இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலம் உத்தரப் பிரதேசம். இங்கு தற்போது யோகி ஆதிதயநாத் தலைமையிலான பாஜக அரசு ஆட்சி செய்துவருகிறது. இவர்களின் ஆட்சிக்காலம் வரும் 2022-ம் மார்ச் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அந்த மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் மீண்டும் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதா? உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் களநிலவரம் என்ன என்பதைப் பார்ப்போம்.யோகி ஆதித்யநாத்
உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 403 சட்டமன்றத் தொகுதிகள். 15 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஆட்சியமைத்தது. முன்பு ஆட்சியிலிருந்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியும், அதற்கு முன்பு ஆட்சியிலிருந்த மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியும் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களைக் கைப்பற்றியிருந்தது. காங்கிரஸைப் பொறுத்தவரை உத்தரப் பிரதேசத்தில் 1985-ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு பெரிய வெற்றி வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
உத்தரப் பிரதேசத்தின் பெரிய காட்சிகளாகக் கருதப்பட்ட சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய இரண்டு கட்சிகளும் 2017-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியைச் சந்தித்தது. தற்போதைய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான பாஜக அரசு கடந்த 2002-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேசத்தில் ஆட்சி நடத்தியது. அதன்பின் 15 ஆண்டுகள் பாஜகவால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மீண்டும் 2017-ம் ஆண்டு தேர்தலில்தான் பாஜக பெருவாரியான இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைத்தது.ராஜ்நாத்சிங்
அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமக அந்த அரசின் மீது மக்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி மனநிலையையும், மாயாவதி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளையும் தேர்தல் பிரச்சாரத்தில் பிரமாஸ்திரமாக பயன்படுத்தியது பாஜக. ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் என்று இரண்டு தலைவர்கள் களத்திலிருந்த நிலையிலும், உத்தரப் பிரதேசத்தில் ஏற்பட்ட மோடி அலைதான் 2017-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. உத்தரப் பிரதேசத்தைப் பொறுத்தவரை 403 சட்டமன்ற இடங்கள் மட்டுமில்லாது, 80 நாடாளுமன்ற இடங்களும் உள்ளன.
உத்தரப் பிரதேசத்தில் பெரும்பான்மையைப் பெற்றால்தான் நாடாளுமன்றத் தேர்தலிலும் எளிதாக வெற்றிபெற முடியும். இந்த முறை வெற்றியடையவேண்டும் என்று பாஜக, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் வேலைகளில் தற்போதே தீவிரமாக இறங்கிவிட்டது. அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கான வியூகங்களை வகுத்து வருகிறார்கள். கடந்த மே மாதத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 3,050 இடங்களில், பாஜக 790 இடங்களையும், சமாஜ்வாதி 719 இடங்களையும், பகுஜன் சமாஜ் 381 இடங்களையும், காங்கிரஸ் 76 இடங்களிலும், சிறிய மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 1,114 இடங்களில் மற்றவர்களும் வெற்றிபெற்றனர்.அமித் ஷா- யோகி - மோடி
இந்தத் தேர்தலில் பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலும், அயோத்தியிலும் பாஜக பின்னடைவைச் சந்தித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அங்கு ஜூன் மாதத்தில் மாவட்ட சேர்மன் தேர்வுக்கான உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 75 இடங்களில் பாஜக 67 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில்கூட வெற்றிபெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி இந்தத் தேர்தலைப் புறக்கணித்துவிட்டது. இந்த வெற்றியினால் வரும் பொதுத் தேர்தலிலும் பாஜக வெற்றிபெறும் என்று அந்தக் கட்சி உறுப்பினர்கள் கூறிவருகிறார்கள்.
கொரோனா பேரிடரின் இரண்டாம் அலையில், இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசம் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் இடம் கிடைக்காது மக்கள் அல்லாடினார்கள். கொரோனா கட்டுக்குள் இருக்கிறது என்று அரசு கூறினாலும், அங்கு நிலைமை தலைகீழாகவே இருந்தது. கொரோனாவால் ஒட்டுமொத்த உத்தரப் பிரதேசமும் பெரும் பாதிப்பைச் சந்தித்தது. இதற்கு அங்குள்ள யோகி அரசின் நிர்வாகக் குறைபாடுதான் காரணம் என்று கூறப்பட்டது. கொரோனா, விவசாயிகள் பிரச்னை, ஹத்ராஸ் சம்பவம் போன்ற பல்வேறு பிரச்னைகளினால் நடந்துவரும் பாஜக அரசின் மீது மக்கள் அதிருப்தியில இருக்கிறார்கள். இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.பிரியங்கா காந்தி - யோகி ஆதித்யநாத்
அதே வேளையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் மீது பாஜக மேலிடமே அதிருப்தியில் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. அந்த சூழலைச் சரிசெய்யும் வேலையில் யோகி தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். பாஜகவைப் பொறுத்தவரை அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியடைய உத்தரப் பிரதேச பொதுத்தேர்தல் வெற்றி மிக அவசியமானது. யோகி வெற்றியடைவதை விட உத்தரப் பிரதேசத்தில் பாஜக வெற்றியடையவேண்டும் என்பது பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது. இதனால், பாஜக மேலிடம் தற்போதே தேர்தல் வியூகங்களை வகுக்க ஆரம்பித்துவிட்டது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டிவருவது தேர்தலில் அவர்களுக்குச் சாதகமாக அமையும் என்கிறார்கள். அதேநேரத்தில், பரப்புரை கூட்டங்களுக்கு நேரடியாகப் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் பங்கேற்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தைத் தங்களின் கையிலிருந்து நழுவவிட பாஜக தயாராக இல்லை.
Also Read: இழந்த செல்வாக்கை மீட்கும் யுக்தி: உ.பி முதல்வர் வேட்பாளர் பிரியங்கா காந்தி?
திமுக அதிமுக போன்று இரு துருவங்களாக இருந்த சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் இரண்டு பிரதான கட்சிகள் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்று சேர்ந்து போட்டியிட்டது. இருந்தபோதிலும், பாஜக 64 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 10 இடங்களிலும், சமாஜ்வாதி 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸைப் பொறுத்தவரை, சோனியா காந்தி ரேபரேலி தொகுதியில் வெற்றிபெற்றிருந்தார். அதே நேரத்தில் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் தோல்வியைச் சந்தித்திருந்தார். உத்தரப் பிரதேசத்தில் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்கக் காங்கிரஸ் சார்பில் தற்போது பிரியங்கா காந்தி களமிறக்கப்பட்டுள்ளார்.அகிலேஷ் - மாயாவதி
இந்நத் தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி சேர வாய்ப்புகள் உள்ளதென்றும் கூறப்படுகிறது. இந்த முறை வெற்றிபெற பாஜக எந்த அளவுக்குத் தீவிரம் காட்டுகிறதோ, அதைவிட அதிகமாக மற்ற கட்சிகளும் தீவிரம் காட்டிவருகிறது. தேர்தல் நெருங்க நெருங்க உத்தரப் பிரதேச அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலில் கூட்டணிகளை வைத்துத்தான் வெற்றி சூழல் தீர்மானிக்கப்படும். ஆனால், இன்னும் எந்த அதிகாரப்பூர்வ கூட்டணியும் உறுதியாகவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள்தான் உள்ளது. என்ன நடக்கும் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
http://dlvr.it/S7DG0J
Thursday, 9 September 2021
Home »
» உத்தரப் பிரதேசம்: ஆட்சியைத் தக்கவைக்க `பாஜக - யோகி'யின் திட்டங்கள் என்னென்ன?