக்க கட்சிக் கட்டமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அந்த மாநில அரசியலில் காங்கிரஸை தாண்டி பாஜகவுக்கு அதிகம் சவால் கொடுக்கும் கட்சியாக ஆம் ஆத்மி உருமாறியிருப்பதாகத் தகவல்கள் வெளிவருகின்றன.
கடந்த ஆகஸ்ட் மாதம் டேராடூன் சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், உத்தரகாண்ட் மாநில ஆம் ஆத்மி முதல்வர் வேட்பாளர் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி அஜய் கொத்ரியால் என முன்கூட்டியே அறிவித்து அதிரடி காட்டினார். மேலும், ``பாஜக கடந்த 5 ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தை நாசமாக்கிவிட்டது. அரசியல்வாதிகள் அரசாங்க சொத்தை சூறையாடுகின்றனர். மக்களுக்கும் இத்தகைய அரசியல்வாதிகளுக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ராணுவ அதிகாரியை முதல்வராக்க ஆம் ஆத்மி முன்வந்துள்ளது." எனப் பேசினார்.ஆம் ஆத்மி!
இதுமட்டுமல்லாமல், ``ஆம் ஆத்மி கட்சி உத்தராகண்ட் தேர்தலில் வெற்றி பெற்றால், மாநில மக்களுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும். நிலுவையில் உள்ள அனைத்து மின்சாரக் கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். நிச்சயமாக நாங்கள் இதை செய்வோம்" எனவும் உறுதியளித்திருக்கிறார்.குஜராத்
குஜராத்தில் ஆம் ஆத்மி:
கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், முதன்முறையாக ஆம் ஆத்மி கட்சி போட்டியிட்டபோதே, குஜராத்தில் தனது இருப்பை பதிவுசெய்துவிட்டது. குறிப்பாக 120 இடங்களைக் கொண்ட சூரத்தில் 27 இடங்களை கைப்பற்றி பாஜகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தைக்கூட சூரத் தொகுதியில் பெறவில்லை. ஏனைய இடங்களில் தோல்வியுற்றாலும் ஆம் ஆத்மி கணிசமான வாக்குவங்கியைப் பெற்று வலுவான அடித்தளத்தை ஏற்படுத்திக்கொண்டது.
பாஜகவின் அசைக்கமுடியாத கோட்டையில் ஆம் ஆத்மி நுழைந்துவிட்டதாகத் தொண்டர்கள் உற்சாகமடைய, அரவிந்த் கெஜ்ரிவால், "புதிய அரசியலை அறிமுகப்படுத்திய குஜராத் மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்" என்றுகூறி பெருமிதம் அடைந்தார்.மத்திய அரசை சாடும் அரவிந்த் கெஜ்ரிவால்
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் குஜராத் சென்ற கெஜ்ரிவால், நவ்ராங்ப்பூரில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைமை அலுவலகத்தைத் திறந்துவைத்தார். அப்போது பேசியவர், ``பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் ஒரே மாதிரிதான். கடந்த 70 ஆண்டுகளாக குஜராத் மருத்துவமனைகளின் நிலை முன்னேறவில்லை. குஜராத்தில் உள்ள மக்கள், டெல்லியில் மின்சாரம் இலவசமாக இருக்கும்போது, ஏன் இங்கேயும் இலவசமாக இருக்கக்கூடாது என நினைக்கிறார்கள். குஜராத் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். இனி அனைத்து விஷயங்களும் மாறும். குஜராத் சட்டமன்றத் தேர்தலில் 182 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி தனித்துப்போட்டியிடும்" என அறிவித்தார்.மோடி - கெஜ்ரிவால் - சோனியா காந்தி
சமீபத்தில் உத்ரகாண்ட், குஜராத் மாநிலங்களின் முதல்வர்களை பாஜக மாற்றியது. இதற்கு காரணம், இந்த இரண்டு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆம் ஆத்மி பெரும் சவாலாக அமைந்தது தான் என ஆம் ஆத்மியின் செய்தித்தொடர்பாளர் ராகவ் சதா கருத்து தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
கோவாவில் ஆம் ஆத்மி:
மிகச்சிறிய மாநிலமான கோவாவில் கடந்த ஆண்டு இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில், ஒரு இடத்தில் வென்று ஆம் ஆத்மி கட்சி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால், `` ஒரு இடத்தில் வெற்றி பெற்றிருந்தாலும் இது வெறும் ஆரம்பம்தான். கோவா மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப ஆம் ஆத்மி கட்சி வளரும் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்திருந்தார்.
Also Read: முதல்வர் மம்தா போட்டியிடும் பவானிப்பூர் இடைத்தேர்தல் களம் எப்படி இருக்கிறது?டெல்லியில் மீண்டும் ஆட்சியை பிடித்தது ஆம் ஆத்மி: முதல்வராகிறார் கெஜ்ரிவால்!
கடந்த ஜூலை மாதம் பனாஜி சென்ற அரவிந்த் கெஜ்ரிவால், ``காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மக்களை ஏமாற்றிவிட்டன. கோவா கடந்த சில ஆண்டுகளாக அழுக்கான அரசியலைச் சந்தித்து வருகிறது. கோவா மக்கள் தூய அரசியலை எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அதனால் எங்களுக்கு ஆதரவளிக்கின்றார்கள். இந்தமுறை கோவா மக்கள் மாற்றத்தை உருவாக்க விரும்பகிறார்கள்." என்று பேசினார்.
மேலும், ``ஆம் ஆத்மியை கோவா மக்கள் வெற்றிபெறச்செய்தால், மின்வெட்டே இல்லாத மாநிலமாக கோவாவை மாற்றுவோம். ஒவ்வொரு வீட்டுக்கும் 300 யூனிட் மின்சாரத்தை மாதந்தோறும் இலவசமாக வழங்குவோம். விவசாயத்திற்கும் இலவச மின்சாரத்தைக் கொடுப்போம்" என அறிவித்தார். (கெஜ்ரிவால், பொதுவாக அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாடலை அதாவது தனது டெல்லி மாடலை அடியொற்றியே வாக்குறுதி அளித்துவருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது)டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் (Arvind Kejriwal)
இதேபோல, இதர மாநிலங்களான உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் ஆட்சியை பிடிப்பதற்கான வேலைகளில் இறங்கி, சத்தமில்லாமல் காய் நகர்த்தி வருகிறார் அரவிந்த் கெஜ்ரிவால். அதே சமயம் கொரோனா இரண்டாம் அலையின்போது டெல்லியில் கெஜரிவாலின் 'டெல்லி மாடல்' சமாளிக்க முடியாம் தினறியது என தேசிய ஊடகங்கள் கருத்து தெரிவித்தன. தற்காலிக இடுகாடுகளை ஏற்படுத்தும் அளவுக்கு நிலைமை மோசமாக அரவிந்த் கெஜ்ரிவால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார். கொரோனாவால் ஏற்பட்ட தொழில் முடக்கம், வருவாய் இழப்பு, புதிய வேளாண் திட்டங்களுக்கெதிரான விவசாயிகளின் போராட்டம் என பல முக்கிய சிக்கல்களுக்கு இடையே நடக்கும் இந்த ஆறு மாநில தேர்தலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகிறது. ஒவ்வொரு கட்சியும் கடுமையாக தேர்தல் பணிகளைத் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் ஆம் ஆத்மி மக்களின் நம்பிக்கைக்குரிய கட்சியாக மாறி அங்கீகாரம் பெறுமா என்பதை தேர்தலுக்குப் பிறகான முடிவுகளே தெரியப்படுத்தும்.
http://dlvr.it/S7tmCL
Monday, 20 September 2021
Home »
» 2022 ஆறு மாநில தேர்தல்: வட இந்தியாவில் சத்தமின்றி வளர்ந்து வருகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?!