குஜராத்தில் 25 ஆண்டுகளாக ஆட்சியதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கும் பாஜக., அடுத்த ஆண்டு அங்கு நடைபெறவிருக்கும் தேர்தலிலும் வெற்றியைப் பெறுவதற்கு காய்களை நகர்த்திவருகிறது. அதேபோல, தனது செல்வாக்குமிக்க மாநிலங்களில் ஒன்றான உத்தரப் பிரதேசத்திலும் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியைத் தக்கவைப்பதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறார்கள், பாஜக தலைவர்கள்.விஜய் ரூபானி
யோகி ஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் பாஜக ஆட்சி, வரும் மார்ச் மாதத்துடன் 5 ஆண்டு காலத்தை நிறைவு செய்கிறது. அதனால், இன்னும் சில மாதங்களில் அங்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. 2017-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெற்றவுடன், யாரும் எதிர்பார்த்திராத வகையில் யோகி ஆதித்யநாத்தை முதல்வர் நாற்காலியில் பாஜக அமர்த்தியது. ஐந்தாண்டு கால ஆட்சியைப் பூர்த்திசெய்யும் பாஜக., வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலை யோகி ஆதித்யநாத் தலைமையில் சந்திக்கவிருக்கிறது.
கொரோனா பெருந்தொற்று பரவலின்போது யோகி அரசின் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என்று எதிர்க் கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. அதுபோல, யோகி ஆட்சியின் மீது பல்வேறு விமர்சனங்களும் எதிர்க் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில், அயோத்தியை மையமாக வைத்து தேர்தலை சந்திப்பதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த சுமார் 30 ஆண்டுகளாக, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்பது பாஜக-வின் முக்கிய முழக்கமாகவும் தேர்தல் வாக்குறுதியாகவும் இருந்துவருகிறது. இந்த நிலையில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என்று 2019-ம் ஆண்டு நவம்பர் 6-ம் தேதி உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி, அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜையை பிரதமர் மோடி நடத்திவைத்தார். அங்கு ராமர் கோவில் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன. முதல்வர் யோகி ஆதித்யநாத் அடிக்கடி அயோத்திக்கு சென்றுவருகிறார்.மாயாவதி
தற்போது, உ.பி அரசியல் வட்டாரத்தில் சட்டமன்றத் தேர்தல் பரபரப்பு தொடங்கிவிட்ட சூழலில், அயோத்தி முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. பாஜக மட்டுமல்லாமல், பெரும்பாலான முக்கியக் கட்சிகள் அயோத்தியை தேர்தலில் பிரதானப்படுத்துவதற்கு முயற்சி செய்கின்றன. கடந்த 5-ம் தேதி ‘சிந்தனைவாதிகள் சந்திப்பு’ என்ற பெயரில் பாஜக தனது பிரசாரத்தை அயோத்தியில் தொடங்கியது.
அதில் பேசிய பாஜக தலைவர்கள், 1966-ம் ஆண்டு நாடாளுமன்றத்தை சாதுக்கள் முற்றுகையிட்டபோது, அவர்கள் மீது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி துப்பாகிச்சூடு நடத்த உத்தரவிட்டார் என்றனர். மேலும், உ.பி முதல்வராக முலாயம் சிங் இருந்தபோது, 1990-ம் ஆண்டு ராம பக்தர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த உத்தரவிடப்பட்டார் என்றும் பாஜக-வினர் பேசினர்.
மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் அயோத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. அயோத்தியில் கடந்த ஜூலை 23-ம் தேதியன்று அயோத்தியில் பிராமணர்கள் மாநாட்டை அந்தக் கட்சி நடத்தியது. 2007-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் முற்பட்ட சாதியினரின் ஆதரவுடன் வெற்றிபெற்ற ஆட்சியைப் பிடித்த மாயாவதி, வரப்போகிற தேர்தலிலும் அதே உத்தியைக் கையாள்வதற்கு முயற்சி செய்கிறார் என்பது இதன் மூலம் தெரியவருகிறது.அகிலேஷ் யாதவ்
மாயாவதிக்கு மிகவும் நெருக்கமானவரும், பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி-யுமான சதீஷ் சந்திர மிஸ்ரா, ராமர் பிறந்த இடத்தில் தரிசனம் செய்துவிட்டு பிரசாரத்தைத் தொடங்கியிருக்கிறார். சமாஜ்வாதி கட்சியும் தேர்தல் பிரசாரத்தை கடந்த 3-ம் தேதி அயோத்தியில் தொடங்கியது. தனது தந்தை முலாயம் சிங் யாதவ், சிறு வயதிலிருந்தே அனுமான் பக்தர் என்று கூறிய அகிலேஷ் யாதவ், ராமர் கோவில் தரிசனத்துக்குத் திறக்கப்பட்டால் குடும்பத்துடன் செல்வேன் என்று பேசியிருக்கிறார்.
அசாதுதுன் ஓவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உ.பி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடவிருக்கிறது. அவர் தனது பிரசாரத்தை, அயோத்தியில் புதிய மசூதி கட்டுவதற்காக நிலம் ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தொடங்கியிருக்கிறார். வேறு சில சிறிய கட்சிகளும் அயோத்தியிலிருந்து பிரசாரம் தொடங்கியுள்ளன. காங்கிரஸ் கட்சி மட்டும் அயோத்திக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.பிரியங்கா காந்தி
அனைத்துக் கட்சிகளும் அயோத்தி மூலமாக தேர்தலில் ஆதாயம் அடையலாம் என்று நினைத்தாலும், ராமர் கோவில் கட்டுவதன் மூலமாக அதிகமான வாக்குகளை அருவடை செய்யப்போவது என்னவோ பாஜக-தான் என்கிறார்கள். எனவேதான், அயோத்திக்கு அடிக்கடி விசிட் அடிக்கிறார் முதல்வர் யோகி ஆதித்யநாத்.
Also Read: `கார் உற்பத்தியை நிறுத்தும் ஃபோர்டு’ - தமிழகத்தில் 4,000 பேர் வேலையிழக்கும் துயரம்!
குஜராத்தில் கடந்த சுமார் 25 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சி புரிந்து வருகிறது. அங்கு சுமார் 15 ஆண்டுகள் முதல்வராக அதிகாரம் செலுத்திய நரேந்திர மோடி, 2014-ல் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று பிரதமர் ஆகிவிட்டார். ஆனாலும், இன்றைக்கும் குஜராத் மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்ற தலைவராக மோடி இருந்துவருகிறார். அங்கு செல்வாக்குமிக்க பாஜக தலைவர்கள் என்று யாரும் இல்லை.
மோடிக்குப் பிறகு குஜராத்தில் ஆனந்தி பென் படேல் அங்கு முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டார். அவரது ஆட்சி மீது பல விமர்சனங்கள் தீவிரமடைந்த சூழலில், விஜய் ரூபானி முதல்வராக ஆக்கப்பட்டார். இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். கொரோனா பிரச்னையை சரியாகக் கையாளவில்லை என்ற விமர்சனங்கள் விஜய் ரூபானி அரசுக்கு எதிராக எழுந்தன. அதன் பின்னணியில், தற்போது முதல்வர் மாற்றம் நடைபெற்றுள்ளது.பூபேந்திர படேல்
குஜராத் மாநிலத்துக்கும் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், பூபேந்திர படேல் முதல்வர் நாற்காலியில் அமரவைக்கப்பட்டுள்ளார். குஜராத்தில் செல்வாக்கு மிகுந்த படேல் சமூகத்தைச் சேர்ந்தவரான இவர், பிரதமர் மோடியின் விருப்பத்தில் இவர் முதல்வர் ஆக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய அளவுக்கு செல்வாக்கு இல்லாத சூழலில், முக்கிய எதிர்க் கட்சிகளில் ஒன்றாக ஆம் ஆத்மி கட்சி அங்கு வளர்ந்துவருகிறது. கடந்த 20 ஆண்டுகளில் சில தருணங்களில் மோடி - அமித் ஷாவுக்கு எதிரான நிலைப்பாட்டை படேல் சமூகத்தினர் எடுத்துள்ளனர். இந்த முறை, குஜராத்தில் பெரும்பான்மை சமூகமாக இருக்கக்கூடிய படேல் சமூகத்தினரின் ஆதரவைப் பெற்றுவிட வேண்டும் என்ற கணக்குடன், தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாக பூபேந்திர படேல் முதல்வர் ஆக்கப்பட்டிருக்கிறார்.
உ.பி மற்றும் குஜராத்தில் பா.ஜ.க-வுக்கான தேர்தல் உத்திகளை வகுப்பதிலும் முக்கிய முடிவுகளை எடுப்பதிலும் பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல்களில் இவர்கள் வகுக்கும் உத்திகள் என்ன மாதிரியான முடிவுகளைக் கொடுக்கிறது என்பதைப் பொறுத்து, 2024-ல் வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலின் தாக்கம் இருக்கும்.
http://dlvr.it/S7Wht4
Tuesday, 14 September 2021
Home »
» உத்தரப்பிரதேசம் முதல் குஜராத் வரை... சட்டமன்றத் தேர்தல்களுக்கான பாஜக-வின் அதிரடி நகர்வுகளின் பின்னணி