`அனைவருக்கும் கல்வி' என்ற திட்டத்தின்படி கேரளாவில் எழுத்தறிவு தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. கடந்த வாரம் நடந்த எழுத்தறிவுக்கான தேர்வில் 100-க்கு 89 மதிப்பெண் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார் கோட்டயம் திருவஞ்சியூரைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி குட்டியம்மா. பொக்கை வாய் திறந்து அ, ஆ, இ, ஈ... என மலையாள அக்ஷரங்களை சொல்லிச் சொல்லி சுருக்கம் விழுந்த கைகளால் பதமாக எழுதுகிறார் குடியம்மா. தள்ளாத வயதிலும் தளராமல் படித்து எழுத்தறிவுத் தேர்வு எழுதி சாதித்துள்ளார் மூதாட்டி குட்டியம்மா. எழுத்துத் தேர்வில் மலையாளம் மற்றும் கணக்குப் பாடங்களில் தேர்வு எழுதிய குட்டியம்மா, இனி நான்காம் வகுப்பு தேர்வு எழுதும் தகுதியைப் பெற்றுள்ளார் குட்டியம்மா. இதுபற்றி கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி தனது முகநூல் மற்றும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து குட்டியம்மா வலைதளங்களில் வைரலானார்.குடும்பத்தினருடன் 104 வயது குட்டியம்மா
இதுபற்றி 104 வயது மூதாட்டி குட்டியம்மா கூறுகையில், "படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு சின்ன வயதிலேயே இருந்தது. ஆனால் அப்போது என்னால் பள்ளிக்குச் படிக்க முடியவில்லை. 104 வயதில் தேர்வு எழுதுவேன் என நான் நினைக்கவில்லை. எனக்கு நான்கு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். என் பிள்ளைகள் நீங்கள் படிக்க வேண்டும் எனக் கூறினார்கள். அதனால் நான் இன்னும் ஆர்வமாக படித்தேன். இப்போது கேரளத்தில் முதலிடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.
ஆசிரியர் ரெஹனா என்பவர்தான் குட்டியம்மாவுக்கு பாடம் எழுத்துச் சொல்லிக்கொடுத்தவர். ஆசிரியர் ரெஹனா கூறுகையில், "மலையாள செய்தித்தாள்களை வாசிக்கும் அளவுக்கு தெரிந்து வைத்திருந்த குட்டியம்மாவுக்கு எழுதத் தெரியாது. காலை மற்றும் மாலை நேரத்தில் நான் சென்று எழுத்துக்கள் கற்றுக்கொடுத்தேன். அவரும் ஆர்வமாகப் படித்தார். வயதான பெற்றோரை பாரமாக நினைத்து முதியோர் இல்லத்தில் சேர்க்கும் நிலை உள்ளது. இந்த நிலைமையை மாற்ற வயதானவர்கள் நேரத்தை பயனுள்ளதாக மாற்றி சாதிக்கலாம்" என்றார்.எழுத்து கற்றுக்கொடுத்த ஆசிரியர் ரெஹனாவுடன் குட்டியம்மா
குட்டியம்மாவுக்கு 16-வது வயதில் கோந்தி என்பவருடன் திருமணம் நடந்தது. கோந்தி ஆயுர்வேத மருந்துக் கடையில் வேலை செய்துவந்தார். குட்டியம்மாவின் கணவர் கோந்தி 2002-ல் மரணம் அடைந்தார். அதன் பிறகு பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் குட்டியம்மா இப்போது கேரளத்தை தாண்டி பிரபலம் அடைந்துவிட்டார்.
http://dlvr.it/SCbl9k
Tuesday, 16 November 2021
Home »
» ``சின்ன வயசுல படிக்கணும்னு ஆசைப்பட்டேன்" - 104 வயதில் 100 க்கு 89 மதிப்பெண் எடுத்த குட்டியம்மா