நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பாக கடந்த 3-ம் தேதி கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரின் ஜாமீன் மனு புதன்கிழமை தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து ஷாருக் கான் மும்பை உயர் நீதிமன்றத்தில் தனது மகனுக்கு ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனு அவசர வழக்காக வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் வரும் 26-ம் தேதி முழுமையாக விசாரணை நடத்தப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. ஆர்யன் கைதுசெய்யப்பட்டதிலிருந்து மும்பையிலுள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை உறவினர்கள் நேரில் சென்று பார்க்க தடை விதிக்கப்பட்டிருந்தது. கைதிகள் தங்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேச அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அந்த வசதியைப் பயன்படுத்தி ஆர்யன், தன் பெற்றோருடன் வீடியோ காலில் பேசினார். ஆர்யன் கான்
புதன்கிழமை முதல் கைதிகளை நேரில் சந்தித்துப் பேச அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து வியாழக்கிழமை காலையிலேயே ஷாருக் கான் ஆர்தர் ரோடு சிறைக்குச் சென்று தன் மகனை பார்வையாளர் பகுதியில் சந்தித்துப் பேசினார். இருவருக்கும் இடையே கண்ணாடித் தடுப்பு ஒன்று இருந்தது. இதையடுத்து இருவரும் இன்டர்காம் மூலம் 16 முதல் 18 நிமிடம் வரை பேசினர். ஷாருக் கான் பேசியபோது அவரின் அருகில் சிறை அதிகாரி ஒருவர் இருந்தார்.
ஷாருக் கான் சிறையிலிருந்து வெளியில் வந்ததும் சிறைக்கு வெளியில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் ஷாருக் கானை சூழ்ந்துகொண்டனர். ஷாருக் கானை அவருடைய பாதுகாவலர்கள் பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றனர்.
ஆர்யனுக்கு சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் வழங்காதது ஏன்?
ஆர்யனுக்கு சிறப்பு நீதிமன்றம் ஏன் ஜாமீன் கொடுக்கவில்லை என்பதை நீதிபதி வி.வி.பாட்டீல் தனது 18 பக்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அதில், ``ஆர்யனிடம் போதைப்பொருள் இல்லாவிட்டாலும், அவருடன் சென்ற அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் இருந்திருக்கிறது. இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமல்லாமல், கப்பல் பார்ட்டிக்கு சேர்ந்தே சென்றிருக்கின்றனர். இருவரும் போதைப்பொருள் குறித்து பேசியதை ஒப்புக்கொண்டிருக்கின்றனர். இதனால் அர்பாஸ் மெர்ச்சண்டிடம் போதைப்பொருள் இருப்பது ஆர்யனுக்கு தெரிந்திருக்கிறது. இந்த வழக்கில் ஆர்யனிடம் போதைப்பொருள் இல்லை. ஆனால் இரண்டாவது குற்றவாளியான அர்பாஸ் மெர்ச்சண்டிடம் 6 கிராம் சரஸ் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே, மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டவற்றை ஏற்க முடியாது.
Also Read: ஆர்யன் கான் ஜாமீன் மனு தள்ளுபடி: ``தீபாவளிக்காவது வெளியில் வருவாரா?" கௌரி கான் எதிர்பார்ப்பு
ஆர்யன் வாட்ஸ்அப்பில் பெயர் தெரியாத சிலருடன் போதைப்பொருள் தொடர்பாக சாட்டிங் செய்திருக்கிறார். இதன் மூலம் போதைப்பொருள் வியாபாரிகளுடன் ஆர்யன் தொடர்பில் இருந்திருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் போதைப்பொருளுடன் கப்பலில் பார்ட்டி நடத்த சிலர் வருவதாகத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவேதான் ரெய்டு நடத்தி போதைப்பொருளுடன் குற்றவாளிகளைக் கைதுசெய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் யாரிடமிருந்து போதைப்பொருள் கிடைத்தது என்று தெரிவித்துள்ளனர். அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்ததில் குற்றவாளிக்கு (ஆர்யன்) எதிராக வலுவான ஆதாரம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது’’ என்று நீதிபதி தெரிவித்திருக்கிறார்.ஆர்யன் கான்
ஆர்யன் சிறையிலிருந்து வெளியில் வந்ததும், குறைந்தது இரண்டு மாதங்களுக்கு அவரை வீட்டிலேயே வைத்திருக்க ஷாருக் கான், கௌரி கான் தம்பதி முடிவு செய்திருப்பதாக பாலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. குறிப்பாக இரவு பார்ட்டிகளுக்குச் செல்வது, இரவில் நண்பர்களைச் சந்திக்கச் செல்வது, விழாக்களுக்கு செல்வது உட்பட அவருடைய நண்பர்கள் கூடும் இடங்களுக்குச் செல்ல விடாமல் தடுத்து வைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸார், நடிகர் ஷாரூக் கான் வீட்டுக்கு வந்திருந்தனர். அவர்கள் ஷாருக் கானிடமும் விசாரணை நடத்தலாம் எனத் தெரிகிறது!
http://dlvr.it/SB3w2k
Friday, 22 October 2021
Home »
» மகன் ஆர்யன் கானை சிறைக்குச் சென்று சந்தித்த ஷாருக் கான்... வீட்டில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகள்!