கேரள மாநிலம் இடுக்கி அருகே செருதோணி பகுதியில் முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் கேரள எம்.பி டீன் குரியாக்கோஸ் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். அணையை உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அமைப்பு நடத்தும் வழக்கறிஞர் ரசூல் ஜோய் தொடர்ச்சியாக அணைக்கு எதிராக விஷம பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அண்மையில் நடந்த நாடாளுமன்ற மேலவையில் கேரள எம்.பி வகாப், முல்லைப்பெரியாறு அணையை உடைக்க வேண்டும் எனப் பேசினார்.
இந்நிலையில், நேற்று முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக எர்ணாகுளம் முதல் கோதமங்கலம் வரை டூவீலர் பேரணி நடத்தினர். இவ்வாறு முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராக கேரள அரசியல்வாதிகளும் அமைப்புகளும் சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர். இருந்தபோதும் தமிழக விவசாயிகள் தொடர்ந்து அமைதி காத்து வந்தனர். இத்தகையைச் சூழலில், கடந்த இரண்டு நாள்களாக முல்லைப்பெரியாறு அணையைக் கட்டிய கர்னல் பென்னிகுயிக்கை அவமதித்து சமூக வலைதளங்களில் கேரளாவைச் சேர்ந்தவர்கள் அவதூறுகளைப் பரப்பிவருகின்றனர்.விவசாயிகள் போராட்டம்
Also Read: ``பென்னிகுவிக் மதுரை வீட்டில் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை!" - அடித்துச் சொல்லும் அரசு
இதையறிந்த ஐந்து மாவட்ட விவசாயிகள் தமிழக-கேரள எல்லைப் பகுதியை முற்றுகையிடப் போவதாகவும், இடுக்கி அணை நோக்கி டூவீலர் பேரணி மேற்கொள்ளப் போவதாகவும் அறிவித்தனர். இதற்கு போலீஸார் அனுமதி தரவில்லை. இருந்தபோதிலும் நேற்று காலை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயிகள் தனித்தனி வாகனங்களில் தமிழக-கேரள எல்லைப் பகுதியான லோயர்கேம்ப் பகுதிக்கு வந்தனர். பிறகு, அங்குள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் நினைவு இல்லத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர்.
பிறகு, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும் என்றும், கேரள அரசியல்வாதிகளை முல்லைப்பெரியாறு அணை பகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அணைக்கு எதிரான விஷம பிரசாரத்தில் ஈடுபடுவோரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், முல்லைப்பெரியாறு அணை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய கேரள எம்.பி-க்கள் டீன் குரியகோஸ், என்.கே.பிரேமசந்திரன், மேலவை உறுப்பினர் அல்போன்ஸ் கண்ணந்தானம், அப்துல் வகாப் ஆகியோரின் பேச்சுக்களை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் பேபி அணையைப் பலப்படுத்தும் பணிக்காக உச்ச நீதிமன்ற வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் அங்குள்ள 23 மரங்களை வெட்ட வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் போராட்டம் அறிவித்திருந்ததால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
அப்போது ஐந்து மாவட்ட பெரியாறு-வைகை பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், ``உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் பலமுறை முல்லைப்பெரியாறு அணை பலமாக உள்ளது எனக் கூறியும், கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகத் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அவர்கள் அங்கு டூவீலர் பேரணி நடத்தினர். ஆனால், தமிழக விவசாயிகள் தங்களின் நியாயமான கோரிக்கையை வெளிபடுத்துவதற்கு போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்படுகிறது. தமிழகத்தில் முல்லைப்பெரியாறு அணை கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் கடவுளாகப் போற்றப்படுகிறார். தென்தமிழகத்தில் அவருடைய படத்தை வைத்து விவசாயிகள் கடவுளாக வணங்குகின்றனர். இந்நிலையில், கேரளாவில் சமூகவலைதளங்களில் கர்னல் ஜான் பென்னிகுயிக் படத்தைப் பதிவிட்டு, பென்னிகுயிக் தமிழகத்துக்கு கடவுள், கேரளத்துக்கு வில்லன் என்றும் தரக்குறைவான வார்த்தைகளில் அவரை விமர்சித்தும் பதிவுகள் போடப்பட்டு இணையத்தில் பரப்புகின்றனர். இதைத் தமிழக விவசாயிகளால் ஏற்றுக்கொள்ள முடியாது. கேரளாவில் முல்லைப்பெரியாறு அணைக்காக நடந்துவரும் தவறான பிரசாரங்களைத் தடுக்க கேரள முதல்வரும் முன்வருவதாகத் தெரியவில்லை. அதேவேளையில் இதற்கெல்லாம் தமிழக அரசியல்வாதிகளிடம் இருந்து எவ்வித எதிர்வினையும் வரவில்லை. கேரளத்தில் முல்லைப்பெரியாறு அணையை இடிக்க வேண்டும் என அனைத்து அரசியல் கட்சியினர் ஒன்று சேர்ந்து போராடுகின்றனர். தமிழகத்தில் அணையைப் பாதுகாக்க அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்று சேர்ந்து குரல்கொடுக்க தயங்குகின்றனர்'' என்றார்.விவசாயிகள்
Also Read: முல்லைப்பெரியாறு அணை திறப்பு: முன்னறிவிப்பு இல்லையென்ற கேரள அரசின் குற்றச்சாட்டு உண்மையா?!
முன்னதாக, பென்னிகுயிக் இல்லத்தில் இருந்து திரும்பிய விவசாயிகளை போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து விவசாயிகள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது குமுளி சாலை சிறிது நேரம் அடைக்கப்பட்டது. இதனால் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள், பேருந்துகள், சரக்கு வாகனங்கள், சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் இருபுறமும் நிறுத்தப்பட்டன. இதையடுத்து போலீஸார் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து வாகனங்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
http://dlvr.it/SDvffN
Tuesday, 7 December 2021
Home »
» முல்லைப்பெரியாறு: ஜான் பென்னிகுயிக்கை இழிவுபடுத்தும் கேரளா; கொந்தளிக்கும் தமிழக விவசாயிகள்!