ஆன்லைன் மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. நன்றாகப் படித்தவர்கள் கூட ஆன்லைன் மோசடிப்பேர்வழிகளின் பேச்சில் மயங்கிவிடுகின்றனர். அது போன்ற ஒரு மோசடிதான் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளிக்கும் நடந்திருக்கிறது. மும்பை பாந்த்ராவில் வசிக்கும் வினோத் காம்ப்ளியை மர்ம நபர் ஒருவர் போனில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அவர் தான் வினோத் காம்ப்ளி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் அதிகாரி என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டார். உங்கள் கே.ஒய்.சி (KYC) விவரங்களை புதுப்பிக்கவேண்டும் என்று கூறிய அந்த நபர், தான் அனுப்பும் லிங்க்கை கிளிக் செய்து விவரங்களை புதுப்பிக்கும் படி கேட்டுக்கொண்டார்.வினோத் காம்ப்ளி
வினோத் காம்ப்ளியும் வங்கி அதிகாரிதான் பேசுகிறார் என்று நினைத்துக்கொண்டு, மர்ம நபர் அனுப்பிய லிங்க்கை கிளிக் செய்தார். பின்னர், வினோத் காம்ப்ளி லிங்க்கை கிளிக் செய்த சிறிது நேரத்தில் அவரது வங்கிக்கணக்கிலிருந்து ரூ.1.14 லட்சம் எடுக்கப்பட்டுவிட்டதாக அவருக்கு குறுந்தகவல் வந்திருக்கிறது. அதையடுத்து, வினோத் இது குறித்து உடனே தன் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு தெரிவித்திருக்கிறார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், மேற்கொண்டு மோசடி நடக்காமல் தடுத்தனர். அதைத் தொடர்ந்து, வினோத் காம்ப்ளி சைபர் பிரிவு போலீஸில் உடனே புகார் செய்தார்.
இது குறித்து வினோத் காம்ப்ளி கூறுகையில், ``ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வருவது மிகவும் துரதிஷ்டவசமானது. என் பணம் திரும்ப கிடைத்துவிட்டது. ஆனால், இந்த ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்ட பலர் குற்றவாளி யார் என்பதையே கண்டுபிடிக்க முடியாமல் இருக்கின்றனர். போலீஸார் எனக்கு பணம் திரும்ப கிடைக்க முழு உதவி செய்தனர். ஆன்லைன் மோசடிகள் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்" என்றார்.ஆன்லைன் மோசடி
கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கரின் நண்பரான வினோத் காம்ப்ளி மட்டுமல்லாது, பல முக்கிய பிரமுகர்கள் ஆன்லைன் மோசடி பேர்வழிகளிடம் பணத்தை இழந்திருக்கின்றனர். முன் பின் தெரியாதவர்கள் கேட்கும்போது 'ஒ.டி.பி' எண்களை கொடுக்ககூடாது என்றும், லிங்குகைளை கிளிக் செய்யக்கூடாது என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், மர்ம நபர்கள் அனுப்பும் லிங்க்கோடு சேர்த்து போனை தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரும் ஆப்பையும் சேர்த்து அனுப்பிவிடுகின்றனர். அதன் மூலம் லிங்க் கிளிக் செய்யப்பட்டவுடன் போனை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து, அதிலிருக்கும் விவரங்களை கொண்டு பணத்தை எடுத்துவிடுகின்றனர் என்றனர்.
Also Read: டிஜிட்டல் திருட்டு: ஆன்லைன் ஆஃபரால் ₹89,000-ஐ இழந்த நபர்; என்ன நடந்தது?
http://dlvr.it/SF6SmP
Friday, 10 December 2021
Home »
» ``கே.ஒய்.சி அப்டேட் பண்ணனும் லிங்க்கை கிளிக் பண்ணுங்க!" - வினோத் காம்ப்ளியிடம் ரூ.1.14 லட்சம் மோசடி!