கடந்த சில வருடங்களாக அழகிய மலைத்தொடரான மூணார், அதன் அழகை இழந்து இயற்கைப் பேரிடர்களால் பெரும் ஆபத்துக்களை சந்தித்து வருகிறது. இதன் பின்னணியில் கவனிக்கத்தக்க அரசியலை சில ஃபிளாஷ்பேக் சம்பவங்களோடு விரிவாகப் பார்ப்போம். கடந்த சில வருடங்களாக கேரளா இயற்கைப் பேரிடரின் கோரப்பிடியில் சிக்கியிருக்கிறது. மழை, பெருவெள்ளம் அதைத் தொடர்ந்து ஏற்படும் நிலச்சரிவு கேரளத்தின் மலையக மாவட்டங்களான இடுக்கி, வயநாடு போன்ற பகுதிகளில் நீங்கா வடுக்களை ஏற்படுத்தி செல்கின்றன. கடந்த ஆண்டு இடுக்கியின் பெட்டிமுடி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட பெரும் மலைச்சரிவில் உயிரிழந்த மக்கள் மட்டும் 80 பேர். இறந்த அத்தனை பேரும் தமிழர்கள். இதேபோல் வயநாட்டின் புதுமலா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 11 குடும்பங்கள் மண்ணோடு மண்ணாகி போயினர். அதற்கு முந்தைய ஆண்டு கவலப்பராவில் நடந்த நிலச்சரிவில் பறிபோனது 59 உயிர்கள். இதோ இப்போது, அதே இடுக்கி மாவட்டம் கூட்டிக்கல் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் மரணித்துள்ளனர். நேற்று ஒரேநாளில் மட்டும் 21 பேர் வரை பலி என்று சொல்லப்படுகிறது. ஆண்டுதோறும் மூணாரைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழைக்காலத்தில் நிலச்சரிவு தொடர் கதையாகி வருகிறது. இயற்கையின் பேரிடர்களால் நிலச்சரிவு ஏற்படுவதாக நம்மில் பலரும் நினைப்பது இயல்புதான். ஆனால், மூணார் மற்றும் கேரளத்தின் மலையக மாவட்டங்களில் ஏற்படும் நிலச்சரிவுகளுக்கு இயற்கை மட்டும் காரணமல்ல என்பதுதான் கசப்பான உண்மை. இந்தக் கசப்பான உண்மையில் சில அரசியல் பின்னணிகளும் இருக்கின்றன. அதனை தெரிந்துகொள்ள, தேவிகுளம் பகுதியை தெரிந்துகொள்வதும் அவசியம். இடுக்கி மாவட்டத்தில் இருக்கும் ஒரு தாலுகா தேவிகுளம். மூணாரிலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கி.மீ தள்ளி இருக்கும் அழகிய மலைப்பகுதியான தேவிகுளம் தாலுகா நிர்வாகத்தின் கீழ் மூணார் நகரம் வருகிறது. எல்லா மலைத் தொடர்களும் சந்திக்கும் அதே பிரச்னைதான் மூணார் மற்றும் தேவிகுளம் பகுதியின் தலையாய பிரச்னையும்கூட. அது ஆக்கிரமிப்புக்களும், கல் குவாரிகளும்தான். ஒட்டுமொத்த கேரளத்தின் பிரச்னையும் இதுதான். கடந்த 2019-ல் கேரள வன ஆராய்ச்சி நிறுவனம் (KFRI) நடத்திய ஆய்வில் வெளிவந்த தகவல்: "கேரளத்தில் அனுமதி அளிக்கப்பட்ட கல் குவாரிகள் எண்ணிக்கை 750 மட்டும்தான். ஆனால் மொத்தம் 5,924 குவாரிகள் செயல்படுகின்றன. அனைத்தும் அனுமதி பெறாமல் விதிகளை மீறி செயல்படுகின்றன. அதிலும் பெரும்பாலான குவாரிகள் இடுக்கி, வயநாடு, மலப்புரம் ஆகிய அதிக மலைத்தொடர் கொண்ட மாவட்டங்களில் செயல்படுகின்றன". குவாரிகள் மட்டுமல்ல, மூணாரில் அதிகரித்து இருக்கும் ஆக்கிரமிப்புகளும் பெரும் கவலை அளிக்கக் கூடிய விஷயம். தேவிகுளம் தாலுகா சப் கலெக்டர்களாக வருபவர்கள் இதுபோன்ற விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள்மீது நடவடிக்கை எடுப்பது வழக்கம். அப்படி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் டிரான்ஃஸ்பர் செய்யப்படுவதும் வழக்கமான ஒன்றுதான். இதற்கு ஓர் உதாரணம்... ஐஏஎஸ் அதிகாரி ரேணு ராஜ்: கேரளத்தில் இருக்கும் இளம் ஐஏஎஸ் அதிகாரிகளில் ஒருவர் இந்த ரேணு ராஜ். மருத்துவராக இருந்து கலெக்டராக மாறியவர். 2014 பேட்ச்சில் இரண்டாமிடம் பிடித்தவர். கடந்த 2019-ம் ஆண்டின் தொடக்கத்தில்தான் ரேணு தேவிகுளம் தாலுகா சப்-கலெக்டராக பணியமர்த்தப்பட்டார். பணியமர்த்தப்பட்ட கொஞ்ச நாட்களில் மூணார், தேவிகுளம் பகுதியில் இருந்த ஆக்கிரமிப்புகளையும், சட்டத்துக்கு புறம்பாக செயல்பட்ட குவாரிகளை களையெடுத்தார். ஆக்கிரமிப்புகளை யார் செய்திருந்தார்கள் என்பதை பற்றியெல்லாம் ரேணு கண்டுகொள்ளவில்லை. விதிகளை மீறி இருந்தது என்பது தெரிந்தால் நடவடிக்கை உறுதி என செயல்பட்ட ரேணு தான் இருந்த 9 மாதங்களில் அகற்றிய ஆக்கிரமிப்புகள் மட்டும் 90-க்கும் அதிகம். இதில் அரசு கட்டிடங்களும் அடக்கம். ஒருமுறை ஆளும் கேரளாவை ஆளும் இடதுசாரி கட்சியின் பிரமுகரும், இடுக்கி தொகுதி முன்னாள் எம்.பி-யுமான ஜாய்ஸ் ஜார்ஜ் குடும்பம் ஆக்கிரமித்த 20 ஏக்கர் சொத்துக்களை மீட்டெடுத்ததுடன், அதே சி.பி.எம் கட்சியின் எம்.எல்.ஏ ராஜேந்திரனை இதே காரணத்துக்காக எதிர்த்தற்காகவும் ஒன்பதே மாதங்களில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் மட்டுமல்ல, கடந்த 9 வருடங்களில் விதிகளை மீறிய குவாரிகள், கட்டிடங்கள்மீது நடவடிக்கை எடுத்ததற்காக டிரான்ஸ்ஃபர் ஆன தேவிகுளம் சப்-கலெக்டர்கள் எண்ணிக்கை மட்டும் 16. 16-வது அதிகாரி தான் ரேணு ராஜ். அதிலும், பினராயி விஜயன் தலைமையிலான சி.பி.எம் ஆட்சிக்கு வந்த 2016-ம் ஆண்டிலிருந்து கணக்கெடுத்து பார்த்தால், இதுவரை 5 சப்-கலெக்டர்கள் தங்களின் நேர்மையான பணிக்காக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 16 பேரில் பத்திரிகையாளரை கார் ஏற்றி விபத்துக்குள்ளான வழக்கில் சிறைக் கம்பிகளை எண்ணிய ஐ.ஏ.எஸ் அதிகாரி ஸ்ரீராம் வெங்கடராமன் மட்டுமே தேவிகுளத்தில் ஒரு வருடம் பணிபுரிந்த சப்-கலெக்டர். மற்ற அனைவரும் அதற்கும் குறைவான காலம் மட்டுமே பணிபுரிந்தவர்கள். அதிலும் என்டிஎல் ரெட்டி எனும் ஐ.ஏ.எஸ் அதிகாரி இங்கு ஒரு மாதம் மட்டுமே சப்-கலெக்டராக இருந்தார் என்பது சோகத்தின் உச்சம். இந்த மலை வாசஸ்தலத்தை முடக்கும் புற்றுநோய் போன்ற ஒரு விஷயம்தான் நில அபகரிப்பு. ஆனால், மூணார் பகுதிகளில் நிலவும் நில அபகரிப்புதான் அங்கு நடக்கும் அரசியல். மூணார் மற்றும் இடுக்கி போன்ற மலை வாசஸ்தலங்களில் கட்சி பாகுபாடுகளே இல்லாமல், நில அபகரிப்பு நடந்து வருகிறது. இதுவரை பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு ஐஏஎஸ் அதிகாரிகள் மாறுதலுக்கு காரணமாக அமைந்தவர்களும் கேரளாவை மாற்றி மாற்றி ஆளும் காங்கிரஸ், சிபிஎம் கட்சி பிரமுகர்கள்தான் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். இந்த ஆக்கிரமிப்பின் விலையைத்தான் கடந்த நான்கு வருடங்களாக, மூணார் போன்ற கேரளாவின் மலையக மாவட்டங்கள் தமிழர்கள் உயிர்கள் மூலமாக கொடுத்து வருகின்றன. கடந்த ஆண்டு பெட்டிமுடி நிலச்சரிவு, அதற்கு முந்தைய ஆண்டு பெருவெள்ளம், இந்த ஆண்டு மீண்டும் நிலச்சரிவு என மூணார் கொஞ்சம் கொஞ்சம் சிதைந்து வருகிறது. மூணார், தமிழக மக்களிடையே பரிச்சயமான இடம். மூணார் தமிழக மக்களுக்கு வாழ்வு அளிக்கும் ஓர் இடமும்கூட. இங்கிருக்கும் எஸ்டேட்களில் பணிபுரியும் தொழிலாளிகளில் பெரும்பாலானோர் தென்தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இங்கிருக்கும் தேயிலை, ஏலக்காய் எஸ்டேட் மூலம்தான் தேனி, கம்பம் மக்கள் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதையெல்லாம் தாண்டி, ரம்மியமான மலைகள், அழகான மேகம் தவழும் மலைமுகடுகள், இயற்கை காற்று என மூணாரின் அழகை அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மில் பலரும் மூணாருக்கு சென்று இதனை ரசித்திருப்போம். இப்படிப்பட்ட அழகிய பசுமை நிறைந்த மலைத்தொடர் ஆக்கிரமிப்பு, விதிகளை மீறிய குவாரிகள் அதன் பின்னணியில் இருக்கும் அரசியலால் கடந்த சில ஆண்டுகளாக பல ஆபத்துகளை சந்தித்து வருவது கவலைக்குரியது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். - மலையரசு | தொடர்புடைய செய்தி: கேரளாவில் பெய்யும் கனமழை: இடுக்கி அணைக்கு இரண்டாம்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை |
http://dlvr.it/S9rNVH
Tuesday, 19 October 2021
Home »
» மூணார் நிலச்சரிவும், ஐஏஎஸ் பணியிட மாற்ற அரசியலும் - முந்தைய 'சம்பவங்கள்' சொல்வதென்ன?