நெல்லை மாவட்டம் ராதாபுரம் பகுதியில் அரசு அனுமதியுடன் கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு சில குவாரிகளில் விதிமுறைகளை மீறி கனிம வளம் வெட்டி எடுக்கப்படுவதுடன், அவை பக்கத்து மாநிலமான கேரளாவுக்குக் கடத்தப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது. கேரளாவில் மலைகளை வெட்டி கனிமவளங்களை எடுக்கத் தடை இருப்பதால் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன. ஊர் மக்கள்
நெல்லை மாவட்டம் ராதாபுரம், கூடங்குளம் பகுதிகளின் சுற்றுவட்டாரங்களில் செயல்படும் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விடவும் அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன.
கைவிடப்பட்ட குவாரிகளில் இருந்து அனுமதியின்றி முறைகேடாக கனிமங்களை எடுத்து விற்பதாகவும், அதற்காக அவர்கள் அதிக அளவிலான வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பல கிராமங்களில் வீடுகளில் வெடிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தும் உள்ளூர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகிறார்கள். குழந்தை பலியான வீடு
இந்த நிலையில், குவாரியில் வெடிவைத்தபோது அதில் இருந்து வெளிவந்த கல், அருகில் உள்ள சீலாத்திகுளம் கிராமத்தின் வீட்டில் விழுந்தது. அதனால் கூரை உடைந்து பச்சிளம் குழந்தை பலியானதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னரே உயரதிகாரிகள் இந்த விவகாரத்தில் தலையிடத் தொடங்கினார்கள்.
கனிமவளக் குவாரிகளில் நடக்கும் அத்துமீறல்கள் குறித்து அப்போது சேரன்மகாதேவி சப-கலெக்டராக இருந்த சிவ கிருஷ்ணமூர்த்தி அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது சில குவாரிகளில் அளவுக்கு அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. கனிம வளம் எடுக்கப்பட்ட குவாரி
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க பிரமுகர் ஒருவர் பினாமி பெயரில் நடத்திவரும் குவாரியில் 4,82,640 கன மீட்டர் அளவுக்கு கனிமங்கள் எடுக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை விட அதிகமாக 8,86,464 கனமீட்டர் அளவுக்கு கனிமம் வெட்டி எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
முறைகேடாக கனிமங்களை வெட்டி எடுத்த மூன்று குவாரிகளுக்கு சப்-கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி 25.72 கோடி அபராதம் விதித்தார். அவரது இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக அதிருப்தியடைந்த ஆளுங்கட்சிப் பிரமுகர்கள் உடனடியாக அவரை சென்னைக்கு பணியிட மாற்றம் செய்தார்கள்.
Also Read: `கொள்ளை போகும் கனிம வளம்; கேள்வி கேட்டால் மிரட்டுகிறார்கள்' - குவாரியால் கொதிக்கும் சிவகங்கை மக்கள்
லாரிகள் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கனிம வளம் கொண்டுசெல்ல அரசு அனுமதி பெற்ற நடைச்சீட்டு வைத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு முறை வாங்கும் நடைச்சீட்டின் எண்ணிலேயே பல சீட்டுகளை போலியாக அச்சிட்டு கனிமங்கள் கடத்தப்படுவதை மாவட்ட எஸ்.பியாக இருந்த மணிவண்ணன் கண்டுபிடித்து அத்தகைய வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்து அபராதம் விதித்தார்.
குவாரி விவகாரத்தில் அதிரடி காட்டிய சப்-கலெக்டர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஏற்கெனவே மாற்றப்பட்ட நிலையில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த மணிவண்ணனும் தற்போது சென்னையில் காவல்துறை பயிற்சிக் கல்லூரிக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்தப்பணியிட மாறுதல்களுக்கு, கனிம வளம் கடத்தும் அரசியல்வாதிகள் பின்னணியில் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாற்றப்பட்ட எஸ்.பி மணிவண்ணன்
Also Read: நெல்லை புவியியல் மற்றும் கனிம வளத்துறை அலுவலகத்தில் லஞ்சப் பரிமாற்றமா? - அதிகாரி விளக்கம்
அத்துடன், நேர்மையாகச் செயல்படும் நெல்லை மாவட்ட ஆட்சியரான விஷ்ணுவையும் மாற்ற தி.மு.க., பிரமுகர்கள் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பேச்சு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``எல்லா அதிகாரிகளும் அவரவர் வேலையைச் செய்கிறார்கள். பணியிட மாறுதல் என்பது நிர்வாக வசதிக்காகச் செய்யப்படுகிறது. அதைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை” என்று முடித்துக் கொண்டார்கள்.
http://dlvr.it/SDzKC0
Wednesday, 8 December 2021
Home »
» கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள்; அதிகாரிகள் மாற்றப்படும் அவலம்; என்ன நடக்கிறது நெல்லையில்?