கர்நாடகாவில் உணவில் விஷம் கலந்து கொடுத்து 20 குரங்குகளை கொன்ற சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் புறநகர் பகுதியில் பெரிய சாக்கு மூட்டை ஒன்று மர்மமான முறையில் கிடந்தது. அதைப்பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல்துறையினரும், வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து அந்த சாக்கு மூட்டையை கைப்பற்றி பிரித்து பார்த்தனர். அப்போது அந்த சாக்கு மூட்டையில் 20-க்கும் மேற்பட்ட குரங்குகளின் உடல்கள் இருந்தன. விசாரணையில், அந்த குரங்குகளை மர்ம நபர்கள் உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று உடல்களை சாக்கு பையில் திணித்து கொண்டு வந்து வீசிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் குரங்குகளின் உடல்களை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் குரங்குகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து கல்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து குரங்குகளை கொன்ற மர்ம நபர்களை தேடிவருகிறார்கள். கர்நாடகாவில் கடந்த மூன்று மாதங்களில் நடக்கும் மூன்றாவது சம்பவம் இதுவாகும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹாசன் மாவட்டத்தில் 38 குரங்குகள் விஷம் வைத்து கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. குடியிருப்புப் பகுதிகளில் குரங்குகள் இடையூறு செய்தால் பொதுமக்கள் வனத்துறையிடம் தகவல் தெரிவிக்கலாம். வனத்துறையினர் குரங்குகளை பிடித்து வேறிடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுப்பார்கள். எந்தவொரு உயிரினத்தையும் விஷம் வைத்து கொல்வது சட்டப்படி குற்றமாகும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதையும் படிக்க: நாகை மீனவன் யூடியூபர்ஸ் வீடுகளில் நடந்த ரெய்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!
http://dlvr.it/S8jX6G
Friday, 1 October 2021
Home »
» கர்நாடகா: விஷம் வைத்து கொல்லப்பட்ட 20 குரங்குகள்!