உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. பா.ஜ.க.விடம் இருந்து ஆட்சியைக் கைப்பற்றக் காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் பொதுச் செயலாளரும், அம்மாநிலப் பொறுப்பாளருமான பிரியங்கா காந்தி மிகத் தீவிரமாகச் செயல்பட்டுவருகிறார். சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் உத்தரப்பிரதேசத் தேர்தலை ஒட்டி பல்வேறு திட்டங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றன. “உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 சட்டசபைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும். அதற்குக் கட்சி தயாராகவே இருக்கிறது. உத்தரப்பிரதேசத் தேர்தல் பா.ஜ.க.வுக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சிதான் களத்தில் போராடுகிறது. எனவே, போட்டி நமக்கும் அவர்களுக்கும்தான்” என்பது தொடங்கி, பிரதமர் மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் என அனைத்து பா.ஜ.க தலைவர்களையும் அவர்களின் திட்டங்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்.பிரியங்கா காந்தி - யோகி ஆதித்யநாத்
எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேசத்தில் செயல்படுத்த உள்ள திட்டங்களையும் தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து வருகிறார். பிரியங்கா காந்தி. இவரின் தேர்தல் அறிக்கைகள் இந்தத் தேர்தலில் அவர்களுக்குப் பலனளிக்குமா? அதில் பிரியங்கா காந்தி தேறிவிட்டாரா என்பது பற்றி ஓர் அலசல்...
Also Read: பெண் வாக்காளர்களை ஈர்க்கும் பிரியங்கா காந்தி! - உ.பி-யில் காங்கிரஸ் கொடி பறக்குமா?!
சுயமரியாதை, தன்னம்பிக்கை, கல்வி, மரியாதை, பாதுகாப்பு, சுகாதாரம் ஆகிய ஆறு முக்கிய அம்சங்களைப் பெண்களுக்குப் பெற்றுத்தரும் வகையில் உத்தரப் பிரதேச மாநிலத்துக்கான தேர்தல் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி. இவற்றில் “பெண்களுக்கு 50 சதவிகித பணி வாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களுக்கு வரிச் சலுகைகள், 50 சதவிகித ரேஷன் கடைகள் பெண்களால் நடத்தப்படும், 4 சதவிகித வட்டியில் சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்களுக்குக் கடன், மாநிலப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், பெண்கள் பெயரில் உள்ள இணைப்புகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசம் எனப் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை மேம்படுத்தும் வகையில் முக்கிய அறிவிப்புகளும் இதில் அடங்கியுள்ளன.பிரியங்கா காந்தி பிரசாரம்
தேர்தலில் 40 சதவிகித இடங்கள் பெண்கள் போட்டியிடுவதற்காக ஒதுக்கப்படும், 12-ம் வகுப்பு முடித்த மாணவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்கள், பட்டம் முடித்த மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர் எனப் பெண்களைச் சுற்றியே பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருக்கிறார் பிரியங்கா காந்தி.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் மையங்கள் ஏற்படுத்தப்படும், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும், உத்தரப் பிரதேச அரசு ஆஷா சகோதரிகள் மீது நடத்தும் ஒவ்வொரு தாக்குதலும், அவர்கள் செய்த பணியை அவமதிக்கும் செயலாகும். எனது ஆஷா சகோதரிகள் கொரோனா வைரஸ் காலங்களிலும், பிற சந்தர்ப்பங்களிலும் தங்கள் சேவைகளை விடாமுயற்சியுடன் வழங்கியுள்ளனர். கவுரவம் அவர்களின் உரிமை. அவர்கள் சொல்வதைக் கேட்பது அரசின் கடமை. ஆஷா சகோதரிகளுக்கு உரிய மரியாதை வழங்க வேண்டும். ஆஷா சகோதரிகளின் கவுரவ உரிமை மற்றும் அவர்களின் மரியாதைக்குக் காங்கிரஸ் கட்சி உறுதி ஏற்கும். காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும், ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு மாதம் 10,000 ரூபாய் கவுரவ ஊதியமாக வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.பிரசாரத்தில் பிரியங்கா காந்தி
மேலும், “கரும்பு விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய 4,000 கோடி ரூபாய் இருந்தாலே போதும். ஆனால், மத்திய பா.ஜ.க அர்சு மோடியின் விமானத்துக்காக 8,000 கோடி ரூபாயும் நாடாளுமன்றத்தை அழகுபடுத்த 20,000 கோடி ரூபாயும் செலவிடுகிறார்கள்” என மத்திய, மாநில பா.ஜ.க அரசுகளின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் மக்களின் பிரச்னைகளோடு பொருத்திப் பேசி வருகிறார்.
பொதுக்கூட்டங்களில் பேசும் பிரியங்கா காந்தி “பெண்கள் அரசியலில் ஈடுபட வேண்டும். தங்களுக்கு எதிரான வன்முறைகள், ஒடுக்குமுறைகளை முறியடிக்கும் வகையில் அவர்கள் பலம் பெற வேண்டும். எங்களின் தேர்தல் அறிக்கையின் மூலம் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கு மற்ற அரசியல் கட்சியினரும் தள்ளப்படுவர். பெண்கள் மற்றும் வளர்ச்சி குறித்து இனி யார் என்ன அறிவிப்புகள் வெளியிட்டாலும் அவையெல்லாவற்றுக்கும் வித்திட்டது காங்கிரஸாகத்தான் இருக்கும்.” எனவும் பேசி வருகிறார். மற்றெந்த தேர்தலைவிட உத்தரப்பிரதேசத்தேர்தலில் இந்த முறை காங்கிரஸ் கட்சி கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இப்போது பல கட்ட பொதுக்கூட்டங்களை நடத்தித் தேர்தல் பரப்புரையில் ஈடுபடத் தொடங்கிவிட்டது. 1989-ல் நடந்த தேர்தலுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் உத்தரப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பெறவில்லை. இந்த சூழலில் அம்மாநில காங்கிரஸிற்குப் பிரியங்கா மூலம் புது ரத்தம் பாய்ச்சி, இழந்த செல்வாக்கை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது காங்கிரஸ்.காங்கிரஸ் தேர்தல் பிரசார கூட்டம்
உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் அளித்துள்ள வாக்குறுதிகள் எல்லாம் பெண்கள், இளைஞர்களை மையமிட்டு, மாநில வளர்ச்சியை நோக்கியதாக இருக்குமாறு வடிவமைத்துள்ளது. காங்கிரஸின் இந்த முயற்சிகளுக்கு எந்தளவுக்குப் பலன் இருந்தது என்பதைத் தேர்தல் முடிவுகள்தான் சொல்ல வேண்டும். உத்தரப்பிரதேசம் யாருக்கு என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்..!
http://dlvr.it/SF9Gvt
Saturday, 11 December 2021
Home »
» உத்தரப்பிரதேசம்: `பெண்கள், இளைஞர்கள் டார்கெட்’ - வாக்குறுதிகளில் கவனம் ஈர்க்கிறாரா பிரியங்கா காந்தி?