சூர்யா இயக்கி நடித்துள்ள 'ஜெய்பீம்' திரைப்படம் விவாதப் பொருளாகியுள்ளது. படத்தை பலர் பாராட்டி வரும் நிலையில், சிலர் எதிர்த்து வருகின்றனர். ஜெய்பீம் அரசியல் தளத்தில் கவனம் பெற்று வரும் சூழலில், இது குறித்து இயக்குநர் கோபி நயினாரிடம் பேசினோம். 'ஜெய்பீம்' பட விவகாரத்தில் சூர்யாவுக்கு தமிழ் சினிமாவிலிருந்து ஆதரவுக் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை என்று சொல்லப்படுகிறதே... இங்கே எல்லாமே வர்க்கமாகத்தான் இருக்கிறது. அதை நாம் குற்றப்படுத்தவும் முடியாது. ஏனென்றால் விடுதலை அரசியல் என்பது கடினமான பாதை. மிகவும் சொற்ப நபர்களால் மட்டுமே இதற்குள் இறங்கி வேலை செய்ய முடியும். ஏனெனில் கலை அரசியல் என்பது நடைமுறையுடன் தொடர்புடையது. அந்த நடைமுறைக்கான பயிற்சி இல்லாவிட்டால், கலை அரசியலை மக்களுக்கான விடுதலையை நோக்கி கொண்டு செல்ல முடியாது. இந்திய சினிமாவின் மொத்தமும் வணிகமாக மாறியிருக்கிறது. அதிலிருக்கும் ஒவ்வொருவரும் தன்னுடைய வாழ்வை வணிகமாக மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு கலை வாழ்வாக மாறவில்லை என்பதை கவனிக்க வேண்டியிருக்கிறது. முற்றிலும் வணிக வாழ்வாக மாறி கார்ப்ரேட்களை நம்பியிருக்கிறது. அப்படிப்பார்த்தால், நாம் பேசும் கருத்து சூர்யாவுக்கு ஆதரவு தரவேண்டும், தரக்கூடாது என்ற மனநிலையிலிருந்து உருவாவதில்லை. மாறாக, நாம் பேசிவிட்டால், எதிர்காலத்தில் சூர்யாவுக்கு ஏற்படுகின்ற இன்னல்கள் நமக்கும் ஏற்பட்டுவிடுமோ, நம்மை நம்பி முதலீடு செய்கின்ற முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற பயமாக இருக்க கூட இருக்கலாம். அதனால், அவர்கள் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்காமல் தவிர்த்திருக்கலாம்.ஆனால் அந்த அச்சம் இருக்கும்வரை, நாம் வணிகத்தை ஈட்டும் மெஷினாக இருக்கலாமே தவிர, மனித வாழ்வுக்கு ஆதரவான கலைஞனாக ஒருபோதும் நம்மால் இருக்க முடியாது. அப்படித்தான் இதை நாம் பார்க்கவேண்டியிருக்கிறது. வெளிச்சத்துக்கு வராத மக்களின் வாழ்வை பதிவு செய்யும் கதைகள் படமாக்கப்பட்டு வருகிறது. அவற்றுக்கு அரசியல் ரீதியில் எதிர்ப்புகளும் அழுத்தங்களும் வரும்போது, இந்த கதைக்களத்தை தேர்வு செய்ய எதிர்காலத்தில் இயக்குநர்கள் தயங்க வாய்ப்புள்ளதா? கண்டிப்பாக அப்படி நடக்க வாய்ப்பில்லை. 10 வருடங்களுக்கு முன்பு இதுபோன்ற திரைப்படங்கள் கிடையாது. 10 வருடங்களுக்கு பிறகு இப்படியான படங்கள் வருகிறது என்றால், நம்மை ஒரு கட்டமைப்புக்குள் அடைத்து அழுத்தம்போது, அந்த அழுத்தத்தால் ஒருவேளை நாம் இறந்துவிட்டால், அதற்கு மேல் அழுத்தி எந்த பயனும் இல்லை. ஆனால், அந்த அழுத்தத்தை மீறி வீறு கொண்டு அவர்கள் எழுந்துவிட்டால், இனியும் அழுத்துவதால் உங்களுக்கு எந்த லாபமும் இல்லை. அது உங்களுக்கு ஆபத்து தான். அதனால், இது போன்ற சினிமாக்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்குமே தவிர, குறையாது. ஜெய்பீம் படத்தை பார்த்தவுடன், 'மக்கள் படம் பார்த்துவிட்டு நகர்ந்து சென்றுவிடுவார்கள். சூர்யா என்ற தனிநபரை மிரட்டிவிடலாம்' என அவர்கள் நினைத்தார்கள். ஆனால், விளைவு படத்தை பார்த்தவர்கள் சூர்யாவுக்கு ஆதரவாக களமிறங்கிவிட்டார்கள். அதனால் வீரியம் தான் அதிகரித்துள்ளது. இதன்மூலம் சூர்யாவுக்கான பலம் அதிகரிக்குமே தவிர நீர்த்துப்போகாது. இந்த அச்சுறுத்தல் அச்சுறுத்துபவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் திருப்திபடுத்திவிடுகிறது. எனக்கு கோவம் வந்தால் நான் கெட்டவார்த்தை பேசுகிறேன் என்றால் என்னை நானே திருப்திபடுத்திக்கொள்கிறேன் என அர்த்தம். 'எட்டி உதைத்தால் ஒருலட்சம்' என்பதெல்லாமும் கூட ஒரு வகையில் கெட்ட வார்த்தைதான். அப்படிப்பார்த்தால் அவர்கள் திருப்தி படுத்திக்கொள்ளும் விதமாக பேசுயிருக்கிறார்கள். ஆனால், ஒருபோதும் அவர்களால் எட்டி உதைக்க முடியாது என்பதுதான் உண்மை. இதுபோன்ற படங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலையில் வெளிப்பாடாக சில தரப்பினரின் இந்த எதிர்ப்புகளை பார்க்க முடியுமா? தொழிலாளி தன்னுடைய உரிமையை பற்றி பேசக்கூடாது, ஒடுக்கப்பட்டவர் சாதி ஒழிப்பை பற்றி பேசக்கூடாது, பகுத்தறிவாளர் அறிவியலைப்பற்றி பேசக்கூடாது, பெண் தன் மீதான ஆண் வன்கொடுமைக்கு எதிராக பேசக்கூடாது, குழந்தை தொழிலாளர்கள் முதலாளி வன்கொடுமைக்கு எதிராக பேசக்கூடாது, மதச்சிறுப்பான்மையினர் தங்கள் உரிமைகளுக்காக பேசக்கூடாது என்பது தான் இந்த கார்ப்ரேட் உலகத்தின் மிகப்பெரிய அஜெண்டா. இது போன்ற எதிர்ப்பு குரல் அவர்களின் அரசியல் வணிகத்திற்கு பெரும் நஷ்டம். ஆகவே அவர்கள் மிரட்டத்தான் செய்வார்கள். அதை நாம் கண்டுக்கொள்ள கூடாது; அதைப்பற்றி நாம் கவலைப்படத்தேவையில்லை. சூர்யா போன்ற கலைஞர்கள், இந்த படத்தை இயக்கிய இயக்குநர் போல இன்னும் நிறைய பேர் வந்துகொண்டேயிருப்பார்கள். இதன் பெரும்பான்மை கூடிக்கொண்டே செல்லும். தடுக்கவே முடியாது. இது இன்னும் பெருகிக் கொண்டேயிருக்கும். அதற்கான வேலைகளை முற்போக்கு அமைப்புகள் செய்யும். இதை மறுக்கவே முடியாது. உதாரணமாக நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் இல்லை என்றபோதும், என்னுடைய உழைப்பு சுரண்டப்பட்டுகொண்டிருக்கிறது என்றால் நானும் ஒரு கம்யூனிஸ்ட்தான்! காரணம் என்னப்பற்றித்தான் அந்த கம்யூனிச கோட்பாடு பேசுகிறது. என் உழைப்புச் சுரண்டல் குறித்து நான் வேண்டுமானால் கவனிக்காமல் இருக்கலாம். ஆனால் என் அரசியல் களம் கம்யூனிசம். என்னை மீட்க ஒருவன் வருவான். அவன் பேசும்போது, அவனுடன் நான் அணித்திரள்வேன். அணித்திரள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் இதுபோன்ற திரைப்படங்களும் கலைஞர்களும் உருவாக்குவார்கள். அது நடந்தே தீரும். மறுக்க முடியாது. உங்களால் என்ன செய்ய முடியும்? உலகம் முழுவதும் ஆதிக்க சக்தியினர் மைனாரிட்டி தான்; விடுதலை பேசுபவர்கள் தான் மெஜாரிட்டி. இவர்கள் விடுதலை பேச தயங்குவதாலும், அவர்களிடத்தில் போதியஅறிவை கொண்டு சேர்க்காத காரணத்தினாலும் அவர்கள் மைனாரிட்டியாக உலகத்துக்கு தெரிவார்களே தவிர, அவர்கள் எப்போதும் மெஜாரிட்டி தான். ஒடுக்கப்பட்ட, உழைக்கும் மக்கள் அணித்திரளும்போது எல்லாம் மாறும். சூர்யாவுக்கு எப்போதும் எதுவும் ஆகாது; சூர்யாவுக்கு எதிராக யாராலும் எதையும் செய்ய முடியாது'' என்று தெரிவித்துள்ளார்.
http://dlvr.it/SCblMk
Tuesday, 16 November 2021
Home »
» "சூர்யாவுக்கு எதுவும் ஆகாது; யாராலும் எதுவும் செய்யமுடியாது''- கோபி நயினார் சிறப்பு பேட்டி