ஜம்மு காஷ்மீர் பகுதியில் அக்டோபர் மாத தொடக்கத்திலிருந்து பொதுமக்கள் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. அக்டோபர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை மட்டும் 11 பொதுமக்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதில் 5 பேர் வெளிமாநிலத்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. நேற்று முன்தினம் பீகாரைச் சேர்ந்த இரண்டு புலம்பெயர் தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இந்தச் சம்பவங்களுக்கு எதிராக பாதுகாப்புப் படை வீரர்கள் பதில் தாக்குதல் நடத்திவருகின்றனர். இதில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒன்பது பாதுகாப்புப் படை வீரர்களும் இந்த மோதல்கள் காரணமாகப் பலியாகியிருக்கின்றனர். காஷ்மீர்
Also Read: காங்கிரஸ் டூல்கிட் முதல் ஜம்மு காஷ்மீர் இல்லா இந்திய வரைபடம் வரை! - தொடரும் ட்விட்டர் சர்ச்சைகள்
2019 ஆகஸ்டில் ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அந்தப் பகுதி இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன. இதனால், தொடர்ந்து பதற்றம் நிலவிவந்த காரணத்தால், அங்கு கொரோனா காலத்துக்கு முன்பாகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டது. காஷ்மீரின் முக்கியத் தலைவர்கள் பலரும் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டிருந்தனர். தொடர்ந்து, கொரோனா ஊரடங்கும் அங்கு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு காரணமாக அங்கு தாக்குதல் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெறாமலிருந்தன. 2021-ம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே காஷ்மீரில் அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெறத் தொடங்கின. அந்தத் தாக்குதல்களிலெல்லாம் கொல்லப்பட்ட பொதுமக்கள் எண்ணிக்கை ஒற்றை இலக்கத்திலேயே இருந்தன.ஜம்மு காஷ்மீரில், 2021 ஜனவரி முதல் செப்டம்பர் வரை 19 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டிருந்தனர். ஆனால், அக்டோபர் மாதத்தின் முதல் 18 நாள்களிலேயே 11 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிலும் வெளிமாநிலத்தவர்கள் குறிவைத்துத் தாக்கப்படுவது, புலம்பெயர்ந்து வந்தவர்களிடம் அச்சத்தை உண்டாக்கியிருக்கிறது. வெளிமாநிலத்திலிருந்து காஷ்மீருக்கு வந்து பானிபூரி விற்பவர்கள், ஆசிரியர் பணிசெய்பவர்கள், மரவேலை செய்பவர்கள் உள்ளிட்ட பலரையும் குறிவைத்துப் பல்வேறு தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன. இதையடுத்து அங்கு வசித்துவந்த வெளிமாநிலத்தவர்கள் பலரும் மூட்டை முடிச்சுகளோடு தங்கள் சொந்த மாநிலங்களுக்குப் படையெடுக்கத் தொடங்கியிருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிமாநிலத்தவர்களைக் கண்டறிந்து, அவர்களைப் பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்துச் சென்றுகொண்டிருக்கிறது ராணுவம்.
இந்த நிலையில், இது குறித்து ஆய்வுசெய்ய வரும், அக்டோபர் 23, 24-ம் தேதிகளில் ஜம்மு காஷ்மீருக்குச் செல்லவிருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. மேலும், துணை நிலை ஆளுநருடனும் காஷ்மீர் தாக்குதல்கள் குறித்து, அவர் ஆலோசனை மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிகிறது. ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதன்முறையாக அங்கு செல்கிறார் அமித் ஷா என்பது குறிப்பிடத்தக்கது.Jammu Kashmir
Also Read: காஷ்மீர்: பள்ளிக்குக்குள் நுழைந்து இரண்டு ஆசிரியர்களைச் சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்!
வெளிமாநிலத்தவர்கள் குறிவைத்துக் கொல்லப்படுவது ஏன்?
``கடந்த இரண்டு வாரங்களில் ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட 11 பேரில் ஐந்து பேர் வெளிமாநிலத்தவர்கள் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. கொரோனா இரண்டாம் அலை முடிந்த பின்னர், பல மாநிலங்களிலிருந்தும் தொழில் செய்வதற்காக ஜம்மு காஷ்மீருக்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. அதை விரும்பாத தீவிரவாத அமைப்புகள் வெளிமாநிலத்தவர்களைக் குறிவைத்துத் தாக்குகிறது.
காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தபோது, அங்கு வெளிமாநிலத்தவர்களால் நிலம் வாங்க முடியாது. ஆனால், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னர், அங்கு யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம், தொழில் செய்யலாம் என்ற நிலை ஏற்பட்டது. அங்கு வசிக்கும் மக்களில் பலரும் இதை விரும்பவில்லை. தீவிரவாத அமைப்புகளும் இதைக் கொஞ்சமும் விரும்பவில்லை. இதன் காரணமாகத்தான் தீவிரவாதிகள், தற்போது வெளிமாநிலத்தவர்கள்மீது தாக்குதல் நடத்திவருகின்றன. இனி வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீருக்குள் வர பயப்பட வேண்டும் என்கிற எண்ணத்தில்தான் இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருகின்றன'' என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
http://dlvr.it/SB04SV
Thursday, 21 October 2021
Home »
» `11 பேரில் ஐந்து பேர்' காஷ்மீரில் குறிவைத்துக் கொல்லப்படும் வெளிமாநிலத்தவர்கள் - காரணம் என்ன?!