பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். வாஷிங்டனில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத்தளத்தில் பிரதமர் மோடியை அமெரிக்க அரசு உயரதிகாரிகளும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் சாந்துவும் வரவேற்றனர். அமெரிக்க வாழ் இந்தியர்கள் பலரும் விமான நிலையத்தில் பிரதமரை வரவேற்றனர். இப்பயணத்தின் முதல் அலுவலாக துணை அதிபர் கமலா ஹாரிசை பிரதமர் சந்தித்து பேச உள்ளார். இதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இதன் தொடர்ச்சியாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் கூட்டமைப்பான குவாட் கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்கிறார். இதில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் பிரதமர்கள் சந்தித்து பேச உள்ளனர். சுற்றுப்பயணத்தின் இறுதிக்கட்டமாக ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பிரதமர் உரையாற்ற உள்ளார். முன்னதாக டெல்லியில் புறப்படும் போது தனது பயணத்தின் நோக்கங்கள் குறித்து பிரதமர் மோடி பதிவிட்டிருந்தார். அதிபர் பைடனுடன் பிராந்திய மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து பேச உள்ளதாக மோடி அதில் தெரிவித்திருந்தார். இந்தோ பசிபிக் கடல் பகுதியில் மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகள் குறித்து குவாட் அமைப்பின் தலைவர்களுடன் பேச உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். பயங்கரவாதம், கொரோனா, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட சர்வதேச பிரச்னைகள் குறித்து ஐநா பொதுச்சபை கூட்டத்தில் பேச உள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். விமானப்பயணத்தின்போது அலுவல் சார்ந்த கோப்புகளையும் பார்வையிட்டு ஒப்புதல் அளித்ததாக ட்விட்டரில் பிரதமர் பதிவிட்டுள்ளார். இதனைப்படிக்க...உ.பி.யில் பரபரப்பை ஏற்படுத்திய சாமியார் நரேந்திர கிரி மரணம்.. சூடு பிடிக்கும் விசாரணை
http://dlvr.it/S865Z7
Thursday, 23 September 2021
Home »
» 3 நாள் பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி