லக்கிம்பூர் விபத்து:
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள பன்வீர்பூர் கிராமத்தில் கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார். துணை முதல்வரை வரவேற்க மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா தனது வாகனத்தில் சென்றார். உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இந்நிலையில் விழாவில் கலந்துகொள்ள வந்த துணை முதல்வருக்குக் கறுப்புக்கொடி காட்டி தங்களின் எதிர்ப்பைக் காட்ட விவசாயிகள் முடிவு செய்திருந்தனர்.லக்கிம்பூர் பலியான விவசாயிகள்
இந்த நிலையில், விழாவுக்குச் சென்றுகொண்டிருந்த மத்திய அமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா வாகனத்தை லக்கிம்பூர் என்ற இடத்தில் மறித்து கறுப்புக் கொடி காட்டி, கோஷங்கள் எழுப்பப்பட்டிருக்கிறது. அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு வாகனம் அங்கிருந்த விவசாயிகளை இடித்துத் தள்ளிவிட்டு வேகமாகச் சென்றது. அந்த வாகனம் மோதியதில் நான்கு விவசாயிகள் உயிரிழந்தனர். ஆத்திரமடைந்த விவசாயிகள் இடித்துச் சென்ற வாகனத்தை அடித்து நொறுக்கித் தீயிட்டுக் கொளுத்தினர். இதனால் அந்த இடத்தில் மிகவும் பதற்றமான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கட்டுப்படுத்தியபோது அங்கு வன்முறை பெரியளவில் வெடித்திருக்கிறது. துப்பாக்கிச் சூடும் நடந்தது, இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். விவசாயிகள், பாஜக உறுப்பினர், ஒரு பத்திரிகையாளரையும் சேர்த்து மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.லக்கிம்பூர்
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரியங்கா காந்தியும், உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கச் சென்றனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதோடு கைது செய்து தடுப்புக் காவலிலும், வீட்டுக் காவலிலும் வைத்தனர். போராட்டங்கள் வலுப்பெற்று வந்த நிலையில், நடைபெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. காவல்துறையினர் இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஷிஷ் மிஸ்ரா விசாரணைக்கு ஆஜராகவில்லை.
சாட்டையைச் சுழற்றிய உச்ச நீதிமன்றம்:
இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கடந்த 6-ம் தேதி தாமாக முன்வந்து இந்த வழக்கு விசாரணையை மேற்கொண்டது. உத்தரப்பிரதேச அரசு, லக்கிம்பூரில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கையை 8-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. அடுத்த நாள் நடைபெற்ற விசாரணையில், ``வழக்கில் ஐபிசி-302 பிரிவில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், இதுவரை யாரையும் கைது செய்யவில்லை. மற்ற வழக்குகளிலும் இப்படி தான் நடந்துகொள்வீர்களா? கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர், சாதாரண நபராக இருந்தால் இந்நேரம் கைது செய்திருக்க மாட்டீர்களா? இவ்வளவு அலட்சியமாகத்தான் வழக்கைக் கையாள்வீர்களா?'' என்று நீதிபதிகள் சரமாரியாகக் கேள்வியெழுப்பினர்.உச்ச நீதிமன்றம்
அப்போது உத்தரப்பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், `` ஆஷிஷ் மிஸ்ரா காவல்துறையில் ஆஜராக 9-ம் தேதி காலை 11 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் ஆஜராகவில்லை என்றால், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்'' என்று கூறினார். அப்போது பேசிய நீதிபதி, ``கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியாகக் குற்றம் சாட்டப்பட்ட நபரைக் கைது செய்யாமல், இன்று ஆஜராகுங்கள், நாளை ஆஜராகுங்கள் என்று கெஞ்சிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த வழக்கில் உ.பி அரசின் நடவடிக்கைகள் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. இந்த விவகாரத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமானது. பொறுப்பான அரசு மற்றும் காவல்துறையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்றனர்.
மேலும், ``இந்த குற்றச் சம்பவத்தில் யார் சம்பந்தப்பட்டிருந்தாலும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டம் நடவடிக்கை எடுக்கும். மேலும், இந்த வழக்கின் ஆதாரங்களையும், ஆவணங்களையும் அழிந்துவிடாமல் பாதுகாக்கவேண்டும். தற்போதைக்கு இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற முடியாது" என்று கூறி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் ஹிமா ஹோலி, சூர்யகாந்த் ஆகியோர் கொண்ட அமர்வு வழக்கை வரும் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.ஆஷிஷ் மிஸ்ரா கைது
கைது செய்யப்பட்ட ஆஷிஷ் மிஸ்ரா:
இந்த நிலையில் ஆஷிஷ் மிஸ்ரா காவல்துறை விசாரணைக்கு ஆஜரானார். 12 மணிநேரம் தொடர் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் ஆஷிஷ் மிஸ்ரா போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் ஆஷிஷ் மிஸ்ராவைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அடுத்ததாக அவர், 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். அவரைக் காவல்துறையினர் மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Also Read: உத்தரப்பிரதேச தேர்தல்: லக்கிம்பூர் சம்பவத்தால் யோகிக்கும், பாஜக-வுக்கும் பின்னடைவா?
லக்கிம்பூர் நடைபெற்ற சம்பவம் குறித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த்துடன் பேசக் காங்கிரஸ் கட்சி சார்பில் நேரம் கேட்கப்பட்டிருந்தது. இன்று, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுல்காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், லக்கிம்பூர் சம்பவத்தில் நியமான விசாரணை நடத்தவேண்டும் என்று வலியுறுத்தி மனு அளித்தனர். மேலும் 11-ம் தேதி மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணிக் கட்சிகளான சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினர் சார்பில் ஒரு நாள் முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கடைகள் மூடப்பட்டு போராட்டம் நடைபெற்றது.லக்கிம்பூர்
லக்கிம்பூர் வன்முறைச் சம்பவத்தில், உச்ச நீதிமன்ற தலையிட்டுக்கு முன்புவரை மெத்தனமாகச் செயல்பட்டு வந்த உத்தரப்பிரதேச அரசு. உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்த பிறகு அடுத்தடுத்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் உ.பி-அரசின் அடுத்தகட்ட செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது விசாரணையின் முடிவில்தான் தெரியவரும்.
http://dlvr.it/S9WXLD
Thursday, 14 October 2021
Home »
» உச்ச நீதிமன்றம் தலையிடாவிட்டால் லக்கிம்பூர் சம்பவ வழக்கின் திசை மாறியிருக்குமா?