மியூச்சுவல் ஃபண்ட் மூலமாக பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என கடந்த வாரம் முடித்திருந்தோம். மியூச்சுவல் ஃபண்ட் குறித்த அடிப்படையை முதலில் பார்ப்போம். ஒவ்வொரு முதலீட்டுக்கும் ஒரு தன்மை இருக்கிறது. வங்கியில் நீங்கள் முதலீடு செய்தால் வரும் அதே வருமானம்தான் நான் முதலீடு செய்தாலும் எனக்கு வரும். இதேபோல தங்கம் உள்ளிட்ட பெரும்பாலான முதலீட்டு திட்டங்களிலும் அடிப்படை ஒன்றுதான். ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் என்பது ஒரு டூல். இந்த டூல் மூலமாக அனைத்து வகையான முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம், கடன் சந்தையில் முதலீடு செய்யலாம் (புரிதலுக்காக சொல்ல வேண்டும் என்றால் ஃபிக்சட் டெபாசிட் போன்ற ஓரளவுக்கு நிலையான வருமானம் தரும் திட்டங்கள்), தங்கத்தில் முதலீடு செய்யலாம், ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யலாம், வெளிநாட்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்யலாம் என பல வகையான வாய்ப்புகள் இருக்கின்றன. சிறு முதலீட்டாளர்களாகிய நாம், முதலீடு செய்யும் அந்தப் பணத்தை எந்த நோக்கத்துக்காக முதலீடு செய்தோமோ, அதற்கு ஏற்ப முதலீடு செய்து லாபம் பெறலாம். ஏன் சிறந்தது? - பங்குச்சந்தையில் நுழைய விரும்பும் ஆரம்பகட்ட முதலீட்டாளர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் சிறந்தது. உதாரணத்துக்கு ரூ.10,000-ஐ முதலீடு செய்ய திட்டமிட்டிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். இந்த 10,000 ரூபாயில் இரண்டு அல்லது மூன்று பங்குகள் மட்டுமே முதலீடு செய்ய முடியும். அந்த மூன்று பங்குகளும் அதிக ஏற்றத்தை கொடுக்கலாம். ஒருவேளை உங்களின் தேர்வு தவறாக இருக்கும் பட்சத்தில் மூன்று பங்குகளில் செய்துள்ள முதலீடு நஷ்டமடையும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட்களில் செய்துள்ள முதலீடும் நஷ்டமடையும் வாய்ப்பு இருக்கிறது என்றாலும், நேரடியாக பங்குச்சந்தையிலும் முதலீடு செய்வதை விட ஒப்பீட்டளவில் நஷ்டம் குறைவு. மியூச்சுவல் ஃபண்டில் நீங்கள் 1,000 ரூபாய் முதலீடு செய்தாலும் அந்தத் தொகை, பல பங்குகளில் முதலீடு செய்யப்படும். பல துறை சார்ந்த பங்குகள் உள்ளன. நிதி, வங்கி, சிமென்ட், சுகர், ஸ்டீல், ஐடி, டெக்னாலஜி, ரியல் எஸ்டேட் எல பல துறைகள் உள்ளன. முதலீடு செய்யப்படும் 1,000 ரூபாயை தேர்ந்தெடுத்த பல துறைகளில் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். இத்தனை பங்குகளில் முதலீடு செய்ய வேண்டும் என்னும் கட்டாயம் கிடையாது என்றாலும், தோராயமாக 40-க்கும் மேற்பட்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும். பல துறை மற்றும் பல பங்குகளில் முதலீடு செய்திருப்பதால் ஒட்டுமொத்த முதலீடும் சரிவதற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயத்தில் நீண்ட காலத்தில் ஃபிக்ஸட் டெபாசிட்டை விட அதிக வருமானம் கொடுப்பதற்கு பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் வாய்ப்பு உள்ளது. எந்த வகையான ஃபண்ட்? - 300 சதவீத வருமானம் கொடுத்திருக்கும் ஃபண்ட் என செய்திகளிலோ அல்லது சமூக வலைதளங்களிலோ நீங்கள் பார்த்திருக்கக் கூடும். இது உண்மையா என்றால் உண்மைதான். கொரோனா குறித்த செய்தி வெளியான சமயத்தில் கடந்த மார்ச் மாதம் பங்குச்சந்தையில் பெரும் சரிவில் இருந்தன. அப்போது முதல் தற்போது வரை சில மியூச்சுவல் ஃபண்ட்கள் 300 சதவீத வருமானம் கொடுத்துள்ளன. ஆனால், இந்த ஃபண்ட்கள் ஸ்மால்கேப் பிரிவைச் சார்ந்தவை. பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்களில் மூன்று முக்கிய பிரிவுகள் உள்ளன. லார்ஜ் கேப் ஃபண்ட்கள், மிட்கேப் ஃபண்ட்கள் மற்றும் ஸ்மால்கேப் ஃபண்ட்கள் என உள்ளன. (இது தவர வேறு சிலவும் உள்ளன.) லார்ஜ் கேப் ஃபண்ட் என்பது சந்தை மதிப்பில் அதிகம் உள்ள பங்குகளில் முதலீடு செய்யப்படும். மிட்கேப் என்பது நடுத்தர நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும். ஸ்மால்கேப் என்பது சிறிய நிறுவன பங்குகளில் முதலீடு செய்யப்படும். சிறிய நிறுவனங்களில் அதாவது ஸ்மால்கேப் ஃபண்ட்களில் வளர்ச்சிக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும். அதேபோல சரிவுக்கான வாய்ப்பும் அதிகமாக இருக்கும். ஆனால், அதிக ரிஸ்க் எடுக்க விரும்பும் முதலீட்டாளர்கள் மட்டுமே ஸ்மால்கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். அதாவது, மிக நீண்ட காலம் என்பதை இலக்காக கொண்டால் ஸ்மால்கேப் ஃபண்ட்களில் முதலீடு செய்யலாம். லார்ஜ் கேப் ஃபண்ட்கள் என்பது அதிக சந்தை மதிப்பை கொண்ட பங்குகளில் முதலீடு செய்யப்படும். இந்த பங்குகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பும் சீராக இருக்கும், ஏற்றமும் சீராக இருக்கும். அதற்காக இந்த வகை ஃபண்ட்களில் செய்யப்பட்டுள்ள முதலீட்டில் சரிவு ஏற்படாது என சொல்ல முடியாது. பங்குச்சந்தை சார்ந்த எந்த முதலீடாக இருந்தாலும் வாங்கிய விலையில் இருந்து குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதை முதலீட்டாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஹைபிரிட் மியூச்சுவல் பண்ட்களும் உள்ளன. அதாவது, பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை இரண்டிலும் கலந்து செய்யப்படும் முதலீடுகளும் உள்ளன. இதுபோல மியூச்சுவல் ஃபண்ட்களில் பல வகைகள் உள்ளன. முதலீட்டாளர்களின் ரிஸ்க் எடுக்கும் அளவுக்கு ஏற்ப நிதி ஆலோசகர்களின் உதவியுடன் ஃபண்ட்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். இன்னும் சில வாரங்களுக்குப் பிறகு மியூச்சுவல் ஃபண்ட் வகைகள் குறித்து மட்டும் பார்க்கலாம். நீச்சல் அடிப்பது குறித்து எவ்வளவுதான் படித்தாலும் கிணற்றில் குதித்தால் மட்டுமே நீச்சல் கற்றுக்கொள்ள முடியும். அதுபோல மியூச்சுவல் ஃபண்ட் குறித்து பலவற்றை படிப்பதை விட ஒரு சிறு தொகையை முதலீடு செய்தால்தான் எளிமையாக புரிந்துகொள்ள முடியும். சில ஃபண்ட்களில் ரூ.100 கூட குறைந்தபட்ச முதலீடு செய்ய முடியும். முயற்சி செய்து பாருங்களேன். முந்தைய அத்தியாயம்: பணம் பண்ண ப்ளான் B - 4: பங்குச்சந்தையில் நுழைய விழைவோருக்கு ஓர் அடிப்படை அலர்ட்!
http://dlvr.it/S9WXNz
Thursday, 14 October 2021
Home »
» பணம் பண்ண ப்ளான் B - 5: மியூச்சுவல் ஃபண்ட் 'சேஃப்டி'யும் அடிப்படை புரிதல்களும்