கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்று பத்மநாபபுரம் அரண்மனை. பத்மநாபபுரம் அரண்மனை சுமார் மூன்றரை ஏக்கர் நிலப்பரப்பில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. திருவிதாங்கூர் மன்னர்கள் பத்மநாபபுரத்தை தலைமையகமாகக் கொண்டு ஆட்சி செய்து வந்ததால், இந்த அரண்மனை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை புரிகின்றனர். அரண்மனையில் பழமையான மரவேலைப்பாடுகள், மன்னர் காலத்தில் கலைநயத்தோடு அமைக்கப்பட்ட விளக்குகள், மன்னர்கள் பயன்படுத்திய போர்வாள் என ஏராளமான புராதான பொருள்கள் இருக்கின்றன. வெளிநாட்டினர்கூட பத்மநாபபுரம் அரண்மனையை பார்வையிட்டு வருகின்றனர். பத்மநாபபுரம் அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. பத்மநாபபுரம் அரண்மனையை சுற்றி சுமார் 18,000 மீட்டர் நீளத்தில் கோட்டை சுற்றுசுவர் இருக்கிறது. இது 1744-ம் ஆண்டு மார்த்தாண்ட வர்மா மகாராஜா காலத்தில் கட்டப்பட்டது என்கிறார்கள்.உடைந்து விழுந்த பத்மநாபபுரம் கோட்டைச் சுவர்
சுமார் 20 அடி உயரம் கொண்ட கோட்டைச் சுவரின் கீழ் பகுதியில் நீளமான கற்களும், மேல் சுவர் கருங்கல்லாலும் கட்டப்பட்டிருக்கின்றன. கோட்டையின் முகப்பில் பெரிய வாசலும், அதை சுற்றி ஒன்பது சிறிய வாசல்களும் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோட்டைக்குள் நீலகண்ட சுவாமி கோயில், ராமர் கோயில், சரஸ்வதி கோயில் எனப் பல கோயில்களும், அரசுப் பள்ளிக்கூடம், வீடுகள் உள்ளிட்டவை இருக்கின்றன. யானைகளின் உதவியுடன் மனிதர்கள் கட்டிய இந்த கோட்டைச் சுவர் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. கேரள அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் அரண்மனை புதுப்பொலிவுடன் இருக்கும் நிலையில், தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் கோட்டைச் சுவர் பழைய கம்பீரத்தை இழந்து பரிதாபமாக காட்சியளிக்கிறது.
கோட்டைச் சுவரின் பல இடங்களில் மரங்களும், புதர்ச் செடிகளும் வளர்ந்து நிற்கின்றன. இந்த நிலையில், ஆர்.சி தெரு பகுதியில் சுமார் 200 அடி நீளத்துக்கு கோட்டைச் சுவர் கடந்த 5-ம் தேதிவாக்கில் இடிந்து விழுந்தது. இது அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. உடைந்து விழுந்த கோட்டைச் சுவரை சீரமைத்து மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.பத்மநாபபுரம் கோட்டை
இந்த நிலையில், கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் பத்மநாபபுரம் கோட்டையை பாதுகாக்க வேண்டும் என தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் கே.சுரேந்திரன் கூறியிருப்பதாவது, ``திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அங்கமாக இருந்த சமயத்தில் கட்டப்பட்டது பத்மநாபபுரம் கோட்டை. தமிழக அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் பத்மநாபபுரம் கோட்டை பாதுகாக்கப்பட வேண்டும். 275 வருடம் பழமையான பத்மநாபபுரம் கோட்டை திருவிதாங்கூர் ராணுவத்தின் தந்திரங்களுக்கு எடுத்துக்காட்டாகும். பத்மநாபபுரம் கோட்டை போன்ற பாரம்பரிய கட்டமைப்புகளை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்கவேண்டும்.
கோட்டையை பராமரிக்க தமிழக அரசு ஏற்படுத்திய பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகத் தெரியவருகிறது. பத்மநாபபுரம் கோட்டையுடன் கேரளாவுக்கு கலாசார ரீதியான, பண்பாட்டு ரீதியான பந்தம் உண்டு. பத்மநாதபுரம் கோட்டையை பாதுகாக்க தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.அமைச்சர் மனோ தங்கராஜ்
இதுகுறித்து பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ-வும், தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான மனோதங்கராஜிடம் பேசினோம், ``பத்மநாபபுரம் கோட்டைச் சுற்றுச்சுவரை பராமரிக்கும் பணி எந்த துறையின் கீழும் இல்லை. அதனால், உடைந்து விழுந்த பகுதியைச் சீரமைக்க எஸ்டிமேட் எடுக்கும்படி பொதுப்பணித்துறையிடம் கூறியிருந்தோம். அவர்கள் முப்பது லட்சம் ரூபாய் செலவாகும் என கூறினார்கள். இது பெரிய தொகை என்பதால் முதல்வரிடம் நிதி கேட்டிருக்கிறோம். மேலும் பத்மநாபபுரம் கோட்டைச் சுவரை பராமரிக்கும் பணியை ஒரு துறையின் கீழ் ஒதுக்கும்படியும் கலெக்டரிடம் கேட்டிருக்கிறோம். பழமை மாறாமல் பத்மநாபபுரம் அரண்மனை புதுப்பிக்கப்படும்" என்றார்.
http://dlvr.it/SFPqq8
Wednesday, 15 December 2021
Home »
» பத்பநாபபுரம்: இடிந்து விழுந்த அரண்மனை சுவர்; அழுத்தம் கொடுக்கும் கேரள பாஜக - சீரமைக்கப்படுமா?