தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கருகில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெலட்டின் குச்சிகள் நிரப்பப்பட்ட கார் ஒன்று நின்றது கண்டுபிடிக்கப்பட்டது. பலத்த பாதுகாப்புமிக்க அம்பானியின் அன்டிலா அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு அருகில் ஜெலட்டின் குச்சிகளுடன் கார் நிறுத்தப்பட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கை ஆரம்பத்தில் மும்பை போலீஸார் விசாரித்த நிலையில், அதை தேசியப் புலனாய்வு ஏஜென்சி, தன் வசம் எடுத்துக்கொண்டது. ஜெலட்டின் குச்சிகள் இருந்த வண்டியை நிறுத்தியதாக மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா, போலீஸ் அதிகாரிகள் சுனில் மானே, ரியாசுதீன் உட்பட மொத்தம் 10 பேர் கைதுசெய்யப்பட்டனர். அம்பானி வீட்டின் நுழைவு வாயில்
இந்த வழக்கில் தொடர்புடைய ஹிரன் என்பவர் கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டார். தேசியப் புலனாய்வு ஏஜென்சி தற்போது சிறப்பு நீதிமன்றத்தில் 10,000 பக்கங்கள்கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறது. பணியிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள போலீஸ் அதிகாரி சச்சின் வாஸ், தான் மீண்டும் சூப்பர் ஹீரோவாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தக் காரியத்தில் ஈடுபட்டதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read: முகேஷ் அம்பானி இல்ல பாதுகாப்புக் குளறுபடி: மும்பை என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் பிரதீப் சர்மா கைது!
அதாவது ஜெலட்டின் குச்சிகள் நிரப்பிய வண்டியை அவரே கொண்டு வந்து நிறுத்திவிட்டு, இந்த வழக்கை விசாரித்து பெரிய ஆளாக மாறலாம் என்று நினைத்திருக்கிறார். ஜெலட்டின் குச்சி நிரப்பப்பட்டதன் முக்கிய நோக்கம் அம்பானிக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி, மிரட்டி பல கோடி ரூபாய் வாங்க வேண்டும் என்பதுதான் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுடன் கூட்டணியில் இருந்த ஹிரன், தேசியப் புலனாய்வு ஏஜென்சியிடம் பிடிபட்டால் அனைத்தையும் சொல்லிவிடுவார் என்ற பயத்தில் அவரை சச்சினும், அவரின் ஆட்களும் சேர்ந்து கொலை செய்திருக்கிறார்கள். சச்சின் வாஸ்
மே மாதத்தில் சச்சினவாஸ் பிரபல தொழிலதிபருக்கு மிரட்டல் கடிதமும் அனுப்பியிருக்கிறார் என்றும் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கில் 20 பேர் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குக் குற்றவாளிகளால் அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று தேசியப் புலனாய்வு ஏஜென்சி கேட்டுக்கொண்டது. நீதிபதி பிரசாந்த் 20 பேருக்கும் பாதுகாப்பு கொடுக்க அனுமதித்தார். சச்சின் வாஸ் தற்போது இரதய அறுவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
http://dlvr.it/S6wrZ8
Saturday, 4 September 2021
Home »
» அம்பானி வீட்டுக்கருகே வெடிபொருள்கள் நிரம்பிய கார்; பணத்துக்காகத் திட்டமிட்ட அதிகாரி!-அதிர்ச்சி தகவல்