மகாராஷ்டிரா சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் நவாப் மாலிக்கும், முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். மாஃபியாக்களுடன் தொடர்பு இருப்பதாக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியிருக்கின்றனர். அமைச்சர் நவாப் மாலிக் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்களிடமிருந்து நிலத்தைக் குறைந்த விலைக்கு வாங்கியதாகத் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்திருக்கும் நவாப் மாலிக், ``வரும் புதன் கிழமை இதற்குப் பதிலளிக்கிறேன்.
மாஃபியா கும்பலுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதைத் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். புதன்கிழமை இதுதொடர்பாக ஹைட்ரஜன் வெடிகுண்டு போடுவேன்" என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி, இன்று செய்தியாளர்களைச் சந்தித்து நவாப் மாலிக் பேட்டியளித்தார். ``அப்பாவி மக்கள் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்யும் அதிகாரிக்கு எதிராகப் போராடுகிறேன். ஆனால் தேவேந்திர பட்னாவிஸ் இந்த பிரச்னையைத் திசை திருப்ப முயல்வதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரியைப் பாதுகாக்கவும் பார்க்கிறார். பணமதிப்பிழப்பு சம்பவத்துக்குப் பிறகு ஒரு ஆண்டு கழித்து, மும்பை பாந்த்ரா-குர்லா காம்ப்ளக்சில் ரூ.14.56 கோடி மதிப்பிலான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், ரூ.8.80 லட்சம் மதிப்பிலான நோட்டுகள் மட்டுமே கணக்கில் காட்டப்பட்டது. இதில் கைது செய்யப்பட்ட இம்ரான் ஆலம் ஷேக், ரியாஷ் ஷேக் ஆகியோர் எளிதில் ஜாமீனில் வெளியில் வந்தனர்.நவாப் மாலிக்
வழக்கு தேசிய புலனாய்வு ஏஜென்சியிடமும் ஒப்படைக்கப்படவில்லை. இம்ரான் ஷேக்கை தேவேந்திர பட்னாவிஸ் சிறுபான்மை கமிஷன் தலைவராக நியமித்தார். கள்ள நோட்டு மோசடியை மூடி மறைக்க பட்னாவிஸ் ஆட்சியில் முக்கிய பதவிகளில் கிரிமினல்கள் நியமிக்கப்பட்டனர். மகாராஷ்டிரா அரசியல் கிரிமினல் மயமானதற்குத் தேவேந்திர பட்னாவிஸ் தான் காரணம். பட்னாவிஸ்ஆட்சியில் குற்றச்செயல்கள் மூடி மறைக்கப்பட்டது. கிரிமினல் முன்னா யாதவ் என்பவரைத் தேவேந்திர பட்னாவிஸ், நாக்பூர் கட்டுமான வாரியத்தின் தலைவராக நியமித்தார். ஹைதர் ஆஸான் என்பவரும் சிறுபான்மை கமிஷனில் சேர்க்கப்பட்டார்.
தாவூத் இப்ராகிம் கூட்டாளி ரியாஸ் பதி என்பவருடன் தேவேந்திர பட்னாவிஸுக்கு தொடர்பு இருக்கிறது. பாஜக நிகழ்ச்சிகளில் ரியாஸ் பதியைத் தேவேந்திர பட்னாவிஸுடன் பார்த்திருக்கிறேன். பட்னாவிஸ் ஆட்சியில் போலி பாஸ்போர்ட்டில் கைது செய்யப்படுபவர்கள் ஓரிரு நாட்களில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இது எப்படி சாத்தியம். நான் தனி நபர்களுக்கு எதிராகப் போராடவில்லை. அநியாயத்திற்கு எதிராகப் போராடுகின்றேன். எனவே என்னுடைய குற்றச்சாட்டுகள் முழுமையாக விசாரிக்கப்படவேண்டும்" என்றார்.
அமைச்சர் நவாப் மாலிக்கின் குற்றச்சாட்டுக்கு தேவேந்திர பட்னாவிஸ் ட்விட்டரில் பதிலளித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், `பன்றியுடன் போராடக்கூடாது என்பதை நீண்ட நாள்களுக்கு முன்பே கற்றுக்கொண்டேன். பன்றிக்கு அது பிடித்திருந்தாலும், அதில் நீங்கள் அழுக்காகிவிடுவீர்கள்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Also Read: போதைப்பொருள் விவகாரம்; தேவேந்திர பட்னாவிஸ் Vs நவாப் மாலிக் - முற்றும் மோதல்
http://dlvr.it/SCFSgP
Wednesday, 10 November 2021
Home »
» `தாவூத் கூட்டாளியுடன் தொடர்பு... கள்ளநோட்டு விவகாரம்' - பட்னாவிஸ் மீது நவாப் மாலிக் குற்றச்சாட்டு!