கடவுளின் தேசமான கேரளாவை, கொடிய நோய்த் தாக்குதலும், இயற்கை இடர்பாடுகளும் புரட்டிப்போட்டு வருகிறது. அதை இங்கே விரிவாக பார்க்கலாம் கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளாவில் நிஃபா வைரஸ், பறவைக் காய்ச்சல் துவங்கி கொரோனா வரை கேரள மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் நிலையில், இயற்கை சீற்றங்களும், பேரிடர்களும் கடவுளின் தேசத்தை புரட்டிப் போட்டு வருகின்றன. கடந்த 2018 ஆம் ஆண்டு பெய்த தென்மேற்கு பருவமழையால் வெள்ளக்காடாக காட்சியளித்த கேரளாவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் உறவுகளையும் உடமைகளையும் இழந்தனர். சாலைகள் துண்டிக்கப்பட்டதோடு வீடுகள் மற்றும் கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. அந்த பிரளயத்தில் இருந்து மக்கள் மீள்வதற்குள், 2019ஆம் ஆண்டும் வடகிழக்கு பருவமழை கன மழையாக பெய்து இரண்டாவது வெள்ள பிரளயத்தை உருவாக்கியது. இதில், 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1.5 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அடுத்தடுத் தடுத்த ஒரே ஆண்டில் இரண்டு வெள்ளப் பிரளயங்களை எதிர்கொண்ட கேரள மக்கள், இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வைப்பதிலும் வெள்ளச் சேதங்களை புனரமைப்பதிலும் திணறித்தான் போனது. அதேபோல் கடந்த 2020ஆம் ஆண்டும் பெய்த கன மழையால் மூணாறு ராஜமலை அருகே பெட்டி முடியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 82 பேர் உயிரிழந்தனர். இப்படி இயற்கை பேரிடர்களில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்த கேரளா கொரோனா தொற்றால் சின்னா பின்னமானது. இந்தியாவிலேயே முதன் முறையாக கொரோனா தொற்று பதிவான மாநிலம் என்ற முத்திரையோடு இரண்டு ஆண்டுகளைக் கடந்து, தற்போது வரையிலும் அந்த தொற்றில் இருந்து மக்கள் மீளமுடியாமல் தவித்து வருகின்றனர். தற்போது வரை கொரோனாவால் 27 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஏற்பட்ட இடர்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் கேரள மக்களுக்கு பேரிடியாய் தற்போது கொட்டித்தீர்க்கும் கனமழை மாறியிருக்கிறது. மாநிலம் முழுக்க பரவலாக கனமழை பெய்தாலும் ஐந்து மாவட்டங்களில் இந்த மழை அதிதீவிர கன மழையாக பெய்து வருகிறது. இதனால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உறைந்து போயிருக்கின்றனர். குறிப்பாக கோட்டயம், பத்தனம்திட்டா, எர்ளாகுளம், இடுக்கி, திருச்சூர், ஆகிய ஐந்து மாவட்டங்களில் மழை இடைவிடாமல் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. ஆறுகளில் பெருக்கெடுக்கும் வெள்ளம் பாலங்களை மூழ்கடித்து சென்று கொண்டிருக்கிறது. மாநிலம் முழுக்க அணைகள் பரவலாக நிரம்பி வருகின்றன. அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டால் வெள்ளச்சேதங்கள் இன்னும் அதிகமாகும் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய அணையான 2,403 அடி உயரம் கொண்ட இடுக்கி அணையின் நீர்மட்டம் 2,392 அடியாக உயர்ந்து முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கைன் விடுக்கப்பட்டுள்ளது காலையில் இருந்து பெய்த கன மழையால் கோட்டயம் மாவட்டம் எருமேலி, முண்டக்கயம் சாலை போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளது. திருச்சூர் சாலக்குடியில் சாலைகளில் ஆற்று வெள்ளம் புகுந்துள்ளது. பத்தனம்திட்டாவில் கடந்த 12மணி நேரத்தில் 10 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இடுக்கி கொக்கையாறு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் மூன்று வீடுகள் மண்ணில் புதைந்தன. 10 பேரை காணவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டயம் தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளம் புகுந்ததால் வாகன போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. பாலா - ஈராற்றுபேட்டை சாலையும் துண்டிக்கப்பட்டுள்ளன. மழை துவங்கியபோதே கடவுளின் தேசம் வெள்ளத்தால் சூழப்பட்டிருக்கும் நிலையில், அடுத்த 24 மணி நெரத்திற்கு பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி8, திருச்சூர் மாவட்டங்களுக்கு அதி தீவிர கன மழைக்கான 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையும், கண்ணூர், காசர்கோடு தவிர இதர ஏழு மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கை விடுத்த திருவனந்தபுரம் வானிலை ஆய்வு மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது. மலையும் மலை சார்ந்த பகுதியான இடுக்கியில் இரவு நேர வாகன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தாலுகா அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் 24 மணி நேரமும் இயங்கும் வெள்ளக்கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளன. வெள்ள பாதிப்பில் இருந்து மீட்கப்படும் மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க கட்டிடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தேவையான உணவு மற்றும் உடைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு மாநிலம் முழுவதும் மாவட்ட நிர்வாகங்கள் உஷார்படுத்தப் பட்டுள்ளன. வெள்ள பாதிப்பு பகுதிகளில் பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். யார் கண் பட்டதோ அழகு கேரளா, ஆண்டு தோறும் நோய் தொற்றாலும் பேரிடராலும் அலங்கோலமாகி வருகிறது. கேரள மக்களும் இடைவிடா துயரத்திலும் துன்பத்திலும் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றனர். அச்சமும் பீதியும் உறக்கம் கலைக்கும் விஷயமாக மாறியிருக்கின்றன. கலங்கும் கடவுளின் தேசத்தின் தொடர் துன்பியல் நிகழ்வுகள் விழிகளில் அருவியை வரவழைத்துச் செல்கின்றன. இதிலிருந்து மீள இயற்கை தான் இரக்கம் காட்ட வேண்டும்!
http://dlvr.it/S9k5lg
Sunday, 17 October 2021
Home »
» கன மழையால் கதிகலங்கும் 'கடவுளின் தேசம்' இரக்கம் காட்டுமா இயற்கை?'