முல்லைப்பெரியாறு அணையை மையமாக வைத்து தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையே நீண்டகாலமாக நிலவிரும் பிரச்னை தற்போது மீண்டும் முன்னெழுந்திருக்கிறது. முல்லைப்பெரியாறு அணை கேரளாவில் அமைந்திருந்தாலும், அதைப் பராமரிப்பது உள்ளிட்ட உரிமைகள் தமிழ்நாட்டிடம்தான் இருக்கின்றன. 155 அடி உயரம்கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் 15.5 டி.எம்.சி வரை தண்ணீரைத் தேக்கிவைக்க முடியும். நூறு ஆண்டுகளுக்கு மேல் பழைமையானது என்பதால், இந்த அணையை இடிக்க வேண்டும் என்று கேரள தரப்பில் சொல்லப்பட்டுவருகிறது. முல்லைப்பெரியாறு அணை
தற்போதுள்ள அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்டப்பட வேண்டும் என்பது கேரள அரசின் நிலைப்பாடாக இருந்துவருகிறது. ஆனால், முல்லைப்பெரியாறு அணை உறுதியாக இருப்பதாக அதை ஆய்வு செய்த நிபுணர்கள் குழுக்கள் சான்று அளித்துள்ளன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், கேரளாவில் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால், அணையிலிருந்து அதிகளவு தண்ணீரைத் திறந்துவிடுமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் சமீபத்தில் கடிதம் எழுதினார். அணை பராமரிப்பு மட்டுமல்லாமல், அணையைத் திறக்கும் உரிமையும் தமிழ்நாட்டுக்குத்தான் உண்டு என்பதால், கேரள முதல்வர் அந்த கடிதத்தை எழுதினார்.
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையிலான உறவு சுமூக இருப்பதற்கான சாட்சியாக கேரளா முதல்வரின் கடிதம் இருந்தது. ஆனால், அந்த கடிதத்துக்குப் பிறகு அடுத்தடுத்து சர்ச்சைகள் வெடிக்கின்றன. உச்ச நீதிமன்றம் அக்டோபர் 29-ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாக, அக்டோபர் 27-ம் தேதியே கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அக்டோபர் 29-ம் தேதி முல்லைப்பெரியாறு அணை திறக்கப்படவிருக்கிறது என்றும், அதனால் பெரியாறு கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுங்கள் என்று அக்டோபர் 27-ம் தேதி இடுக்கி மாவட்டத்தில் தண்டோரா போடப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக, அக்டோபர் 29-ம் தேதி காலை 7 மணியளவில் முல்லைப்பெரியாறு அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. அன்று காலை சுமார் 10 மணியளவில் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே அணை திறக்கப்பட்டிருக்கிறது. கேரள அமைச்சர்களால் அணை திறக்கப்பட்டது என்று அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூறுகிறார்கள். பன்னீர்செல்வம்
ஆனால், அதை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மறுத்துள்ளார். அணையைத் திறந்தது தமிழக பொதுப்பணித்துறை பொறியாளர்கள் என்றும், அணை திறக்கப்பட்டபோது கேரள அமைச்சர்கள் அங்கு இருந்தார்கள் என்றும் துரைமுருகன் கூறுகிறார். இந்த விவகாரத்தில் தமிழக, கேரள அரசுகளைக் கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் அறிவித்தன.
இந்த பரபரப்பான சூழலில், பேபி அணையில் உள்ள 15 மரங்களை தமிழக அரசு வெட்டிக்கொள்ளலாம் என்ற அனுமதியை கேரள வனத்துறை வழங்கியது. அதற்கு உடனடியாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். முல்லைப்பெரியாறு அணையால் எழுந்த பரபரப்பைத் தணிக்கும் வகையில், இந்த அணுகுமுறை இருந்தது. பேபி அணையை வலுப்படுத்துவதற்கு அதன் கீழ் உள்ள 15 மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்பது தமிழக அரசின் நீண்டகால கோரிக்கை. பேபி அணையை வலுப்படுத்திய பிறகு, முல்லைப்பெரியாறு அணையில் 152 அடிக்கு தண்ணீரைத் தேக்கலாம் என்று உச்ச நீதிமன்ற உத்தரவு இருக்கிறது. பினராயி விஜயன்
பேபி அணையின் கீழ் உள்ள மரங்களை வெட்ட வேண்டும் என்ற கோரிக்கையை கேரளத் தரப்பு ஏற்காமலேயே இருந்துவந்த நிலையில், மரங்களை வெட்டுவதற்கு பினராயி விஜயன் அரசு அனுமதியை அளித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு நன்றி தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம் கேரள அரசியலில் புயலைக் கிளப்பியது. பினராயி விஜயன் அரசை எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. அதையடுத்து, மரங்களை வெட்டுவதற்கான அளிக்கப்பட்ட அனுமதியை கேரள அரசு ரத்துசெய்துவிட்டது. வனத்துறை அமைச்சரின் அனுமதியையோ, முதல்வரின் அனுமதியையோ பெறாமல் வனத்துறை அதிகாரிகள் அந்த அனுமதியை வழங்கிவிட்டதாக கேரள அரசுத் தரப்பில் சொல்லப்படுகிறது.
Also Read: 2015 Vs 2021... சென்னை பெருமழையும், திமுக, அதிமுக அரசுகளின் செயல்பாடுகளும்! - ஒரு பார்வை
இது குறித்து அமைச்சர் துரைமுருகன் கருத்து தெரிவித்துளளார். “கேரள மாநில வனத்துறை துணை இயக்குநர் ஏ.டி. சுனில் பாபு என்ற அலுவலர், முல்லைப் பெரியாறு அணையின் செயற்பொறியாளருக்கு 6.11.2021 அன்று ஒரு கடிதத்தை அனுப்புகிறார். அதில், பேபி அணையில் உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு தமிழ்நாட்டிற்கு அனுமதி வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள வனத்துறையின் முதன்மை வனப் பாதுகாவலர் பெஞ்சமின் தாமஸ் என்ற அலுவலர் இதற்கான உத்தரவை 5.11.2021-ல் வழங்கியுள்ளார். எந்தெந்த மரங்களை வெட்ட வேண்டும் என்று 15 மரங்களின் பெயர் பட்டியலையும் இணைத்துள்ளார். இந்த தகவலை தமிழக முதல்வரிடம் தெரிவித்தோம்.
அதற்குள், இது குறித்து எங்களுக்குத் தெரியாது என்று கேரள வனத்துறை அமைச்சர் கூறுகிறார். மாநிலங்களுக்கு இடையிலான ஒரு பிரச்னையில் அமைச்சருக்குத் தெரியாமல் ஒரு அதிகாரி பிற மாநிலத்திற்குக் கடிதம் எழுத முடியுமா? அமைச்சரின் ஒப்புதலோடுதான் அக்கடிதத்தை அனுப்பினோம் என்று கேரள வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக கேரள ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது. துரைமுருகன்
இது அந்த மாநில அரசு அலுவலர்களும் அமைச்சரும் இடையிலான விஷயம். அதில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஆனால், தமிழ்நாடு முதல்வர் நல்லெண்ணத்தின் அடிப்படையில்தான் கேரள முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இங்குள்ள சிலர் எதையெடுத்தாலும் அரசியல் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள்” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் கருத்து சரியானது. அமைச்சரின் அனுமதி இல்லாமல் அரசு அலுவலர் ஒருவர் கடிதம் எழுதியிருக்க வாய்ப்பே இல்லை. தற்போது கேரளா அமைச்சர் பல்டி அடித்ததற்கு அங்குள்ள அரசியல் அழுத்தமே காரணம் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்த நிலையில், தமிழக, கேரள முதல்வர்கள் சந்திப்பு அடுத்த மாதம் (டிசம்பர்) நடைபெறவிருக்கிறது.
http://dlvr.it/SCFSgy
Wednesday, 10 November 2021
Home »
» பேபி அணையின் மரங்களை வெட்ட அனுமதியும்... அனுமதி ரத்தும்! - கேரள அரசு செய்தது சரியா?