கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் உள்ள யு.ஏ.இ தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்குக் கடந்த ஆண்டு ரகசியத் தகவல் கிடைத்தது. தூதரக பார்சலை அவ்வளவு எளிதில் சோதனை செய்ய முடியாது என்பதால், ரகசியமாக மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது. அதன்பின்னர், 2020 ஜூன் 30-ம் தேதி திருவனந்தபுரம் விமானநிலையத்துக்கு யு.ஏ.இ தூதரக பார்சல் வந்தது. பார்சலை உடனடியாக ரிலீஸ் செய்யாமல் சுங்கத்துறை அதிகாரிகள் காலதாமதப்படுத்தினர். பின்னர் 2020 ஜூலை 5-ம் தேதி தூதரக அதிகாரிகள் முன்னிலையில் சோதனை செய்யப்பட்டது. பார்சலில் 30 கிலோ கடத்தல் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக சுங்கத்துறை வழக்கு பதிவு செய்ததுடன், அந்த பார்சலை பெறுவதற்காகத் தூதரக கடிதத்துடன் வந்த ஸரித் என்பவர் கைது செய்யப்பட்டார். தூதரக பார்சலை விடுவிக்க வேண்டும் என சுங்கத்துறை அதிகாரிகளிடம் போனில் பேசிய ஸ்வப்னா சுரேஷ் தலைமறைவானார்.தங்கம கடத்தல் வழக்கில் சிக்கிய ஸ்வப்னா சுரேஷ்
இந்த நிலையில், தங்க கடத்தலுக்குப் பின்னால் பயங்கரவாத கும்பல் உள்ளதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து என்.ஐ.ஏ விசாரணையில் இறங்கியது. 2020 ஜூலை10-ம் தேதி, யு.ஏ.பி.ஏ குற்றம் சுமத்தப்பட்டு என்.ஐ.ஏ வழக்கு பதிவு செய்தது. மேலும் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி பெங்களூரில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேசையும், அவருடன் இருந்த சந்தீப் நாயர் என்பவரையும் ஜூலை 11-ம் தேதி கைது செய்தது. 2020 அக்டோபர் மாதம் 7-ம் தேதி ஸ்வ்ப்னா சுரேஷ் உள்ளிட்ட மூன்றுபேர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கில், முக்கிய குற்றவாளியாகக் கருதப்பட்ட ஸ்வப்னா சுரேசுடன் தொடர்பிலிருந்ததாக முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். தங்க கடத்தல் கும்பலுக்கும் முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்பு உள்ளதாகக் கூறப்பட்டது. அதேபோல, அன்றைய ஸ்பீக்கராக இருந்த ஸ்ரீராமகிருஷ்ணனுக்கும் இதில் தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியானது. மத்திய அரசு ஏஜென்சிகள் விசாரணை நடத்திக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தன.சிறையில் இருந்து வெளியே வந்த ஸ்வப்னா சுரேஷ்
ஸ்வப்னா சுரேஷ் பலமுறை ஜாமின் கேட்டு மனுத்தாக்கல் செய்தும் கிடைக்கவில்லை. கடும் முயற்சிக்குப் பிறகு கடந்த நவம்பர் 2-ம் தேதி கேரள ஐகோர்ட் ஸ்வப்னாவுக்கு ஜாமின் வழங்கியது. திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறைச்சாலையிலிருந்து நவம்பர் 5-ம் தேதி வெளியே வந்தார் ஸ்வப்னா சுரேஷ். அவர் விரைவில் மீடியாக்களை சந்திப்பார் என ஸ்வப்னாவின் தாய் பிரபா சுரேஷ் கூறியிருந்தார். ஆனால் சிறையிலிருந்து வெளியே வந்து சில நாள்கள் ஆகியும் அமைதியாக இருந்தார் ஸ்வப்னா சுரேஷ்.
Also Read: டாலர் கடத்த உதவினாரா பினராயி விஜயன்?! - ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலத்தால் சர்ச்சை!
இந்த நிலையில், நேற்று கொச்சிக்கு சென்றவர், அங்குச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.``நான் அம்மாவுடன் சேர்ந்து விரைவில் மீடியாக்களை சந்திப்பேன். மனதளவில் நான் தயாராகி விட்டு உங்களிடம் பேசுவேன். நான் மீடியாக்களைக் கண்டு ஓடி ஒளியவில்லை. இந்த வழக்கு பற்றி இப்போது பேச விரும்பவில்லை. உங்களுடைய எல்லா கேள்விகளுக்கும் கண்டிப்பாக நான் பதிலளிப்பேன். இப்போது கொச்சியில் நான் வழக்கறிஞரைச் சந்திக்க வந்திருக்கிறேன். வழக்கறிஞர் ஆலோசனைப்படி திருவனந்தபுரத்தில் அம்மாவுடன் சேர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடத்துவேன்" என்றார்.ஸ்வப்னா சுரேஷ்
தங்க கடத்தல் வழக்கின் ஆரம்பக்கட்டத்தில் தலைமறைவாக இருந்த ஸ்வப்னா சுரேஷ், தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அப்போதுதான் ஸ்வப்னாவின் குரலைக் கேரளம் கேட்டது. அதன்பிறகு இப்போதுதான் 'கேள்விகளுக்குப் பதில் அளிப்பேன்' என மீடியாக்களிடம் பேசியிருக்கிறார் ஸ்வப்னா. அவர் பேசப்போவது மத்திய அரசுக்கு எதிராகவா...மாநில அரசுக்கு எதிராகவா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டாகச் சிறையிலிருந்த ஸ்வப்னா, வழக்கறிஞர் மூலம் ஒரு தகவல் வெளியிட்டிருந்தார். அதில் மத்திய அரசு ஏஜென்சிகள் இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறும்படி வற்புறுத்தியதாகத் தெரிவித்திருந்தார். எனவே அவர் மத்திய அரசு ஏஜென்சிகள் மீதான குற்றச்சாட்டுக்களை வெளியிட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.
Also Read: தங்கக் கடத்தல் வழக்கு: `விரைவில் செய்தியாளர் சந்திப்பு?!’ - சிறையிலிருந்து வெளியே வந்தார் ஸ்வப்னா
http://dlvr.it/SCFSjg
Wednesday, 10 November 2021
Home »
» தங்க கடத்தல் வழக்கு: `யாருக்கு எதிராகப் பாயப்போகிறார் ஸ்வப்னா சுரேஷ்?!' - பரபரக்கும் கேரளம்