மும்பையில் 1990-களில் டான்ஸ் பீர் பார்கள் பிரபலமாக விளங்கியது. இந்த டான்ஸ் பார்கள் கிரிமினல்களின் கூடாரமாக விளங்கியது. இதையடுத்து மகாராஷ்டிரா அரசு டான்ஸ் பார்களுக்கு தடை விதித்தது. ஆனாலும் அத்தடையை மீறி மும்பையில் ஆங்காங்கே சட்டவிரோதமாக டான்ஸ் பார்கள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. தற்போது பீர் பார்களில் பெண்கள் சப்ளையர்களாகவும், பாடல் பாடுபவர்களாகவும் பணியாற்ற அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை பயன்படுத்தி பார் நிர்வாகம் பெண்களை டான்ஸ் ஆட வைக்கிறது. மும்பை அந்தேரியில் உள்ள தீபா பாரில் பெண்கள் சட்டவிரோதமாக நடனமாட வைக்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. ரகசிய அறை
உடனே இரவு 11.30 மணிக்கு போலீஸார் அந்த பாரில் அதிரடி ரெய்டு நடத்தினர். இந்த ரெய்டில் பெண்கள் யாரும் பாரில் இருந்ததாக தெரியவில்லை. ஆனால் போலீஸாருக்கு நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்திருந்தது. இதனால் பெண்களை மறைத்து வைக்க பயன்படும் சமையல் அறை, பாத்ரூம், பொருட்களை வைக்கும் ரூம், அலங்கார அறைகளில் சோதனை நடத்தினர். ஆனால் பெண்கள் யாரும் இல்லை. போலீஸார் பார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தியதில் பெண்கள் யாரும் இல்லை என்று தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தனர். ஆனாலும் போலீஸாருக்கு சந்தேகம் போகவில்லை.
விடிய விடிய விசாரணை நடத்தினர். காலையில் அலங்கார அறை உட்பட அனைத்து அறையிலும் மீண்டும் சோதனை நடத்தினர். இதில் அலங்கார அறையில் பிரம்மாண்ட கண்ணாடி ஒன்று இருந்தது. அதன் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அக்கண்ணாடியை அகற்ற முயன்ற போது முடியவில்லை. இதனால் கண்ணாடியை சுத்தியலால் போலீஸார் உடைத்தனர். உள்ளே மிகவும் சிறிய ஸ்விட்ச் ஒன்று இருந்தது. அதனை ஆன் செய்த போது சிறிய கதவு திறந்தது. உள்ளே மிகவும் சிறிய குகை போன்ற ஒரு அறை இருந்தது. அந்த அறைக்குள் இருந்து ஈசல் போன்று பெண்கள் ஒவ்வொருவராக வெளியில் வர ஆரம்பித்தனர். கைது
ரகசிய அறைக்கு செல்ல ரிமோட் கண்ட்ரோல் பயன்படுத்தி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ரிமோட் கண்ட்ரோல் யாரிடம் இருக்கிறது என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரகசிய அறையில் இருந்த 17 பெண்கள் மீட்கப்பட்டனர். அந்த ரகசிய அறையில் குளிர்சாதன வசதி, உணவு பொருட்கள், காற்றோட்ட வசதி, படுக்கை வசதி போன்றவை இருந்தது. 15 மணி நேரத்திற்கு பிறகு இப்பெண்கள் ரகசிய அறையில் இருந்து வெளியில் எடுக்கப்பட்டனர். பெண்களை உள்ளே அனுப்பினால் அவர்கள் பல மணி நேரம் எந்த வித பிரச்னையும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த வசதிகள் செய்யப்பட்டு இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர். பார் மேலாளர் உட்பட மொத்தம் 20 பேர் பிடிபட்டுள்ளனர். பாருக்கு சீல் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
http://dlvr.it/SFKcHq
Tuesday, 14 December 2021
Home »
» போலீஸாரின் கண்ணை உறுத்திய கண்ணாடி; ஏ.சி வசதியுடன் ரகசிய அறை! -பீர்பாரிலிருந்து 17 பெண்கள் மீட்பு