"இவ்வளவு சிரமப்பட்டு துணி நெய்து கொடுக்கிறீங்களே... அதுவும் லாபம் இல்லைன்னு சொல்றீங்களே... அப்புறம் ஏன் இந்தத் தொழில் செய்கிறீங்க?" "எங்களுக்கு இதாங்க தெரியும்." - இப்படித்தான் கடினமான கேள்விகளை எளிதாக அணுகும் கைத்தறி நெசவாளர்களின் வலி, தறியின் 'சடக் சடக்' சத்தத்திலேயே கேட்காமல் போய்விடுகிறது. விவசாயத்திற்கு புகழ்பெற்ற விழுப்புரம் மாவட்டத்தில் நெசவுத் தொழிலும் நிறைந்துள்ளது. இந்த மாவட்டத்தின் பல கிராமங்களில் நெசவாளர்கள் நிறைந்துள்ளனர். இந்தத் தொழிலில் சாதி, மதப் பாகுபாடு எதுவும் இல்லை. விசாலமான வீதியில பாதி நீளத்துக்கு சீலைபோல நூல் விரித்திருந்தார்கள். அங்கொருவர் இங்கொருவராக ஏதோ நூலை சரிசெய்து கொண்டிருந்தார்கள். 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தன் இடுப்பில் ஒரு பெரிய துண்டு கட்டிக் கொண்டு வேலை செய்துகொண்டிருந்தார். அவர் "என்ன செய்றீங்க" என்றதும் "தறிக்கு பாவு புடைக்கிறோம்" என்றார். அங்கிருந்த நூல் டிசைன்களை பார்க்கும்போது, நாம் உடுத்தும் கைலி நினைவுக்கு வந்தது. "ஆமா, கைலி தயாரிக்கிற வேலைதான் நடக்குது' என்று தேவராஜ் மேலும் விவரித்தார். "நீளமான வீதியிலே ஒருபக்கம் மரக்கட்டையில நூலைக் கட்டி, நூலை சிக்கல் நீக்குவோம். இந்த நூலோட நீளம் 16 மீட்டர். ஒரு நூலுக்கும் இன்னொரு நூலுக்கும் சிக்கலில்லாமல் செய்யணும். இந்த நூலை 'பாவு' அப்படின்னு சொல்லுவாங்க. அப்படி சிக்கல் இல்லாம செஞ்சு, ஒரு இருசுல சுத்தணும். அப்புறம் நாங்க இதை தறிக்குக் கொண்டு போகணும். ஒரு கைலி 2 மீட்டர். எட்டு கைலி வரணும்னா இந்த நூலை சுற்றிக்கொண்டு போனதும் வராதுங்க, இந்த நூலை சிக்கலில்லாமல் சரிசெய்து தறியில போடணும். அப்புறம் குறுக்குல இழையோட நூலை ஒரு தார்குச்சியில் சுத்தணும். குறுக்கு நெடுக்குமாக வட்டமா ஒரு மூங்கில் குச்சியில செஞ்ச அந்தக் கட்டையில பாவு நூலை மாட்டி மரக்கால் மாதிரி இருக்கிற உருளையில் முதல்ல நூலை சிக்கலில்லாமல் சுத்தி, அதை தார்க்குச்சியில சுத்தணும். அப்படி சுத்துன தார்குச்சிகளை 'கைக்குண்டு'ன்னு சொல்லுவாங்க. இந்த மீன் மாதிரி இருக்கிற கட்டையில பொருத்தி, நீளமான நூலை இரண்டு பாகமாகப் பிரிச்சி, இடையில இடையில ஓடவிடணும். அப்பதான் நூலிழை குறுக்கில் வரும். இப்படி ஒவ்வொரு இழைய நெருக்கமா அடிச்சி அடிச்சி இணைக்கணும். அதுதான் துணியா மாறும். இப்படித்தாங்க துணி தயாரிக்கிறோம்" என்றார். "ஒரு நாளைக்கு எத்தனை கைலி நெய்யலாம்?" என்று கேட்டதற்கு, "இதுதான் தறியோட அமைப்புங்க. தரைக்கு மேல வைத்திருக்கோம். ஆரம்பத்துல தரைக்கு உள்ளே பள்ளம் போட்டு, அதுல தறி அமைச்சிருந்தோம். அதுல மழை காலத்தில் தண்ணி வந்துரும். அப்ப வேலை செய்ய முடியாது. அதனால, தரைக்கு மேலே வெச்சிட்டோம். இது ரொம்ப கவனமா செய்யக்கூடிய வேலை. ஒரு இழை விட்டு போயிட்டாலும் மொத்த துணியும் வீணாகிப் போய்விடும். இரண்டு கைகள், இரண்டு கால்கள் தொடர்ந்து வேலை செய்யணும். அதைக் கண்கள் பார்த்துகிட்டே இருக்கணும். அப்படி ஒரு நாளைக்கு பகல் பொழுதில் தொடங்கி வேலை செய்தால் 2 கைலி நெய்யலாம். அதுக்கு ஏற்கெனவே சொன்ன மாதிரி தார்க்குச்சியில இந்த நூல் சுத்தி கொடுக்கணும். இதுல ஒருத்தர் வேலை செய்யாவிட்டாலும் அவ்வளவுதான், துணி கிடையாது. இப்படியே நாலு நாள் தொடர்ச்சியா வேலை செய்தா, ஒரு பாவு முழுசா நெய்ய முடியும். அதாவது, எட்டு கைலி. அப்புறம் மறுபடியும் பாவு புனைக்கணும், சிக்கெடுக்கணும், இருசுல சுத்தணும், தறியில பூட்டணும், நெய்யணும்" என்றார் நிதானமாக. "அப்ப வருமானம் நல்லா தானே இருக்கும்?" என்று கேட்டேன். அதற்கு, "ஒரு கைலி முழுசா நெய்து முடிச்சா 150 ரூபாய் கொடுப்பாங்க. இது எனக்கு மட்டும் இல்லைங்க... தார்குச்சியில நூல் சுற்றி கொடுக்கிற என் மனைவிக்கும் சேர்த்துதான். ஒரு நாளைக்கு இரண்டு கைலியின்னா 300 ரூபாய் கூலி இரண்டு பேருக்கும் சேர்த்து. நாலு நாள் ஆகும், எட்டு கைலி நெய்து முடிக்க. மாசம் 50 கைலி நெய்துடுவோம். அதுல ரெண்டு பேருக்கும் சேர்த்து 7,500 ரூபாயிலிருந்து 8,000 ரூபாய் வரைக்கும் கிடைக்கும். இப்ப இருக்கிற விலைவாசியை பார்த்தா வறுமைக்கோட்டுக்கு கீழேதாங்க எங்க வருமானமும் இருக்கு" என்று வாழ்வாதாரக் கணக்குச் சொன்னார். "இந்த வருமானம் போதாது, அப்புறம் ஏன் குறைந்த வருமானத்துக்கு வேலை செய்றீங்க?" என்றதும் கொஞ்சம் கலக்கமானார். "எங்க தாத்தா, தாத்தாவுக்கு தாத்தா காலத்திலேயே இருந்து இதுதாங்க எங்க வேலை. வேற வேலைய சொல்லிக் கொடுக்கலை. இந்த கிராமத்துல நீங்க வந்ததில் இருந்து கேட்டிருப்பீங்க ஒரு சத்தம்... சடக், சடக், சடக்-குன்னு. இதுதாங்க நாங்க பிறந்ததிலிருந்து சாகுற வரைக்கும் கேட்கிற சத்தம். இந்த சத்தம் கேட்கலன்னா தூக்கமே வராது. இதில் எப்படிங்க படிப்பு வரும்? நான் எல்லாம் படிக்கவே இல்லீங்க. இதை சொல்ல வெட்கமாக இருக்கு. ஆனால், நாங்க எங்க பிள்ளைகளை வெளியூர்ல கொண்டு போய் படிக்க வைக்கிறோம். இந்த தலைமுறையோடு எங்க குடும்பத்துல தறி நெய்யுற ஆள், நான்தான் கடைசி" என்றார் கண்கலங்கியபடி. "இதற்கு மாற்று என்னதான் வழி?" "ஒரு கைலி கடையில 400 ரூபாய்க்கு விக்கிறாங்க. ஆனா, நெய்யறவனுக்கு 150 ரூபாய்தான் தர்றாங்க. இதுக்கே இதையெல்லாம் தருவது தனியார் இல்லைங்க, அரசு கூட்டுறவு சங்கங்கள். தறி இருக்கிற எல்லா ஊர்களிலும் கூட்டுறவு சங்கம் இருக்கும். அவங்கதான் பாவு நூல் கொடுப்பாங்க. நாங்க கைலியா கொடுப்போம். அரசாங்கம் கூலி கொஞ்சம் அதிகமாக கொடுத்தால், நாங்க ஏன் இந்த தொழிலை விடப் போகிறோம்? 15 வருஷத்துக்கு முன்னாடி 190 ரூபாய் கொடுத்தாங்க... ஒரு கைலிக்கி இல்லீங்க எட்டு கைலிக்கு. கொஞ்சம் கொஞ்சமா போராடி இப்ப 8 கைலிக்கு 1200 ரூபாய் வரைக்கும் வந்து இருக்கோம். எங்க ஊர்ல மட்டும் ஒரு காலத்தில் 600 தறி இருந்துச்சு, இப்போ 50 தறிதான் இருக்கு'' என்றார் நெசவாளர் தேவராஜ். அடுத்ததாக என்னிடம் பேசிய நெசவாளர் ஏழுமலை, "எனக்கு வயசு 34 ஆகுதுங்க. 15 வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பாவுக்கு உதவியா தறிக்குள்ள வந்தேன். எனக்கு கல்யாணம் ஆகி குழந்தை எல்லாம் இருக்கு. எங்க வீட்டில இரண்டு தறி இருக்கு; இப்போ ஒரு தறிதான் ஓடுது. எங்க அப்பா தறி ஓடலை. அவருக்கு வயசாயிடுச்சு. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறவங்களுக்கு தாங்க பாவு தருவாங்க. இந்த 15 வருஷமா புதுசா யாரையும் உறுப்பினரா சேக்கலை. தறியே நெய்யாத பல பேரு உறுப்பினரா வச்சுக்கிட்டு இருக்காங்க. இதெல்லாம் யாருங்க அரசாங்கத்துக்கு சொல்றது? இப்போ என் அப்பா உறுப்பினராய் இருக்கறதால அவர் பேரில் பாவு நூல் வாங்கி நான் தறி நெய்றேன். அவர் இல்லைன்னா, எனக்கு எப்படி நூல் தருவாங்க? நான்தான் உறுப்பினரா இல்லையே..! உறுப்பினரா சேர்ந்தா பெருசா ஒண்ணும் இல்லைங்க பெருசா. அறுபது வயசு ஆனா மாசம் 1,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்கும். அது கூட இப்போ எங்க கிராமத்துல 50 பேர்தான் வாங்குறாங்க. வருமானம் குறைந்து நாங்க வேலையை விட்டாலும் கூட்டுறவு சங்கம் ஒருபக்கம் எங்களை துரத்திடும்போல. இதெல்லாம் கைத்தறிய அழிச்சிட்டு, ஒருபக்கம் பெரும் முதலாளி வச்சிருக்கிற 'பவர்லூம்'களை அதிகரிக்க தாங்க. இதை நான் சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள்?" என்று நொந்துகொண்டார். தார்குச்சிகளில் நூல் சுற்றிக்கொண்டிருந்த உமா, சத்யாவிடம் பேசினேன். "விவசாயக் கூலி வேலைக்கு போனா கூட ஒரு நாளைக்கு 120 ரூபாய் கொடுக்குறாங்க. அதுவும் காலையில ஏழு மணிக்கு போனால் 12 மணிக்கெல்லாம் வந்துடலாம். இதுல அப்படி இல்லைங்க. ஏதோ பழகிடுச்சு. சொந்த பந்தம்னு ஒருநாள் எங்கேயும் போகறது இல்லீங்க. எங்க போனாலும் தறி நினைப்பாவே இருக்கும். கல்யாணத்துக்கு முன்னாடி அம்மா வீட்டுல இதே வேலைதான் செஞ்சோம். கல்யாணத்துக்கு அப்புறம் புகுந்த வீட்ல இதே வேலையைதான் செய்கிறோம் ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் சரிசமமான வருமானம். ஒரு கைலிக்கு 150 ரூபா... அதுல ஆளுக்கு பாதி." "வேற என்ன வேணும்?" என்று கேட்டதும், "நாங்க என்னங்க கேட்க போறோம்... கூலி உயர்வு தாங்க. கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினரா சேர்க்கணும். தடையில்லாத நூல் விநியோகம் செய்யணும். அது போதுங்க. தரமான கைலிய நாங்க கொடுப்போம். கூலி குறைவா தராங்கன்னு நாங்க வேலையை குறைச்சி செய்ய மாட்டோங்க. பார்த்து பார்த்துதான் செய்வோம். ஏன்னா இது எங்க வாழ்க்கை இல்லையா?! மழைக்காலம் வந்துட்டா, எங்க வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும்" என்றனர். "சடக் சடக் சடக்..." என்ற சத்தம் வெள்ளந்தியாக பேசும் மக்கள்... எதையும் கூர்ந்து கவனிக்கிற பார்வை... நூல் வேலையினூடே அவ்வப்போது பேச்சுகள்... எப்போதும் இளையராஜா பாடல்கள்... இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது இந்த எளிய மனிதர்களின் வாழ்க்கை. - ஜோதி நரசிம்மன் முந்தைய அத்தியாயம் > எளியோரின் வலிமைக் கதைகள் 3 - "உப்பளத்துல உழைக்கிறவங்களுக்கு பெருசா ஒண்ணும் கிடைப்பதில்லை!"
http://dlvr.it/SCRJPX
Saturday, 13 November 2021
Home »
» எளியோரின் வலிமைக் கதைகள் 4 - "எங்க குடும்பத்துல தறி நெய்யுற கடைசி ஆள், நான்தான்!"