விண்ணப்பிக்கக் கடைசிநாள்: 30-11-2021
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் (National Institute of Design) இடம் பெற்றிருக்கும் நான்காண்டு கால அளவிலான இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் இரண்டரை ஆண்டு கால அளவிலான முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புகளில் (M.Des) 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (Design Aptitude Test) அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள்
இந்திய அரசின் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் (Ministry of Commerce & Industry, Government of India) கீழ் செயல்பட்டு வரும் தேசிய வடிவமைப்பு நிறுவனம் (National Institute of Design) குஜராத் மாநிலம் அகமதாபாத், ஆந்திர மாநிலம் அமராவதி நகர், அரியானா மாநிலம் குருசேத்திரா, மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால், அசாம் மாநிலம் ஜோர்காட் ஆகிய இடங்களில் அமைந்திருக்கின்றன. குஜராத் மாநிலம் காந்திநகர் மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் ஆகிய இடங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் விரிவாக்க வளாகங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு
தேசிய வடிவமைப்பு நிறுவனங்களில் குஜராத் மாநிலம் அகமதாபாத் வளாகத்தில் நான்கு ஆண்டு கால அளவிலான இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் (B.Des) தகவல் தொடர்பு வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Communication Design) கீழ், திரைப்படம் மற்றும் காணொளி தகவல் தொடர்பு (Film & Video Communication) எனும் பிரிவில் 13 இடங்களும், கண்காட்சி வடிவமைப்பு (Exhibition Design) எனும் பிரிவில் 13 இடங்களும், அசைவூட்டத் திரைப்படம் வடிவமைப்பு (Animation Film Design) எனும் பிரிவில் 19 இடங்களும், வரைகலை வடிவமைப்பு (Graphic Design) எனும் பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 64 இடங்கள் இருக்கின்றன. தொழிற்சாலை வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Industrial Design) கீழ் பீங்கான் மற்றும் கண்ணாடி வடிவமைப்பு (Ceramic & Glass Design) எனும் பிரிவில் 13 இடங்களும், அறைகலன் வடிவமைப்பு (Furniture Design) எனும் பிரிவில் 13 இடங்களும், உற்பத்தி வடிவமைப்பு (Product Design) எனும் பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 45 இடங்கள் இருக்கின்றன. நெசவு, ஆடை மற்றும் வாழ்முறைத் துணைப்பொருட்கள் வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Textile, Apparel & Lifestyle Accessory Design) கீழ் நெசவு வடிவமைப்பு (Textile Design) எனும் பிரிவில் 19 இடங்கள் உள்ளன. Graphics Design | கிராஃபிக் டிசைன்
ஆந்திர மாநிலம் அமராவதி நகர், அரியானா மாநிலம் குருசேத்திரா, மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால், அசாம் மாநிலம் ஜோர்காட் வளாகங்களில் நான்கு ஆண்டு கால அளவிலான இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் தகவல் தொடர்பு வடிவமைப்பு (Communication Design) பிரிவில் 25 இடங்கள், தொழிற்சாலை வடிவமைப்பு (Industrial Design) பிரிவில் 25 இடங்கள், நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பு (Textile & Apparel Design) பிரிவில் 25 இடங்கள் என்று மொத்தம் 75 இடங்கள் வீதம் நான்கு வளாகங்களிலும் மொத்தம் 300 இடங்கள் இருக்கின்றன.
முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு
தேசிய வடிவமைப்பு நிறுவனங்களில் இரண்டரை ஆண்டு கால அளவிலான முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் (M.Des), குஜராத் மாநிலம் அகமதாபாத் வளாகத்தில் தகவல் தொடர்பு வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Communication Design) கீழ் அசைவூட்டத் திரைப்பட வடிவமைப்பு (Animation Film Design) பிரிவில் 19 இடங்களும், திரைப்படம் மற்றும் காணொளி தகவல் தொடர்பு (Film & Video Communication) எனும் பிரிவில் 19 இடங்களும், வரைகலை வடிவமைப்பு (Graphic Design) எனும் பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 57 இடங்கள் இருக்கின்றன. தொழிற்சாலை வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Industrial Design) கீழ் பீங்கான் மற்றும் கண்ணாடி வடிவமைப்பு (Ceramic & Glass Design) எனும் பிரிவில் 12 இடங்களும், அறைகலன் மற்றும் உட்புற வடிவமைப்பு (Furniture & Interior Design) எனும் பிரிவில் 19 இடங்களும், உற்பத்தி வடிவமைப்பு (Product Design) எனும் பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 50 இடங்கள் இருக்கின்றன. நெசவு, ஆடை, வாழ்க்கை முறை மற்றும் துணைப்பொருட்கள் வடிவமைப்பு (Faculty of Textile, Apparel, Lifestyle and Accessory Design) புலத்தின் நெசவு வடிவமைப்பு (Textile Design) பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. அகமதாபாத் வளாகத்தில், முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் (M.Des) மொத்தமாக 126 இடங்கள் இருக்கின்றன.
குஜராத் மாநிலம் காந்திநகரில் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் வளாகத்தில் தகவல் தொடர்பு வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Communication Design) கீழ் ஒளிப்பட வடிவமைப்பு (Photography Design) பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. தொழிற்சாலை வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Industrial Design) கீழ் பொம்மை மற்றும் விளையாட்டு வடிவமைப்பு (Toy & Game Design) எனும் பிரிவில் 12 இடங்களும், போக்குவரத்து மற்றும் தானுந்து வடிவமைப்பு (Transportation & Automobile Design) எனும் பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 31 இடங்கள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் – ஒருங்கிணைந்த திட்டங்கள் புலத்தின் (Faculty of Information Technology-Integrated Programmes) கீழ் புதிய ஊடக வடிவமைப்பு (New Media Design) பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. புலன்களுக்கிடையிலான வடிவமைப்புக் கல்விப் (Faculty of Inter-Disciplinary Design Studies) புலத்தில் உத்திம மேலாண்மை வடிவமைப்பு (Strategic Design Management) பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. நெசவு, ஆடை, வாழ்க்கை முறை மற்றும் துணைப்பொருட்கள் வடிவமைப்பு (Faculty of Textile, Apparel, Lifestyle and Accessory Design) புலத்தின் கீழ் ஆடை வடிவமைப்பு (Apparel Design) பிரிவில் 19 இடங்கள், வாழ்க்கை முறைத் துணைப்பொருட்கள் வடிவமைப்பு (Lifestyle Accessory Design) பிரிவில் 19 இடங்கள் என்று மொத்தம் 38 இடங்கள் இருக்கின்றன. காந்திநகர் வளாகத்தில் முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் (M.Des) மொத்தமாக 126 இடங்கள் இருக்கின்றன.
கர்நாடக மாநிலம் பெங்களூர் வளாகத்தில் தொழிற்சாலை வடிவமைப்புப் புலத்தின் (Faculty of Industrial Design) கீழ் உலகளாவிய வடிவமைப்பு (Universal Design) எனும் பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. தகவல் தொழில்நுட்பம் – ஒருங்கிணைந்த திட்டங்கள் புலத்தின் (Faculty of Information Technology-Integrated Programmes) கீழ் எண்ணிம விளையாட்டு வடிவமைப்பு (Digital Game Design) பிரிவில் 19 இடங்களும், தகவல் வடிவமைப்பு (Information Design) பிரிவில் 19 இடங்களும், இடைவினை வடிவமைப்பு (Interaction Design) பிரிவில் 19 இடங்களும் என்று மொத்தம் 57 இடங்கள் இருக்கின்றன. புலன்களுக்கிடையிலான வடிவமைப்புக் கல்விப் (Faculty of Inter-Disciplinary Design Studies) புலத்தில் சில்லறை வணிகத்திற்கான வடிவமைப்பு (Design for Retail Experience) பிரிவில் 19 இடங்கள் இருக்கின்றன. பெங்களூர் வளாகத்தில் முதுநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பில் (M.Des) மொத்தமாக 95 இடங்கள் இருக்கின்றன.Designers
கல்வித்தகுதிகள்
மேற்காணும் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புகளுக்கு (B.Des) விண்ணப்பிப்பவர்கள் மேல்நிலைக்கல்வி அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதுபவர்களாக இருக்க வேண்டும்.
முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பிற்கு (M.Des) விண்ணப்பிப்பவர்கள் நான்கு ஆண்டு கால அளவிலான (10+2+4) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது மூன்று ஆண்டு கால அளவிலான (10+2+3) இளநிலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்று ஒரு வருட காலம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது நான்கு ஆண்டு கால அளவிலான (10+2+4) இளநிலை வடிவமைப்புப் பட்டயப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது இதற்கு இணையான கல்வித்தகுதியினைப் பெற்றிருக்க வேண்டும். நடப்புக் கல்வியாண்டில் தேர்வு எழுதுபவர்களும் விண்ணப்பிக்க முடியும்.
வயது
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் பொதுப்பிரிவினர் (General) மற்றும் ஈடபிள்யூஎஸ் பொதுப்பிரிவினர் (General EWS) 1-7-2002 அன்றோ அல்லது அதற்குப் பின்போ, ஓபிசி., எஸ்சி. எஸ்டி பிரிவினர் 1-7-1999 அன்றோ அல்லது அதற்குப் பின்போ, மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் 1-7-1997 அன்றோ அல்லது அதற்குப் பின்போப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் 1-7-2002 அன்றோ அல்லது அதற்குப் பின்போப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
முதுநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பிப்பவர்களில் இந்தியக் குடியுரிமை பெற்றவர்கள் பொதுப்பிரிவினர் (General) மற்றும் ஈடபிள்யூஎஸ் பொதுப்பிரிவினர் (General EWS) 1-7-1992 அன்றோ அல்லது அதற்குப் பின்போ, ஓபிசி., எஸ்சி. எஸ்டி பிரிவினர் 1-7-1989 அன்றோ அல்லது அதற்குப் பின்போ, மாற்றுத் திறனாளிகள் பிரிவினர் 1-7-1987 அன்றோ அல்லது அதற்குப் பின்போப் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். வெளிநாட்டினர் 1-7-1992 அன்றோ அல்லது அதற்குப் பிறகாகவோ பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
வெளிநாட்டு மாணவர்கள் சேர்க்கை
மேற்காணும் இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (M.Des) ஆகியவற்றின் மொத்த இடங்களில் 15 சதவிகித இடங்கள் வெளிநாட்டு மாணவர்களுக்காக மிகை எண்ணிக்கையாக (supernumerary) ஒதுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம்
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (M.Des) மாணவர் சேர்க்கைக்குத் தனித்தனியாக வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (Design Aptitude Test) நடைபெறவிருக்கிறது.
Also Read: டாட்டா அடிப்படை ஆய்வு நிறுவனத்தில் பட்டதாரி பள்ளி சேர்க்கை நுழைவுத்தேர்வு... விண்ணப்பிப்பது எப்படி?
இந்த வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் http://admissions.nid.edu/ எனும் இணையதளம் வழியாகப் பதிவு செய்து, விண்ணப்பத்திற்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்கலாம். இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) இடங்களுக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுக்குப் பொதுப்பிரிவினர், ஈடபிள்யூஎஸ் பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ரூ.3000/- தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்பினர்களிலுமான மாற்றுத்திறனாளிகள் ரூ.1500/- என்றும், வெளிநாட்டினர் இந்தியப்பணம் ரூ.5000/-க்கு இணையான தொகையினையும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புக்கு (M.Des) ஒரே நேரத்தில் இரண்டு சிறப்புப் பாடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும். பொதுப்பிரிவினர் ஈடபிள்யூஎஸ் பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்பினர் ஒரு பாடத்திற்கு ரூ.3000/- இரண்டு சிறப்புப் பாடங்களுக்கு ரூ.6000/- என்றும், தாழ்த்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் அனைத்து வகுப்பினர்களிலுமான மாற்றுத்திறனாளிகள் ஒரு பாடத்திற்கு ரூ.1500/-, இரண்டு பாடப்பிரிவுகளுக்கு ரூ.3000/- என்று தேர்வுக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். வெளிநாட்டினர் இந்தியப்பணம் ஒரு பாடத்திற்கு ரூ.5000/- இரண்டு பாடப்பிரிவுகளுக்கு ரூ.10000/-க்கு இணையான தொகையினையும் தேர்வுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
இத்தேர்விற்கு இணைய வழியில் விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கடைசி நாள்: 30-11-2021. மேற்காணும் கட்டணத்தினை இரு மடங்குக் கட்டணமாகக் கொண்டு (தாமதக் கட்டணத்துடனான) விண்ணப்பத்தினை இணைய வழியில் 1-12-2021 முதல் 5-12-2021 ஆம் நாள் வரை சமர்ப்பிக்க முடியும். இணையத்தில் சமர்ப்பித்த விண்ணப்பங்களில் திருத்தம் ஏதாவது செய்ய வேண்டியிருப்பின் 6-12-2021 முதல் 13-12-2021 வரையிலான நாட்களில் செய்து கொள்ள முடியும்.
தேர்வு மையங்கள்
இளநிலை மற்றும் முதுநிலை வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வுகள் அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெக்ராடூன், கவுகாத்தி, கோவா, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொல்கத்தா, குருசேத்திரா, லக்னோ, மும்பை, நாக்பூர், புதுடெல்லி, பாட்னா, ராஜ்பூர், ராஞ்சி, சிம்லா, திருவனந்தபுரம் மற்றும் விஜயவாடா எனும் 23 நகரங்களில் மட்டும் நடைபெற இருக்கிறது. வெளிநாட்டு மாணவர்கள் அகமதாபாத் நகர் மையத்தில் மட்டும் இத்தேர்வினை எழுத முடியும். இத்தேர்வுக்கான அனுமதி அட்டையினை 23-12-2021 முதல் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
முதல்நிலைத் தேர்வு
இளநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்பு (B.Des) மற்றும் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புக்கான (M.Des) முதல்நிலை வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு 2-1-2022, ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. இத்தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் நாள் குறித்துப் பின்னர் தெரிவிக்கப்படும் என்று தகவல் குறிப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு
முதல்நிலை வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வில் (DAT- Prelim) பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு பட்டியல் எண்ணிக்கை குறைப்பு (Shortlisted) செய்யப்பட்டு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றிய முதல்நிலைத் தேர்வுப் பட்டியல் வெளியிடப்படும். இப்பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு இரண்டாம் நிலையில் கலைக்கூடத் தேர்வு (Studio Test) மற்றும் நேர்காணல் (Personal Interview) உள்ளிட்ட முதன்மை வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு (DAT – Main) நடத்தப்படும். முதன்மை வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்விற்குப் பின்பு, இந்திய அரசின் இட ஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இரண்டாம் நிலைத் தேர்வுப்பட்டியல் வெளியிடப்படும். நுழைவுத் தேர்வு | Entrance Exams
இறுதிப்பட்டியல்
அதனைத் தொடர்ந்து, முதன்மைத் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கையிலிருந்து தேர்வு எழுதியவரின் தகுதி நிலை கழிக்கப்பட்டு அதை முதன்மைத் தேர்வு எழுதியவர்களின் மொத்த எண்ணிக்கையைக் கொண்டு வகுத்து அதனை 100 ஆல் பெருக்கிக் கிடைக்கும் சதவிகித மதிப்பெண்களாகக் கொண்டு இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். இந்த இறுதிப்பட்டியலைக் கொண்டு, இந்திய அரசு இடஒதுக்கீட்டு நடைமுறைகளைப் பின்பற்றி இளநிலை வடிவமைப்பு பட்டப்படிப்பு (B.Des) மற்றும் முதுநிலை வடிவமைப்புப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்தப்பெறும்.
கூடுதல் தகவல்கள்
வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு தொடர்பான மேலும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் http://admissions.nid.edu/ எனும் இணையதளத்தைப் பார்வையிடலாம்.
தேசிய வடிவமைப்பு நிறுவனங்கள், இளநிலை மற்றும் முதுநிலைப் பட்டப்படிப்புகள், கல்விக்கட்டணங்கள், விடுதி வசதிகள் மற்றும் கட்டணங்கள் போன்றவை குறித்த மேலும் கூடுதல் தகவல்களுக்கு, குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகர் (விரிவாக்கம்) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் (விரிவாக்கம்) வளாகங்கள் - https://www.nid.edu/home
ஆந்திர மாநிலம் அமராவதி நகர் வளாகம் - https://www.nid.ac.in/
அரியானா மாநிலம் குருசேத்திரா வளாகம் - https://www.nidh.ac.in/
இணைய மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் வளாகம் - https://nidmp.ac.in/
அசாம் மாநிலம் ஜோர்காட் வளாகம் https://nidj.ac.in
எனும் இணைய முகவரியிலான தளங்களைப் பார்வையிடலாம்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், காந்திநகர் (விரிவாக்கம்) மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூர் (விரிவாக்கம்) வளாகங்கள் - 079-26623462 (admissions@nid.edu),
ஆந்திர மாநிலம் அமராவதி நகர் வளாகம் -0863 2377201 / 0863 2377224 (admissions@nid.ac.in),
அரியானா மாநிலம் குருசேத்திரா வளாகம் - 01744 278100 / 278101 (admission@nidh.ac.in),
மத்தியப்பிரதேசம் மாநிலம் போபால் வளாகம் - 8305103032, 0755-6721008, 0755-6721116 (admissions@nidmp.ac.in)
அசாம் மாநிலம் ஜோர்காட் வளாகம் - 0376-2310108 ( info@nidj.ac.in) எனும் தொடர்பு எண்கள், மின்னஞ்சல்களில் தொடர்பு கொண்டும் பெறலாம்.
http://dlvr.it/SCPQHF
Saturday, 13 November 2021
Home »
» தேசிய வடிவமைப்பு நிறுவனம் வழங்கும் வடிவமைப்புப் படிப்புகளுக்கான வடிவமைப்புத் திறனாய்வுத் தேர்வு!