தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவின் போது வீடுகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடலாம் என்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட அனுமதி இல்லை எனவும் தமிழக அரசு கூறியுள்ளது. மேலும் பூஜைக்கு வைத்துள்ள விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்லக்கூடாது என்றும், தனிநபராகச் சென்று விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுத்திருப்பதாக தமிழக அரசு கூறியுள்ளது. இது திமுக அரசின் இந்து விரோத செயல் என பாஜக கொந்தளித்துள்ளது. சில இடங்களில் விநாயாகர் சிலைகளை பொது இடங்களில் வைத்ததால் போலீஸார் நடவடிக்கை எடுக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதே சமயம் அண்டை மாநிலமான கேரளத்தில் கொரோனா பரவல் தமிழகத்தை விட பன்மடங்கு அதிக அளவில் உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி சுமார் 1,600 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியும் நிலையில், கேரளத்தில் 25,000 முதல் 30,000 வரை தினசரி கொரோனா பாதிப்பு ரிப்போர்ட் ஆகிறது. ஆனாலும் கேரளத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. நேற்று திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் 200 பேருக்கு மேல் கூடி சாலை ஓரத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்தனர்.சிவசேனா கேரள மாநில தலைவர் புவன சந்திரன்
தமிழ்நாட்டில் இந்து முன்னணி, சிவசேனா, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆனால் கேரளத்தில் கட்சி சார்பு இல்லாமல் அனைவரும் சேர்ந்தே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுகின்றனர். அரசியல் கலப்பில்லாமல் விழா கொண்டாடினால் தடை போன்ற பிரச்னைகள் வராது என்கிறார் கேரள மாநில சிவசேனா தலைவர் புவனேந்திரன். இதுகுறித்து கேரள மாநில சிவசேனா தலைவர் புவனேந்திரன் கூறுகையில், "நம் மனதில் உள்ள ஆசை, கோபம், பொறாமை உள்ளிட்ட தீய எண்ணங்களை விநாயகரிடம் சமர்ப்பித்து பூஜை செய்து, பின்பு விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கரைத்துவிட வேண்டும்.
நம் பாவங்களையும், சாபங்களையும் கரைக்கும் விதமாக விநாயகர் சிலையை பூஜை செய்து நீர்நிலைகளில் கரைக்கும் விழா பண்டைய காலம்தொட்டே இருக்கிறது. சத்திரபதி வீர சிவாஜிக்கு அவரது குரு சமர்த்த ராமதாசர் விநாயகர் சிலையை வழிபட்டு பின்பு நீர்நிலைகளில் கரைக்கும் வழிமுறையை உபதேசித்தார். சுதந்திர போராட்டத்தில் மக்களை ஒன்று சேர்க்க லோகமான்ய திலகர் விநாயகர் சதுர்த்தி விழாவை மீண்டும் பரவலாக்கினார். விநாயகர் சதுர்த்தி பக்திப்பூர்வமான விழா. ஆனால், தமிழ்நாட்டில் அந்த விழா அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது. பாஜக உள்ளிட்ட கட்சி சார்பில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகின்றன. தமிழக அரசும் அதை அரசியல் விழாவாக பார்ப்பதால் பிரச்னை ஆகிவிடுகிறது.விநாயகர் சதுர்த்தி
ஆனால் கேரளத்தில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைவரும் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவை பக்திபூர்வமாக கொண்டாடுகின்றனர். 'கணேச உத்ஸவ்' என்ற பெயரில் விநாயகர் சதுத்தி விழா கொண்டாடப்படுகிறது. அதற்காக ஐ.எஸ்.ஆர்.ஓ முன்னாள் சேர்மன் மாதவன் நாயர் தலைமையில் அனைத்து அமைப்புகளையும் உள்ளடக்கிய விநாயகர் சதுர்த்தி விழா குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் நானும் இருக்கிறேன். விநாயகர் சதுர்த்தியான நேற்று திருவனந்தபுரம் கிழக்கே கோட்டையில் பொது இடத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யும் விழாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி, சி.பி.எம் கட்சி எம்.எல்.ஏ-வும் நடிகருமான முகேஷ், ஐ.எஸ்.ஆர்.ஓ முன்னாள் சேர்மன் நம்பி நாராயணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வருடம்தோறும் விநாயகர் சதுர்த்தி விழாவில் உம்மன் சாண்டி கலந்துகொள்வது வழக்கம்.
Also Read: மணியடித்து வலம்வந்த மசினி, மண்டியிட்டு வணங்கிய கிருஷ்ணா... இது யானைகள் கொண்டாடிய விநாயகர் சதுர்த்தி!
வரும் புதன்கிழமை விநாயகர் விஜர்சன விழா நடைபெற உள்ளது. வழக்கமாக ஐம்பதாயிரம் பேர் ஒன்றாக சேர்ந்து செல்லும் ஊர்வலம் நடைபெறும். கொரோனா காலம் என்பதால் சுமார் 200 பேர் சேர்ந்து விநாயகர் சிலையை வாகனங்களில் அனுப்பிவைப்பார்கள். சங்குமுகம் கடலில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்யப்படும். இதில் எந்த இடத்திலும் சிவசேனா பெயரோ, மற்ற கட்சி, அமைப்புகளின் பெயரோ எங்கும் பயன்படுத்துவது இல்லை. பக்திப்பூர்வமான விழாவாக, அனைத்து தரப்பினரையும் இணைத்து தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினால், எவரும் தடை செய்ய முன்வரமாட்டார்கள்" என்றார்.
http://dlvr.it/S7MN7q
Saturday, 11 September 2021
Home »
» `தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி அரசியல் ஆக்கப்பட்டுவிட்டது; கேரளாவில் அப்படியில்லை!’ -சிவசேனா தலைவர்