கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுடன் எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில், சமீபகாலமாக ரேஷன் அரிசிக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. கர்நாடகா, கேரளாவிலிருந்து நீலகிரிக்கு வரும் வாகனங்களில் சட்டவிரோதமாக மது வகைகள் கடத்திவரப்படுவதும், நீலகிரியிலிருந்து ரேஷன் அரிசி, பருப்பு, இலவச வேட்டி, சேலை போன்ற பொருள்கள் இந்த இரு மாநிலங்களுக்குக் கடத்திக்கொண்டு செல்லப்படுவதும் வாடிக்கையாக இருந்துவருகிறது.ரேஷன் அரிசி கடத்தல்
தமிழக ரேஷன் அரிசியைப் பொறுத்தவரை கேரளாவுக்கே அதிக அளவில் கடத்தப்பட்டுவந்த நிலையில், தற்போது கர்நாடகாவுக்கும் சட்டவிரோதமாகக் கடத்திச் செல்வது அதிகரித்திருக்கிறது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டம் கூடலூர் வழியாக கர்நாடகாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் சட்டவிரோதமாகக் கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையினருக்கு ரகசியத் தகவல் வந்திருக்கிறது. அந்தத் தகவலின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுத்துறை ஆய்வாளர் தலைமையில் கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர், உதவி ஆய்வாளர், வட்ட வழங்கல் துறையினர் நேற்றிரவு கூடலூர் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கூடலூரிலிருந்து கர்நாடகா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி வனத்துறை சோதனைச்சாவடி அருகில் 38 மூட்டைகள் இருந்ததைக் கண்டனர். சந்தேகமடைந்த வட்ட வழங்கல்துறையினர், அந்த மூட்டைகளைச் சோதனை செய்தனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பிவிட்டதால், அரிசி மூட்டைகளுக்கு உரிமை கோர யாரும் முன்வரவில்லை. அதையடுத்து, 38 மூட்டைகளில் இருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியைக் கைப்பற்றி கூடலூர் நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்கு வட்ட வழங்கல் அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.கர்நாடகாவுக்கு கடத்தப்படவிருந்த தமிழக ரேஷன் அரிசி
குடிமைப் பொருள் கடத்தல் குறித்து நம்மிடம் பேசிய வருவாய்த்துறை அதிகாரி ஒருவர், ``சமீபகாலமாக கர்நாடகா, நீலகிரி இடையே சட்டவிரோதக் கடத்தல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. சட்டவிரோதமாக இரண்டு மாநிலங்களுக்கு ரேஷன் பொருள்களைக் கடத்தும் கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகிறோம். இதற்காகவே புதிதாகத் தனிப்படை ஒன்றையும் அமைத்திருக்கிறோம். ரேஷன் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வெளி மாநிலங்களுக்குக் கடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதியப்படும்" என்றார்.
இது குறித்து கூடலூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சிவசுப்ரமணியன் நம்மிடம் பேசுகையில், ``தமிழ்நாட்டில் மக்களுக்கு இலவசமாக அரிசி ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுவருகிறது. இதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் கடத்தல் கும்பல்கள், ரேஷன் கடைகளில் ஊழியர்களை அணுகி, குறைந்த விலைக்கு அரிசியை வாங்கி வெளி மாநிலங்களுக்குக் கடத்துகிறார்கள். அப்படிக் கடத்தும் அரிசியை பாலிஷ் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்துவருகிறார்கள். இதனால் இங்குள்ள மக்களுக்கு நல்ல அரிசியைக் கொடுக்காமல் பதுக்கி மோசமான அரிசியைச் சில ரேஷன் கடை ஊழியர்கள் வழங்கிவருகிறார்கள். இதைத் தடுக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறதோ தெரியவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.
Also Read: புதுக்கோட்டை: ரேஷன் அரிசி பதுக்கல்; 3,250 கிலோ பறிமுதல்; சார் ஆட்சியர் அதிரடி!
http://dlvr.it/SCFSfQ
Wednesday, 10 November 2021
Home »
» நீலகிரி: அதிகரித்த ரேஷன் அரிசிக் கடத்தல்; கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய வழங்கல்துறை!